யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வயதின் அடிப்படையில் ஓய்வுபெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேறு தொழில் தேடி இடைவிலகிச் சென்றவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன.
எனவே நாம் கட்டாயப்படுத்தவில்லை விரும்பியவர்கள் இணைந்து கொள்ள முடியும். இதற்காக காங்கேசன்துறையில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதன்போது மரவேலை, கைத்தொழில் முயற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பயிற்சி நிறைவில் வலுவான சான்றிதழும் வழங்கப்படும்.
அத்துடன் பயிற்சிக் காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன், குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் இராணுவ தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும்.
குறித்த பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பாதவர்கள் கடிதம் மூலம் அறிவித்து விட்டு விலகிச் செல்ல முடியும். இதற்கு எதுவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஆண்கள் 22 வருட நிறைவிலும், பெண்கள் 15 வருட நிறைவிலும் ஓய்வு பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.
எனினும் படை அதிகாரிகளை இணைப்பதற்கு மட்டும் வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
தொண்டர்களாக இணைந்து தங்களுடையதும், குடும்ப பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பினை இளைஞர், யுவதிகள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.