தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் தமிழினத்தை எங்கே கொண்டு செல்லப்போகின்றது?

470

காலத்திற்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது வழமை. அந்த அடிப்படையில் கடந்த காலங்களை பார்க்கும் பொழுது போர் உச்சகட்டத்தை நெருங்கிய நிலையில் இயற்கைத்தாக்கமான சுனாமி அனர்த்தம் மக்களை வெகுவாரியாக பாதித்தது. இதன் போது சுனாமி கட்டமைப்பு ஒன்று நிறுவப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்தே அரசாங்கம் அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியது. அதன் பின் படிப்படியாக ஆங்காங்கே தமிழ் நிலப்பிரதேசங்களில் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்றது.

அதன் பின்னர் மக்கள் ஓரளவேனும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஏழு ஆண்டுகள் பிடித்தது. இன்னும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், நில ஆக்கிரமிப்புக்கள் என்பன இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான வடகிழக்கு இணைந்த தாயகத்தை மீட்கும் பொருட்டு அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகளின் விடுதலை, வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும். தேசியம், சுயநிர்ணய உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற தூர நோக்கோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் மக்களாலும் அரசியல் கலைஞர்களாலும் ஏராளம் முன்வைக்கப்படுகின்றன. ஆகவே த தே கூ மக்களுக்கான சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதை எடுத்துக்கொள்வதா? இருந்த போதும் த தே கூ ஆனது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமானது தலைவரான பிரபாகரனால் ஊடகவியலாளர் சிவராமின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. அதனது தொடர்ச்சியாக த தே கூ க்கே வடகிழக்கில் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து வெற்றி பெற செய்தனர். இதனால் இவர்கள் 16 ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவும் இருந்து வெளியேறினார்கள் இதுவொரு வரலாறு.

இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக த தே கூ உள்ளுராட்சி, மாகாணசபை தேர்தல், பொதுத் தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவன் வி. ஆனந்த சங்கரி, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் என்னும் புதிதாக முளைத்த அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழ் தே கூ ப்பின் தலைமைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் அனைவரும் த தே கூ இருந்து பிரிந்து வந்தவர்கள். அதில் இருந்த காலத்தில் எதையும் சாதிக்க வில்லை. இவர்கள் அனைவரும் அப்பொழுது த தே கூ ப்பில் பதவிகளில் இருந்தவர்கள். தற்பொழுது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு என்பது போல் இவர்களின் நடவடிக்கை அமைகிறது. கூட்டமைப்பு தவறு செய்கிறது என்றால் அதன் தலைமைகளை மாற்றியமைப்பதன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். தங்களுக்கு சாதகமான நிலைமைகளை எட்டவேண்டும் என்பதற்காக ஒரு காலத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செற்பட்ட குரோத கும்பல்கள் தற்பொழுது த தே கூ ப்பிற்கு சேறு பூசும் செயற்பாடாகவே அமைகிறது.

கடந்த வாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொழும்பில் வைத்து சந்தித்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விலை போய் விட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் பங்கேற்கவில்லை. ஆக மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்தவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக முன்னாள் வடமாகாணசபையினுடைய மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். இவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிந்து சென்ற கட்சிகள் ஒவ்வொன்றும் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியிருந்தது. முதலாவது தமிழ் மக்கள் பேரவை, அடுத்து எழுக தமிழ் என்பதனை உருவாக்கியது, அடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணையும் ஒரு நிலைப்பாட்டை உருவாக்கியது. அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. காரணம் த தே கூ க்கு எதிராக உருவாக்கப்பட்ட மாற்றுக்கட்சிகள் ஒவ்வொன்றும் அதன் தலைமைகள் சரியான முறையில் உருவாக்கப்படவில்லை என்பதே ஆகும். இன்றும் கூட இக்கட்சிகளால் ஒரு சரியான தலைமையை உருவாக்கமுடியாமல் போயுள்ளது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்பொழுது உலகம் எல்லாம் கொரோனா வைரஸினுடைய தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பல நாடுகளும் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் மக்களிடையே சுகாதாரத்தை பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டுமே ஆலோசணைகள் வழங்கப்படுகிறதே தவிர கொரோனாவை கட்டுப்படுத்தும் மருத்துவ வில்லைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையை பொறுத்தவரையில் ஓரளவேனும் மரணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்குமான சந்திப்பு ஒன்றுக்காக பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதில் கூட்டமைப்பு பங்கு பற்றியது என்பது தவறு என்று மக்கள் மத்தியில் காண்பிக்க முட்படுபவர்கள் தாம் சரியான பாதையில் பயணிக்கின்றார்களா என்பது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். வெறுமனே தேசியம் சுயநிர்ணயம் என்று மட்டும் பேசிவிட்டால் போதாது. அதனை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. தற்போதைய காலகட்டத்தின் தேவை வைரஸை கட்டுப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்பி பொருளாதார வளர்ச்சியை இலங்கையில் கட்டியெழுப்புவதே ஆகும். இதனை விடுத்து விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு செல்வது வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய இன குரோதத்தை ஏற்படுத்தும். சுவர் இருந்தால் மாத்திரமே சித்திரம் வரையமுடியும் என்ற அடிப்படையில் எமது இருப்பினை முதலில் உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்தகட்ட நகர்வுகளை அரசியல் ரீதியாக முன்னெடுப்பதே சிறந்தது. தேர்தல் அரசியலை இதனூடாக முன்னெடுக்க விரும்புகின்ற அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களினுடைய நலனில் அக்கறை அற்றவர்களாகவே கருத வேண்டும். கொரோனாவிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி அதனை முற்றாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது இதனை குழப்புகின்ற செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது ஒன்று. விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் கூட சுனாமி கட்டமைப்பு ஒன்றை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுத்தினார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இன்றைய காலத்தின் தேவை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தான். இதனை உருவாக்கிய அல்லது பரப்பிவிட்ட சீன நாட்டிற்கு எதிராக இந்த அரசியல் கட்சிகளும் சரி, நாட்டின் தலைவர்களும் சரி குரல் கொடுக்கின்றார்களா? இல்லை. நிச்சயமாக விடுதலைப்புலிகளின் கட்டமைப்பு தற்பொழுது இயங்கிக்கொண்டு இருக்குமாக இருந்தால் சீன நாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டிருக்கும். உலக வரைபடத்தில் சீனா என்ற ஒரு நிலைமையை இல்லாமல் ஆக்கியிருக்கும். மொத்தத்தில் அனைத்து நாடுகளும், அனைத்து தரப்பு கட்சிகளும் ஒன்றிணைந்து கொடிய வைரஸை பரப்பிய சீன நாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதே காலத்தின் தேவைகளில் ஒன்று. பொருளாதாரம் முடங்கிப்போயுள்ள நிலையில் அதனை கட்டியெழுப்புகின்ற தேவை நாட்டிலுள்ள அனைவருக்கும் உரித்தானது. இதற்குள் அரசியல் என்பது திணிக்கப்படக்கூடாது. பாராளுமன்றத்தை கூட்டுவதோ அல்லது தேர்தலை நடத்துவதோ என்பது இங்கு பிரச்சனையல்ல சுகாதார அதிகாரிகளின் வழிநடத்தலின் கீழ் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானதாகும். ஆகவே த தே கூ தமிழ் மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்கின்றது என்ற விமர்சனங்கள் பொருந்துமா என்பதை மேற் குறிப்பிட்ட கட்சிகள் தங்களின் விமர்சனங்களை மீள் பரிசோதனை செய்து கொள்வது முக்கிமானது.

SHARE