முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட வேண்டியதன் அவசியம்

525

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் பெரும்பான்மை சிறுபான்மை என்னும் பேத வர்க்கம் விஸ்வரூபம் எடுத்தது. அது 1958, 1968 என கலவர புயலாக இலங்கையை தாக்கியது. 1970 களில் பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு தமிழ் மாணவர்கள் அதற்கு எதிராக சாத்வீக போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசு அதனை இராணுவத்தை கொண்டு அடக்க முற்பட்ட பொழுது அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் உருவான பொழுதிலும் விடுதலை புலிகள் அமைப்பு இறுதி வரை போராடியது. சுமார் 3 வருடகால கோர யுத்தத்தில் பல உயிர்கள் அழிந்தன, பல சொத்துக்கள் அழிக்கப்பட்டன, பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இருந்த பொழுதிலும் சுமார் 28 வருடங்களாக வடகிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர். ஒரு சிறு அரசாங்கம் போல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தது. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஜே.ஆர். ஜெயவரத்தன தொடக்கம் 5 ஜனாதிபதிகள் முயற்சித்தனர். எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மக்களின் உயிரிழப்புக்கள் தான் அதிகரித்து சென்றது. இக்காலகட்டங்களில் இந்திய இராணுவமும் இலங்கைக்கு வந்து விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரிந்து இறுதியில் புலிகளை அழிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி சென்ற அவல நிலையும் காணப்பட்டது. உலகில் மிகவும் பயங்கர அமைப்பாக விடுதலைப்புலிகள் காணப்பட்டனர்.

தரைப்படை, கடற்படை, வான்படை, தற்கொலைப்படை என அவர்கள் வசம் இருந்தன. உலகில் மிக ஆபத்தான தற்கொலைப்படை தன்னகத்தே கொண்டு இருந்தாலும் உலகில் உள்ள ஏனைய போராட்ட அமைப்புகளுடன் ஒப்பிடும் பொழுது கண்ணிமானதும் ஒழுக்க கட்டமைப்புடனும் அந்த இயக்கம் காணப்பட்டது. இருந்த பொழுதிலும் தமிழீழக் கொள்கைக்கு எதிராக செயற்பட்ட அரச தலைவர்கள் தமிழ் மிதவாதிகள் என பலர் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர் என்பதையும் இவ்விடயத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமாகின்றது. இந்நேரத்தில் உலக வல்லரசு கட்டமைப்புகளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா இராணுவ தலைமையகம் தலிபான் தீவிரவாதிகளால் தற்கொலை தாக்குதல் மூலம் அழிக்கப்படுகின்றன. இதனை அடுத்து அமெரிக்கா உட்பட 28 நாடுகள் சகல விடுதலைப்போராட்ட அமைப்புக்களையும் தடை செய்வதாக அறிவித்தது. அதில் விடுதலைப் புலிகள் அமைப்பு அடங்குகின்றது. அச்சமயத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தில் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச அவர்கள் பதவி ஏற்கின்றார். விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ளும் முரண்பாடுகள் தோன்றின. விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட விசேட தளபதி கருணாஅம்மான் என்னும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சில போராளிகளுடன் பிரிந்து செல்கின்றார்.

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சுகவீனம் காரணமாக மரணிக்க அரசியல் பிரிவு தலைவராக தமிழ் செல்வன் அவர்கள் நியமிக்கப்படுகின்றார். அவரும் விமான குண்டு விச்சால் மரணமடைய விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியான பால்ராஜ் அவர்களும் சுகவீனம் காரணமாக மரணமடைய 3ஆம் கட்ட ஈழப்போரும் உக்கிரமடைகின்றது. பல உலக நாடுகளின் ஒத்துழைப்புடனும் இலங்கை முப்படைகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னி பெரு நிலப்பரப்பில் கோர யுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் ஆயுதங்களையும் நவீன ராடர்களையும் வழங்கி ஆதரவளித்தனர். மன்னார் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்த யுத்தம் கிளிநொச்சியை தாண்டி சென்றது. விமான குண்டு வீச்சுகளும் பல்குழல் எறிகணைகளும், கொத்துக்குண்டுகளும் என மிக கோர யுத்தம் இடம் பெற்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வசித்த மக்கள் உட்பட சுமார் 4 இலட்சம் மக்கள் குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டன. முப்படைகளின் தாக்குதலை தடுக்க முடியாமல் விடுதலைப் புலிகள் பின்வாங்கி சென்று கொண்டு இருந்தனர். மிலேச்சத்தனமான அரசின் குண்டு வீச்சு, கொத்துக்குண்டு, பல்குழல், பீரங்கி தாக்குதல்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிந்த துயரம் ஒருபுறம் உணவு இன்றி காயப்பட்ட மக்களுக்கு மருந்து வசதி இன்றி ஒரு பெரிய மனிதப் பேரவலம் வன்னியில் இடம்பெற்றுக்கொண்டு இருந்து மழை வெள்ளமும் மக்களை வாட்டியது. உலக நாடுகள் தங்களை காப்பாற்றும் என மக்களும் புலிகளும் நம்பினார்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் பல போராட்டங்கள் இடம்பெற்றன. எமது உறவினர்களின் உயிரிழப்புக்களை கண்டித்து போரை உடனடியாக நிறுத்துமாறு கோரி தமிழ் நாட்டில் வசிக்கும் 3 தியாகிகள் தீக்குளித்து போராடி உயிர் விட்டனர்.

ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. வன்னியில் உடல்கள் சிதறின. பிஞ்சு மழலைகள் துண்டாகி போயினர், தாய் காயப்பட்டு கிடக்க காப்பாற்ற முடியாமல் கையேறு நிலையில் விட்டு சென்ற மகள், மனைவி காயப்பட்டு குற்றுயிராகக் கிடக்க விட்டு ஏக்கத்துடன் சென்ற கணவன், தன் கண்முன்னே குழந்தை குண்டு வீச்சால் துடித்து சாவதை நேரில் பார்த்த தந்தை இவ்வாறு துயரம் அரங்கேறிக் கொண்டு இருந்தது. உலக நாடுகள் தங்களை காப்பாற்றும் என இறுதிவரை எதிர் பார்த்திருந்த அப்பாவி மக்களுக்கு இறுதியில் அழிவே மிஞ்சியது. குறுகிய இடத்திற்குள் யுத்தம் வந்துவிட்டது மிகக் குறுகிய இடத்தில் 3 இலட்சம் மக்கள் பாதுகாப்பு தேடி அடைந்த நேரத்தில் அரச படைகளின் கோர தாக்குதலால் கொத்து கொத்தாக மக்கள் இறந்து போயினர். முள்ளிவாய்க்கால் மண்ணிலும் நந்திக்கடல் எல்லையிலும் இறுதி யுத்தம் இடம்பெற்று முடிந்தது. மழை வெள்ளத்திலும் குண்டு வீச்சு சத்தங்களுடனும் பல்குழல் சத்தங்களுடனும் இராணுவ துப்பாக்கி வேட்டுகளுடன் புலிகளின் துப்பாக்கி வேட்டுகளுடன் அந்த மண்ணில் மக்களின் மரண ஓலங்கள் அடங்கிப் போனது.சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை அவர்கள் தெரிவித்து இருந்தார். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனர்களாகினர், பல பிஞ்சு மழலைகள் கொல்லப்பட்டதாக உலக சிறுவர் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. இதனை விட வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிஸ்தர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டும் பல பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐ.நா மனித உரிமை செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கத்தோலிக்க பங்கு தந்தையர்கள் பொதுமக்கள் என சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியாமல் உள்ளது.

இன்று 11 ஆம் ஆண்டை நோக்கி அதன் நினைவுகள் நடக்க இருக்கின்றது. எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இவ்வருடமும் இடம்பெறும் என அதன் ஏற்பாட்டாளர் அறிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக அவலப்பட்டுவரும் நிலையிலும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக இடைவெளியை பயன்படுத்தி இறுதி யுத்தத்தில் பலியான எமது உறவுகளையும் மண்ணுக்காகவும் போராடி உயிர்நீத்த உறவுகளை நெஞ்சில் சுமந்த வண்ணம் அஞ்சலி செலுத்துவது எமது கடமையாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் இறுதிக்குரல் அடக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தமிழ் மக்களின் தார்மீக பொறுப்பாகும். இரத்தமும் சதையுமாக கந்தக வெடி மணத்துடன் மண்ணில் உரமாகிப்போன எம் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வணங்கி நிற்கும் இவ்வேளையில் அரசும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை விசாலமாக அமைத்து தமிழ் மக்கள் அனைவரும் தொடர்ந்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை அனுமதிப்பதோடு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு சரியான நீதியை வழங்க வேண்டும் என்பது வடகிழக்கு தமிழ் மக்களின் இதயபூர்வ கோரிக்கையாகும். அரசு இதனை செயற்படுத்தும் என நம்பி இருப்போமாக.

SHARE