மனிதநேயமற்ற செயற்பாடுகள் இந்த நாட்டில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று அடிக்கொருமுறை கூறினாலும் மனிதநேயமற்ற செயற்பாடுகளினால் இந்த நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று நோய் என்பது தனியே இலங்கைக்கு மட்டும் வந்திருந்தால் அதனை பல நாடுகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும், பல நாட்டு மக்களும் உதவி செய்திருப்பார்கள். மக்களுக்கு வறுமை நிலை தலைவிரித்து ஆடியிருக்காது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் வறுமையினால் ஒரு சாரார் இறந்து கொண்டிருக்க, நோயினால் ஒருசாரார் இறந்து கொண்டிருக்க, விரக்தியினால் ஒரு சாரார் இறந்துகொண்டிருக்க இவ்வாறாக எமது நாட்டின் இறப்பு வீதம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தற்பொழுது வரை 467 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறுவதில் முன் அரசாங்கம் தீவிரம் காட்டியது ஆனால் தற்பொழுது தொற்று கூடுதலாக இருப்பதை கூற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி தொற்று எண்ணிக்கையை குறைத்து மக்களை சிறிது நாட்களுக்குள் வெளியே செல்வதற்கு அனுமதித்ததன் விளைவு இன்று இலங்கை வாழ் மக்கள் அனைவரும் அனுபவிக்க தொடங்கி விட்டார்கள். கொரோனா தொற்றின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. வெலிசரை கடற்படை முகாமில் இதுவரை 75 பேர் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது. இவ் நிலை ஏன் உருவாகியது. ஆரம்பத்திலேயே இதற்கான கட்டுப்பாடுகளை மேற்கொண்டிருந்தால் இந்த இராணுவ வீரர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இராணுவ முகாமும் மூட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் மும்முரமாக செயற்பட்டார். ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினார். ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதனுடைய விளைவு மாவட்டங்களை விட்டு மாவட்டங்கள் செல்லக்கூடிய நிலைமை உருவானது,குறித்த கிராமங்களை விட்டு கிராமங்களுக்கு செல்லும் நிலை உருவானது. தொற்றுக்குள்ளானவர்கள் அல்லது ஏனையவர்கள் தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்தது தொடர்பில் மருத்துவர்களுக்கு இச் செய்தியினை மறைந்து வைத்ததன் விளைவே கொரோனா தொற்றின் அறுவடையாக உள்ளது. தேர்தலை வைக்க மும்முரமாக எடுக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியிலே தற்பொழுது முடிவடைந்துள்ளது. பெரும்பான்மை சிங்கள சமூகத்தில் இந்த தொற்று அதிகரித்ததன் விளைவு தான் தற்பொழுது இந்த தேர்தலை இடை நிறுத்துவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தென்னிலங்கையில் அதிகரித்ததன் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். தேர்தல் முக்கியமில்லை மக்களின் எதிர்காலமே எமக்கு முக்கியம் என்றும் அவர் கூறியிருந்தார். தாம் எப்படியாவது தேர்தலிலே வெற்றி பெறுவோம் என்ற கருத்தினையும் அதனோடு கூடுதலாக கூறியுள்ளார். முடிந்த வரை கொரோனா தொற்று இருக்கும் பொழுதே தேர்தலுக்கான நடவடிக்கைகளையும் முடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை கையாளுகின்றது.
இவ் விவகாரம் தோல்வியில் முடிவடையவே கொரோனா தொற்று அதிகரித்து விட்டது தற்போதைய காலகட்டத்தில் தேர்தலை வைத்தால் அது பாரதூரமான விளைவுகளை சந்திக்கும் என்ற காரணத்தினால் சுத்துமாத்து பேச்சுக்களை பேசுவது அரசியல்வாதிகளுக்கு புதிதான விடயமல்ல. அதனடிப்படையில் தேர்தல் தற்பொழுது அவசியமில்லை என்று பகீரங்கமாகவே பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்தல் விடுத்துள்ளார். இது உண்மையிலே வரவேற்கத்தக்க விடயமாகும். ஆகவே மற்ற பக்கத்தில் பார்க்கும் பொழுது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் என்ன விடயங்களை கையாண்டு கொண்டிருக்கின்றார் என்று பார்க்கும் பொழுது தொற்றுக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முகாம்களை உருவாக்கியுள்ளார், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள், ஊடகவியலாளர்கள், அத்தியவசிய பொருட்கள் விற்பனையாளர்கள், அத்தியவசிய பொருட்களை வழங்குனர்கள் அனைவரையும் சுயாதீனமாக செயற்பட அனுமதித்துள்ளார் இது உண்மையில் பாராட்டத்தக்க விடயம். ஆனாலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் எல்லாம் எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்பதே.
இதில் அரசனை நம்பி புருசனை கைவிடும் நிலைமை ஒன்றுமில்லை. இது உலகளாவிய ரீதியில் பரப்பப்பட்ட ஒரு வைரஸ் நோய் தற்பொழுது வரை 2 இலட்சத்தையும் தாண்டி உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளது. 28 இலட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். 5 இலட்சத்திற்கும் குறைவானவர்களே இதில் குணமடைந்து வீடு சென்றுள்ளார்கள். குணமடைந்து வீடு சென்றவர்களுக்கு மீண்டும் தொற்று உண்டாகலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஒருசில முடிவுகள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகளாக அமைந்த போதும் இந்த நாட்டில் சர்வதிகார ஆட்சி ஒன்றினையே கோட்டபாய ராஜபக்ச அவர்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இராணுவம் பொலிஸ் இவர்களைக் கொண்டே ஒரு கட்டுப்பாடான நிலைமையை இந்த நாட்டில் உருவாக்க முடியும். இல்லையேல் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே பொலிஸ், இராணுவத்தை பயன்படுத்துவது தவறில்லை. இலங்கையின் கடற்படை என்பது மிக முக்கியமானதொன்று. இந்த கடற்படையினருக்கே இத் தொற்று உருவாகியுள்ளது என்பது சந்தேகத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் கடற்கப்பல் ஒன்றில் பணிபுரிந்த 4800 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது என்பது அறிந்த விடயமே. தற்பொழுது சீன நாட்டின் உதவிக்கு கையேந்தும் அளவிற்கு இலங்கை பொருளாதார ரீதியிலும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் சீனாவிலிருந்து உருவாக்கப்பட்டதே இந்த கொரோனா தொற்றுக்கு முக்கிய காரணமாக அமையப்பெற்றுள்ளது. மீண்டும் சீனாவோடு கைகோர்ப்பதை இலங்கை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதே பெரும் ஆபத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம். சமூக வன்முறைகள் ஏராளமாக ஆரம்பித்துக்கொண்டே செல்கின்றன, வறுமைகள் ஒருபக்கம் ஊசலாடுகின்றன, தற்கொலைகள் இடம்பெறுகின்றன, மன,உள ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வை உருவாக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதாக இருந்தால் அவர் மக்கள் மத்தியில் மனிதாபிமானமுள்ள ஒரு தலைவராக பார்க்க முடியும். தமது சுயநல அரசியலுக்காக மட்டும் ஒரு சில விடயங்களை பயன்படுத்திவிட்டு பின்னர் மக்கள் மத்தியில் வந்து நான் சர்வதிகாரியா என மக்கிளிடம் கேள்வி கேட்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று. ஒரு தலைவன் என்றால் அந்த நாட்டு மக்களை சீராக கொண்டு செல்வதுடன் அந்த மக்களுக்கு வருகின்ற நன்மை மற்றும் தீமைகளிலும் பங்கெடுக்க வேண்டும், அவனே ஒரு சிறந்த தலைவன்.
கதைகளுக்காக ஆசைப்பட்டு மக்களின் உயிர்களை ஒரு பொருட்டாக எண்ணாது தமது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு செல்லும் போது குறிப்பாக இப்படிப்பட்டவர்களை ஒரு சிறந்த தலைவர் என்று எவறும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மிக விரைவாக இலங்கையின் நாளாப்புறமும் தொற்றுக்குள்ளானவர்களை பரிசோதிக்கும் பரிசோதனைக் கூடங்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்குவதன் ஊடாகவே கொரோனா வைரஸின் தாக்கங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இதற்காக பொது அமைப்பினுடைய உதவிகளையும் பெற்றுசெயற்படுகின்ற பொழுது குறித்த ஓரிரு மாதங்களுக்குள் கொரோனா வைரஸைக் கட்டுப்hட்டுக்குள் கொண்டுவர முடியும். தற்பொழுது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிலை ஒன்று வைரஸை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது பாராளுமன்றத்தை கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்து மக்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தேர்தல் வைப்பதென்பது சாத்தியமற்றதொன்று. கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஒரு அறைக்குள் இருந்து சிந்திக்கின்றாரோ இல்லையோ இந்த வாரத்திற்குள் முடிவுகள் சரியாக எட்டப்பட வேண்டும். இல்லையேல் அவர் எதிர்பார்த்த ஜனாதிபதி கனவும் தவிடுபொடியாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.