கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகை மிரட்டி வரும் நிலையில் சுமார் ஒரு இலட்சம் உயிர்களை காவு கொண்டது மட்டுமன்றி இப்பத்தி எழுதும் வரை சுமார் 17 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்த வகையில் இலங்கையில் 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று சீனாவில் விஸ்வரூபம் எடுத்த பொழுது இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கை அரசு துரித நடவடிக்கையில் இறங்கியது.
அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய முதலில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கினார். அதன் பின்னர் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமுல்படுத்தினார்;. கொரோனா ஒழிப்பு நடவடிக்கை செயலகம் உருவாக்கி அதற்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை நியமித்தார். அத்துடன் சுகாதாரத் துறையில் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்தார். மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது, விமானப் போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து வருபவர் தனிமைப்படுத்தல் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர். அதற்கு முப்படையினரையும் ஈடுபடுத்தினார். கொரோனா தொற்று அதிகமான மாவட்டங்களை முடக்கியதுடன் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அமுலில் உள்ளவாறு நடைமுறைப்படுத்தினார்.
இவ்வாறான நடவடிக்கைகள் இறுக்கமான முறையில் நடைமுறைப்படுத்தி வந்ததால் உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இலங்கை மிக குறைவாக உள்ளது. இவ்வாறான செயற்பாடு இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் மக்களுடைய அத்தியாவசியப் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் மிக காத்திரமான சில அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தார். பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகள் முற்றாக முடக்கப்படும் பட்சத்தில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும் பொருளாதாரத்தினை தாங்கி நிற்கும் சுற்றுலாத்துறை விமானப் போக்குவரத்து ஏற்றுமதி வர்த்தகம் ஆடைக் கைத்தொழில் என்பன முற்றாக முடக்கப்பட்ட நிலையிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் இவ்வாறான துணிகரமான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது சாதாரண விடயமல்ல.
குறிப்பிட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுதினமே அனைத்து அரச வங்கி தனியார் வங்கிகளில் கடன் பெற்றவர்களின் மீள் செலுத்தல் நடைமுறையை 6 மாத காலம் நிறுத்தி வைக்குமாறு சுற்று நிரூபம்; அனுப்பி வைக்கப்பட்டது, அத்துடன் அனைத்து வாகனங்களுக்கான லீசிங் நடைமுறையும் 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது, அது மட்டுமன்றி சமூர்த்தி பயனாளிகளுக்கு ரூபாய் 5000 கொடுப்பனவு அவர்கள் வீடுகளுக்கு சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டமை, சமூர்த்தி அற்றவர்களுக்கு நிவாரணங்கள் வழங்க முடிவு செய்தமை, மாதாந்த ஓய்வூதியம் பெறுபவர்களின் ஓய்வூதியங்களை மிகக் காத்திரமான முறையில் கிடைக்க செய்தமை, அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பளங்கள் எந்த பிரச்சனையும் இன்றி கிடைக்க செய்தமை, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள வேளையில் மீன்பிடித்துறை செயற்பட அனுமதி அளித்தமை, மின்சாரக் கட்டணங்கள் மற்றும் தொலைத் தொடர்பு கட்டணங்கள் என்பன அறவிடுவதை தற்காலிகமாக பிற்போடப்பட்டமை போன்ற பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்தும் அதனை கூட்டாமல் தேர்தலை வரும் மே மாதமளவில் வைப்பதற்கு ஜனாதிபதி கோத்தபாய முயற்சி எடுத்து வருவது தெரிகிறது.
இங்கு ஒரு விடயத்தை பார்ப்போமானால் இன்று உலக பொருளாதாரத்திலும் சரி சுகாதாரத்துறையிலும் சரி மிக முன்னணியில் உள்ள நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அல்லாடும் நிலையில் இலங்கை போன்ற நாடுகள் சுகாதாரத்துறையில் அபிவிருத்தியடைந்து காணப்பட்டாலும் பொருளாதாரத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய அரசு வெற்றிபெற்று பதவியேற்கும் நிலையில் மிகவும் நலிவுற்று காணப்பட்ட பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதாக கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். உண்மையில் கடந்த 5 ஆண்டு கால நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதாரத்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அபிவிருத்திகள் கூட பெரியளவில் இடம் பெறவில்லை என்பதான குற்றச்சாட்டும் உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் கோட்டபாய அவர்கள் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆடம்பரமற்ற பதவியேற்பு நிகழ்வு, ஆடம்பரமற்ற சுதந்திர நிகழ்வு மற்றும் வேலை அற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் விவசாயத்துறையையும் கைத்தொழில் துறையையும் ஒருங்கே மிக வேகமாக அபிவிருத்தி பாதையில் பயணிக்க நடவடிக்கை எடுத்து வந்ததுடன் பாராளுமன்ற தேர்தலையும் அறிவித்து காத்திருந்த வேளையில் தான் கொரோனா ஆட்டம் ஆரம்பித்தது. தற்பொழுது ஜனாதிபதி கோட்டபாய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கூறிய பொழுது அதை கூட்டாமல் தேர்தலை நடத்தி 2ஃ3 பெரும்பான்மை பெற்று விட வேண்டும் என்று முனைப்புடன் உள்ளார். அதற்கு அவர் கையில் இருக்கும் ஒரு துரும்புச்சீடடு இந்த கொரோனாவை வெற்றிகரமாக ஒழிக்கும் பட்சத்தில் அல்லது அதில் முழுமையாக வெற்றியடைந்தால் வரும் தேர்தலில் தான் மிக பெரும் வெற்றியை வெறலாம் என அவர் நினைக்கலாம். அவரது நினைப்பு சரியாகவும் இருக்கலாம். ஏனெனில் 2009 இல் உள் நாட்டு போரை வெற்றிகொண்டு அதன் மூலமாக அடுத்த தேர்தலிலும் அவரது அண்ணன் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அரியணை ஏறியது போல் இப்பொழுது கொரோனா என்னும் போரில் வெற்றி பெற்று பாராளுமன்ற தேர்தலில் 2ஃ3 பெற்றுவிட வேண்டும் என்று போராடி வருகின்றார். இந்நேரத்தில் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில் .இடம்பெற்ற சில அரசியல் தந்திரோபாயங்களை கூறலாம்.
முதலாவதாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முற்றுமுழுதாக முப்படைகளையும் அதற்கு பயன்படுத்தினர். மிகவும் ஆபத்தான செயற்பாடுகளை உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அதனை முப்படையினரிடம் கொடுக்கப்பட்டது. முப்படையினரும் மனம் நோகாதபடி ஒரு செயற்பாட்டை செய்தார் கோட்டபாய. யாழ் மிருசுவிலில் 8 அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட இராணுவச் சிப்பாயை தனது நிறைவேற்று அதிகார முறையை பயன்படுத்தி விடுதலை செய்து இராணுவத்தினரின் மனங்களை வென்றார். தற்பொழுதும் தனது பெரும்பான்மை இனமக்களின் வாக்குகளை குறிவைத்து தான் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்று வந்தது போல் இப்பொழுது நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி பெற முயல்கின்றார் என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்களின் மனங்களை வென்றால் தான் இம்முறை தேர்தலில் 2ஃ3 பெற முடியும். தான் சார்ந்த பெரும்பான்மை மக்களை சந்தோசப்படுத்தவோ அல்லது படையினரை சந்தோசப்படுத்துவதோ பௌத்த தேரர்களை சந்தோசப்படுத்துவதோ தேர்தலில் எதிர் விளைவுகளை கொண்டு வரலாம். இப்பொழுது கொரோனாத்தொற்றை மையமாக வைத்து தனது சாணக்கிய அரசியலை செய்வாராயின் அது மிகப்பெரிய முட்டாள் தனம் ஆகும்.
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வந்த தலைவர்கள் தங்கள் பெரும்பான்மை என்ற கர்வம் தலைக்கேறியமையால் சிறுபான்மை தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாமல் அது மிகப் பெரிய கோர யுத்தத்தை உருவாக்கி பல தமிழ் சிங்கள முஸ்லிம் உயிர்களை காவு கொண்டது. ஒட்டு மொத்த இலங்கையும் இதற்கு முகம் கொடுத்தது. ஒருவாறு யுத்தம் முடிவடைந்த பின்னர் வந்த நல்லாட்சி அரசும் தமிழ் மக்களை மிகவும் முட்டாளாக்கி சென்றது. தற்பொழுது ஆட்சி பீடமேறிய கோட்டபாய அவர்கள் தான் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆணையில் வெற்றி பெற்றேன் என்பதற்கமைய தனது செயற்பாடுகளை செய்து வருகின்றார். எதிர் வரும் பொதுத் தேர்தலில் 2ஃ3 பெரும்பான்மையை பெற்று இலங்கை துரித கதியில் அபிவிருத்தி பாதைக்கு இட்டு செல்ல வேண்டுமாயின் தமிழ் மக்களின் வாக்குகள் தேவைப்படும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற வேண்டுமாயின் தமிழ் மக்களின் மனங்களை முதலில் வெல்ல வேண்டும்.
கொரோனா தொற்றை வெற்றி கொண்டேன் தமிழ் மக்களுக்கும் பாகுபாடு இன்றி நிவாரணம் வழங்கினேன் பல சலுகைகளை வழங்கினேன் ஆகவே தமிழ் மக்கள் தனக்கு வாக்குகள் அளிப்பார்கள் என்பது தவறான கணிப்பாகும். தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய அற்ப சலுகைகளை விட காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தூக்கு தண்டனை உள்ளான இராணுவச் சிப்பாயை விட்டது போல தமிழ் அரசியல் கைதிகளில் சிலரையாவது விடுதலை செய்து தனது நல்லெண்ண செயற்பாட்டை காட்ட வேண்டும். கொரோனாத் தொற்றை காரணம் காட்டி நாடு முழுவதும் இராணுவ நிலையை பிரசன்னப்படுத்தி வரும் நிலையில் கொரோனா தாக்கம் முடிவடைந்ததன் பின்னர் வடகிழக்கில் தொடர்ந்தும் இராணுவ பிரசன்னம் தொடரும் என்ற அச்சம் தற்பொழுது வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு உருவாகியுள்ளது. அதனை முதலில் தெளிவுபடுத்த வெண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சரியான முடிவு ஒன்றை கொடுக்க வேண்டும். வடகிழக்கிற்கான அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் வேண்டும். பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் மாகாணசபை தேர்தலையும் நடாத்த வேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக தமிழ் மக்களின் மனங்களை ஓரளவேனும் வெல்ல முடியும். கொரோனா வைரஸை இலங்கையில் இருந்து முற்றாக துடைத்தொழிக்க ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் எவ்வாறு மிக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றாரோ அதே போல் சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பாராயின் வர இருக்கும் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மட்டுமல்ல சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளையும் பெறுவார் என்பதில் ஐயமில்லை.