ஊரடங்கானது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகி விடுகின்றது

413

நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகி விடுகின்றது என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

யாழில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

அவர் தெரிவிக்கையில், ஊரடங்கு சட்டம் குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் யாழ். மத்தியில் ஒன்று கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்ததது.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டத்தின் முக்கிய நோக்கமான மக்கள் கூட்டாக ஒன்று கூடுவதை தடுக்கும் செயன்முறை ஊரடங்கு தளர்த்தப்பட்ட சந்தர்ப்பங்களில் வலுவற்றதாகி விடுவதனை அவதானிக்க முடிந்தது.

அதாவது வைத்தியர்களால் இத்தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக முன்வைக்கப்படும் ஆலோசனைகளான தனிமைப்படுத்தல், கைகளை கழுவுதல், சுத்தமாக இருத்தல், இரு நபர்களுக்கிடையில் குறிப்பிட்ட இடைவெளியை பேணுதல் என்பன ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மீறப்படுகின்றன.

ஒன்று கூடும் மக்கள் வைத்திய ஆலோசனைகளைப் பொருட்படுத்தாது பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மாத்திரமே அவதானம் செலுத்துகின்றனர். இது ஊரடங்கின் நோக்கத்தை சீர்குலைத்து விடுகின்றது.

எனவே ஊரடங்கு தளர்த்தல் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளதுடன், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்திசெய்ய முடியும் என்பது தொடர்பாக புதிய முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் எல்லைப் பரப்பினுள் இலகுவாக மக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான முறைமைகளை ஏற்படுத்தி, நகர் பகுதியில் பலர் ஒன்று கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதை கணக்கிலெடுக்காது விடுவோமாக இருந்தால் மக்கள் ஒன்று கூடுவதன் மூலம் ஏற்படும் பாரிய சிக்கல் நிலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்.

எனவே இது தொடர்பாக மக்கள் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு துறையினரிடமும் இதுகுறித்து கலந்துரையாடி முடிவொன்று எடுக்கப்படவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE