தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்கும் அதிகாரம் கொண்ட தமிழ் அரசியல் குழு உருவாக்கப்பட வேண்டும் – இல்லையேல் ஆபத்து

542

பழைய புராணத்தையே தொடர்ந்தும் நாம் வாசித்துக்கொண்டிருக்க முடியாது. மூலோபாயம் தந்திரோபாயம் என்பவற்றை பயன்படுத்தி நமக்கான தீர்வு திட்டங்களை சிறந்த கொள்கை வகுப்போடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குள் நான் நீ என்ற போட்டிகள் உருவானாலும் பொறாமை உருவாகக்கூடாது. தற்பொழுது ஆயுதம் ஏந்தி தமிழினம் போராடக்கூடிய சூழ்நிலை இல்லை. அதற்கு வீற்றோ பவர் கொண்ட ஒரு நாடு உதவி செய்யுமாக இருந்தால் இவ் விவகாரம் தொடர்பில் சற்று யோசிக்கலாம். தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம் மலுங்கடிக்கப்பட்டுவிட்டது இனி விடுதலைப்புலிகளின் உருவாக்கம் என்பது சாத்தியமற்றது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கலாம். ஆனால் வெளிநாடுகளில் அரசியல் ரீதியான செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரசியல் ரீதியான நடவடிக்கையோடு ஈழ தமிழர்களும் கை கோர்க்கும் பொழுது பாரியளவில் அதற்கான வெற்றியை கண்டுகொள்ள முடியும். குறிப்பாக அரசியல் தலைமைகள் தற்பொழுது இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை சுருக்கமாக பார்க்கும் பொழுது இவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு கவிதையை உங்களுக்கு தருகிறேன். இதில் பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். இவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அல்ல இவர்களுக்கு இருக்கக்கூடிய திறமைகள் பயன்படுத்தப்படாது அரசாங்கத்தின் சதி வலைக்குள் தெடர்ந்தும் சிக்க வைக்கப்படுகிறது. சம்மந்தன் ஐயா தொடக்கம் மாவை சேனாதிராஜா வரை அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட தலைமைகளினுடைய அன்றிலிருந்து இன்றுவரையான நிலைப்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.

தமிழனுக்கு தீர்வு தான் எப்போ?

தை பிறந்தால் வழி பிறக்கும் – இது
சம்மந்தன் ஐயாவின் அருள்வாக்கு

மாவை சேனாதி தான் கூட்டணியை
உடைத்த துரோகி – இது
ஆனந்தசங்கரியின் புராணம்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு
கடந்த பத்தாண்டு என்ன செய்தது
அரசாங்கத்திற்கு சோரம் போனது
தான் மிச்சம் தேசியப்பட்டியல்
கிடைக்காததன் வெளிப்பாடு
சுரேஸ் பிரேமச்சந்திரனின்
உள்ளக்குமுறல்

கூட்டமைப்பு சரியான பாதையில்
பயணிக்காவிட்டாலும்
தமிழ் மக்களுக்கான தீர்வில்
நாம் கூட்டமைப்புடன் இணைந்து
பயணிக்கவேண்டியது – நாம்
போராட்டம் இயக்கம் என்றவகையில்
எமது கடப்பாடு சித்தாந்தனின்
வேத சித்தாந்தம்

தேசியம் சுயநிர்ணய உரிமை
பூகோள அரசியல் இவைதான்
எமது இலக்கு இவங்கள் எல்லாம் துரோகிகள் அண்ணன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எம்தலைவர் பிரபாகரன் இணைத்துவைத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு இதை
யார் பிரித்தாலும் துரோகிகள்
விடுதலைப்புலிகள் எம் தலைவனை
சுட்டது உண்மை ஆனாலும்
தமிழ் இனத்தின் விடுதலைக்காக
நாம் அற்பணிப்புடன் செயற்படுகிறோம்
செல்வம் அடைக்கலநாதனின்
வஞ்சகமற்ற மேடைப்பேச்சு

கூட்டமைப்பாக ஐந்து கட்சிகளும்
இணைந்து கேட்டதால் தான்
நான் முதலமைச்சராக வர சம்மதித்தேன்
இப்போது தமிழ் மக்களை ஏமாற்றி
அரசியல் செய்ய முற்படுகிறார்கள்
நான் சிங்களப்பேரினவாதிகளோடு
பழகினாலும் உறவு வைத்தாலும்
அவர்கள் இவர்களை விட நல்லவர்கள்
எனக்கு மக்களை ஏமாற்றி
அரசியல் செய்ய முடியாது – நான்
நீதிஅரசாக இருந்தபோது
நேர்மையாக செயற்பட்டவன்
அது விக்னேஸ்வரனின் வாய்ப்பாடு

எல்லாவற்றையும் சகிப்புத்தன்மையுடன்
சிரித்தபடியே தம்பி
ஆயிரத்து தொளாயிரத்து – என்று
ஆரம்பித்து அரசியல் சொல்லி முடிய
பொழுது விடிந்துவிடும்
இதற்கிடையில் சொல்லவந்த விடயமும்
மறந்துவிடும் – தம்பி
நீர் சொன்ன விடயம்
பரீசிலனை செய்யவேண்டும்
கவனத்தில் எடுப்பார்
மனதை நோகடிக்கமாட்டார்
இவர்தான் மற்றவர்களுக்கு அரசியல்
வகுப்பெடுக்க தகுதியானவர்
என்று பலராலும் சொல்லப்படும்
போராட்ட சாணக்கியன் மாவை சேனாதிராசா

சரி இப்படியே வடைசுட்டு வடை சுட்டு
காலம் போகுது அதற்குள்
நாசமறுத்த கொரோனாவும் வந்திட்டுது
ஏதோ இனியாவது மக்களுக்கு
நல்லதாபாத்து செய்யுங்கோ…

 

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். அரசாங்கத்தினுடைய நகர்வுகளை கண்டறிந்து அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர அவர்களை ஆதரிக்கின்ற வகையில் செயற்பாடுகள் அமையக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு ஒரு விடயத்தை விட்டுச்செல்கின்றோம் என்றால் அந்த தலைமுறை விட்டதிலிருந்து அதனது செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும். முரணாக கருத்துக்களை இக்கட்சிகள் அனைத்தும் கொண்டிப்பதால் ஒருவர் மீது ஒருவர் துரோகப்பட்டத்தை சூட்டிவருகிறார்கள்.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமது தேவைக்கேற்ப செயற்பாடுகளையே தமிழ் தலைமைகளுடன் பேசி அவ்வப்போது செய்து கொண்டதன் பின்னர் குறிப்பிட்ட கட்சிகளை அகற்றி விடுகிறார்கள். அல்லது தென்னிலங்கையில் ஒரு அரசியல் பிரலயத்தை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு இருக்கும் பொழுது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது என்பது சாலச்சிறந்தது அல்ல. ஆனாலும் ஒரு கட்சியினர் மும்முரமாக தேசியம் பேசிக்கொண்டிருக்க மற்றவர்கள் அது தேசியம் அல்ல என்று கூறிக்கொண்டு அபிவிருத்தி அரசியலை நோக்கி செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். காலத்தின் தேவையறிந்து அரசியல் செய்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஒரு இன அழிப்பை ஏற்படுத்திய அரசாங்கத்துடன் எப்படி கூட்டு வைப்பது என்று பலருக்கும் அவர்கள் மீது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வரும் போது கள்ளத்தொடர்பு வைக்கிறார்கள் என்ற கருத்தை தமிழ் தலைமைகள் கூறிக்கொள்வது அவர்கள் தலைகளிலே மண்ணை அள்ளி போடுவதற்கு சமனானது அல்லது மல்லாக்கு படுத்து துப்புவதற்கு சமனானது. போரின் வடுக்களை சுமந்த மக்கள் இவ்வாறான அரசியல் தலைமைகளுக்கு எதிராக போர்க்கொடி ஏந்த வேண்டிய சூழல்களை இவர்களே உருவாக்கினார்கள்.

பின்னர் இவர்களை தீவிரவாத செயற்பாடுகள் என்று கூறி அரசாங்கத்துடன் இணைந்து அந்த இனத்தை காட்டிக்கொடுக்கிறார்கள். இவர்கள் தாங்களாகவே திருந்திக்கொள்ள வேண்டும் அல்லது ஒரு வலிமை கொண்ட தமிழ் தலைமை உருவாக்கப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறான ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு தாயக பிரதேசத்தில் ஒரு பெண் இரவு நேரத்தில் தனித்து செல்லக்கூடிய சூழ்நிலை அன்று இருந்தது. இன்று பகல் வேளைகளில் கூட ஒரு பெண் வீடு திரும்பி வரும் வரை பெற்றோர் யோசித்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விடுதலைப்புலிகளுடைய ஒழுக்க விதிகள் அதற்கான தண்டனைகள் என்பன சரியான பாதையில் சென்றது. அப்பிரதேசத்தில் மதுக்கடைகள் இருந்தும் குடித்து விட்டு தெருக்களில் யாரும் நடமாட மாட்டார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மதுக்கடைகளை திறக்காவிட்டால் சமுதாயத்தில் பாரிய பிரச்சனைகள் உருவாகுவதாக கூறுகிறார்கள். இவையெல்லாவற்றையும் சரியான வழிநடத்தலின் கீழ் கொண்டு செல்வதற்கு சரியான தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் இருக்கக்கூடிய தமிழ் தலைமைகளை வைத்து சரியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வினை வென்றெடுக்க முடியும். ஆயுத போராட்டம் ஏன் உருவாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆயுதம் ஏந்தி போராடுங்கள் என்று கூறிய தலைவர்களும்;, ஆயுதம் ஏந்தி போராடிய தலைவர்களும் இதில் இருக்கிறார்கள்.

ஆகவே இவர்கள் சிந்திப்பதற்கு ஒரு நிமிடம் போதும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சிங்கள தலைமைகள் ஒருபோதும் விடமாட்டார்கள் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே திட்டம் போடுகிறோம் என்று காலங்களை இழுத்தடிக்காது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுங்கள் என்பது போல் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு என்பது போல் நடைமுறை செயற்பாட்டினை இணைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆகவே சரியான தலைமை ஒன்றை உருவாக்கி தமிழ் மக்களுக்கான தீர்வினை குறுகிய கால எல்லைக்குள் தழிழ் மக்கள் வென்றெடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம் என்பதே இன்றைய நிலைப்பாடு.

SHARE