ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன அதிகாலை உயிரிழந்தார்! திங்கள் இறுதிச்சடங்கு

364

 

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று அதிகாலை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார்.

தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த பின்னர் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தலையில் நான்கு மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது பின் தலையில், மூளைக்குள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இயந்திர உதவியுடனேயே அவர் சுவாசித்துக் கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

தாக்குதலில் படுகாயமடைந்த 43 வயதான பிரியந்த சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை 4.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2ம் இணைப்பு

பிரியந்த சிறிசேனவில் இறுதி சடங்கு திங்கள் இடம்பெறும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் (வயது 43) இறுதி சடங்கு எதிர்வரும் 30ம் திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறும்.

அவருடைய பூதவுடல், எத்துகல்பிட்டியவில் உள்ள அன்னாரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தனது நண்பரொருவரினால் கடந்த 26ம் திகதி, கோடாரி தாக்குதலுக்கு இலக்கான இவர், இன்று சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார். இவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

1972ம் ஆண்டு டிசெம்பர் 12ம் திகதி, பொலன்னறுவையில் பிறந்த இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இளைய சகோதரராவார்.

பொலன்னறுவை லக்ஷ உயன கனிஷ்ட வித்தியாலத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற இவர், கம்பஹா உடபில மகா வித்தியாலத்தில் சாதாரண தரம் வரையிலும், கம்பஹா கலஹிடியாவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் பொலன்னறுவை நொபாவௌ மகா வித்தியாலயம் ஆகியவற்றியில் உயர்தரம் பயின்றுள்ளார்.

பொலன்னறுவை ரஜரட்ட பில்டர்ஸ் மற்றும் சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட ஹால் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளராவார்.

வர்த்தகத்துறையில் பிரபலமாக பேசப்படும் ஒருவரான இவர், சமூக சேவையாளர் மட்டுமன்றி ஒரு கொடையாளியாவர்.

SHARE