கொரோனா வைரஸை வைத்து மதக்கலவரத்தை உருவாக்கும் மதவாதிகள்

546

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் அருமையான பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் அது இப்பொழுது கோவில்கள் உள்ள ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் நிலைக்கு மக்களை கொண்டு செல்கின்றனர் மதவாதிகள். கொரோனா என்னும் உயிர் கொல்லும் கொடிய வைரஸினால் உலகம் முழுவதும் மிகப்பெரிய மனித பேரவலம் இடம்பெற்று வருகின்றது. அதன் தாக்கம் வீரியம் பெற்ற இலங்கையையும் ஆட்டிப் படைக்கின்றது. உயிரிழப்பு குறைவாக இருந்த பொழுதும் நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இலங்கையில் முதல் தொற்று தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் தொற்றாளர் சீனாவில் இருந்து வந்த பெண் ஒருவர் ஆவார். வடபகுதியை தொற்றானது தென்பகுதியில் தொற்று ஏற்பட்டு 3 வாரங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் முதல் தொற்றாளர் கண்டிபிடிக்கப்பட்டார். இவர் அரியாலை பெல்தெனியா சபையில் சுவிஸிலிருந்து வந்த மதபோதகரின் ஆராதணையில் பங்குபற்றியவர் என அறிய முடிந்தது. அவர் தாவடிப்பகுதியை சேர்ந்தவர்.

அதன் பின்னர் மொத்தமாக இப்பத்தி எழுதும் வரை 16 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது சுவிஸ் நாட்டில் இருந்து வந்த யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட அந்த சுவிஸ் போதகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதணை சந்தித்து கொரோனா தொற்று இல்லை என அனுமதியுடன் தான் வந்ததாக தெரியவருகின்றது. அது எவ்வாறு இருப்பினும் கொரோனா தொற்றை யாழ்ப்பாணத்தில் பரப்பியவர் என சுவிஸ் போதகர் அறிவிக்கப்படுகின்றார். அதனை யாழ் மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களும் வடமாகாண ஆளுநர் அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். சுவிஸ் போதகர் என்றும் தனிமனிதர் பிழையை வைத்து ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களை புண்படுத்தும் சில செயற்பாடுகளில் ஈடுபடல் செய்திகள் வழங்குதல் என்பன கண்டிக்கப்பட வேண்டியவையே. அப்படி பார்த்தால் இந்த கொடிய கொரோனா வைரஸை முதலில் தாக்கிய இடம் சீனா. சீனாவில் இருந்தே ஏனைய நாடுகளுக்கும் பரவியது. சீனாவில் வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள்.

ஆகவே பௌத்த மதத்தினரை இவ்விடயத்தில் குற்றம் சாட்ட முடியுமா இன்று கொரோனாவில் அதிக உயிரிழப்புக்களையும் அதிக நோய் தொற்றாளர்களையும் கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அப்படி பார்த்தால் அமெரிக்கா சீனா அரசை மட்டும் தான் குற்றம் சுமத்துகின்றதே ஒழிய அங்குள்ள பெரும்பான்மை பௌத்த மக்களை அல்ல. அப்படி இருக்க இங்கு மட்டும் ஏன் இவ்வாறு மதவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இலங்கையில் கடந்த முப்பதாண்டு காலமாக பெரும்பான்மை சிறுபான்மை என்ற கோணத்தில் தான் கலவரம் இடம்பெற்றது. சிறுபான்மை இனங்களான தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட காலத்தில் இஸ்ரேல் நாட்டின் மொசாட் புலனாய்வு அமைப்பானது இலங்கை பேரினவாத அரசியல் தலைவர்களுடன் கைகோர்த்து ஒற்றுமையாக இருந்த சிறுபான்மை இனத்தை பகைக்க வைக்க அவர்கள் எடுத்த ஆயுதம் மதம் முஸ்லீம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்ட அப்பாவி மக்களை கொன்று அதை தமிழர் தலையில் போட்டு கலவரத்தை உருவாக்கி தமிழ் முஸ்லீம் மதக்கலவரமானது தங்களுடைய சுய அரசியல் இலாபத்துக்காக இவ்வாறான மதக்கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன. சிங்கள பௌத்த பேரினவாதம் என்று கூறிக்கொள்ளும் சிறுபான்மை தமிழர்கள் இப்பொழுது தங்களுக்குள்ளே மதவாதத்தை கொப்பளிக்க தொடங்கி உள்ளனர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க வெறிபிடித்த சில பௌத்த துறவிகள் அண்மையில் முஸ்லீம் பள்ளிவாசல்களை அடித்துடைத்தனர். மக்களை கொன்றனர். இவ்வாறு அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீது இனவெறியை காட்டத் தொடங்கிய சமயத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் பெருநாளில் இடம்பெற்ற ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலில் பல கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்டும் பல கிறிஸ்தவ ஆலயங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டும் இருந்தன.

ஈஸ்டர் பெருநாள் ஆராதணையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அப்பாவி மக்கள் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் என அறிய முடிந்தது. கிறிஸ்தவ முஸ்லீம் கலவரம் உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் கிறிஸ்தவ முதல்வர்கள் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையால் மக்கள் அமைதி அடைந்து கலவரம் உருவாகாமல் தடுக்கப்பட்டது. ஒரு சில முஸ்லீம் இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலினால் ஒட்டுமொத்த இஸ்லாமிய இனத்தையும் அதன் புனிதமான மதத்தையும் இழிவுபடுத்த முடியாது என்பது உண்மையே உண்மையில் அன்று இருந்த நிலையில் கிறிஸ்தவ குருமார்கள் எடுத்த அற்புதமான நடவடிக்கையால் மக்கள் சமாதானமடைந்தனர்.

இது உண்மையில் வரவேற்கத்தக்க விடயமாகும். இதற்கு சில தினங்களுக்கு முன்னர் மன்னார் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வர வளைவு பிரச்சனை மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருந்த கிறிஸ்தவ இந்து மத மக்களிடையே கலவரமாக உருவெடுக்க தொடங்கியது. உண்மையில் இந்துக்களின் சார்பாக இருந்த வளைவு பிரச்சனை மன்னார் மதகுருமார்களால் அதைச் சிக்கவைக்க முயற்சித்தமையும் பின்னர் ஒருவாறு மன்னார் ஆயர் மற்றும் சைவ குருமுதல்வர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலரின் முயற்சியால் அது சமாதானமாக முடிக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகால கோர யுத்தத்தில் இல்லாத வகையில் இப்பொழுது வட பகுதியில் மதவாதம் உச்சமடைய காரணம் என்ன யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவில் சள சள தீவிர இந்துத்துவ இயக்கமானது இப்பொழுது இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் சிவசேனை என்னும் தீவிர இந்துத்துவ அமைப்பானது மதவாதத்தை தொடர்ச்சியாக கக்கிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது. அதன் வடபகுதி தலைவராக உள்ள மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு வழங்கிவரும் செவ்விகளை பார்த்தால் தீவிர இந்துமதவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்துமதம் அழிவடைந்து வருவதாகவும் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் இந்துக் கோவில் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய பழைய வரலாறுகள் அழிக்கப்படுவதாகவும் இவற்;றில் இருந்து மீட்பதற்காகவே சிவசேனை கட்சி உருவாகி பாடுபட்டு வருவதாக கூறியுள்ளார். ஏற்றுக்கொள்கின்றோம். ஆதியும் அந்தமும் இல்லா சமயம் இந்து சமயம் கல்தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய சமயம் என அறியமுடிகின்றது. நாம் கேட்கும் கேள்வி என்னவெனில் கடந்த காலங்களில் கடுமையான யுத்தம் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று எத்தனை சைவகோவில் அழிக்கப்பட்டு எத்தனை கோவில்களில் தேர்கள் எரிக்கப்பட்டு பெரும் அவலத்தை சந்தித்த பொழுது எங்கிருந்தது இந்த சிவசேன அமைப்பு. அந்த நேரங்களில் ஐயா சச்சிதானந்தம் அவர்களே நீங்கள் அக்காலகட்டங்களில் இதற்கு எதிராக குரல் கொடுத்தீர்களா? இல்லைதானே. அக்காலகட்டத்தில் எத்தனையோ கிறிஸ்தவ தேவாலயங்கள் விமானகுண்டு வீச்சால் அழிக்கப்பட்டன. நவாலி சென்பீற்றர் தேவாலயம், யாக்கப்பர் தேவாலயம் இன்று பல கிறிஸ்தவ கோவில்கள் அழிக்கப்பட்டன.

அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் பல இந்து மத மக்களும் தஞ்சமடைந்து இருந்தனர். சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். அப்பொழுது இது பற்றி குரல் கொடுத்தீர்களா மக்களுக்காக எத்தனை கிறிஸ்தவ குருமார்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளதை அனைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்வார்கள். விடுதலைப்புலிகளால் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சிங்கள மக்களின் புனித பூமியாகும் அவர்களின் மிக முக்கிய வணக்கஸ்தலமான தலதா மாளிகை தாக்குதலினால் தலதாமாளிகை மிக பாரதூரமாக சேதமடைந்ததுடன் அப்பாவி சிங்கள மக்களும் கொல்லப்பட்டனர்.

அப்பொழுது கூட சிங்கள மக்கள் கோபம் கொண்டு தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் பாதுகாத்தது பௌத்த பேரினவாதம் எனக் கூறப்படும். மகா நாயக்க தேரர்களும் அப்பொழுது இருந்த ஆட்சியாளர்களும் பாரிய ஒரு இனக்கலவரம் அன்று தடுக்கப்பட்டது. ஒரு சிலர் செய்யும் இவ்வாறான சம்பவங்களால் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவ்வாறு பார்க்க வேண்டாம் என பௌத்த பீடதிபதி தெரிவித்த கருத்தானது அச்சமயத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஒவ்வொருவரும் தமது மதத்தின் பால் உள்ள கலாச்சார தன்மையை பாதுகாப்பதே மிக முக்கியமானது அதில் மாற்றுக் கருத்தில்லை. யுத்த காலங்களில் கூட ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் இருந்த இந்து கிறிஸ்தவ மக்கள் இன்றும் கூட அப்படித்தான் வடகிழக்கு பகுதிகளில் வாழ்கின்றனர். ஒருசிலர் தங்களுடைய சுயநல கொள்கை மதவாதத்தை தூண்டி அதை கலவரமாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக வடபகுதிகளில் சிவசேனை கட்சியானது தேர்தல் இடம்பெரும் காலங்களில் இந்து மதத்தை சேர்ந்த வேட்பாளருக்கு மட்டும் இந்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை கடந்த தேர்தல் காலங்களில் அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமன்றி வவுனியா பிரதேசங்களில் பண்டிகை காலங்களில் இந்து மக்கள் இந்து சமயத்தை பின்பற்றுபவர்களின் கடைகளில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என சுரொட்டிகள் சிவசேனை கட்சி என பெயரிடப்பட்ட நிலையில் ஒட்டப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு இந்துத்துவ மதவாதத்தை கக்கும் சிவசேனை போன்ற அமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.

இவ்வாறு மதவாதத்தை தூண்டும் எந்த மதத்தை சார்ந்தவர் ஆயினும் அவர்கள் சமுதாயத்தில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டியவர்களே. இன்று கொரோனா என்னும் கொடிய நோயை எமது தாய் நாட்டில் இருந்து முற்றுமுழுதாக துடைத்தொழிக்க அரசும் முப்படையினரும் சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும் அற்ப்பணிப்புடனும் சமூக பொறுப்புடனும் உயிரை துச்சமென மதித்து செயற்பட்டுவரும் இவ்வேளையில் மதவாதிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கா விட்டாலும் பரவாயில்லை. ஒதுங்கி இருந்து அவர்களின் ஆத்மாந்த செயற்பாட்டுக்கு வழிவிட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இன ரீதியான யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் மீண்டும் மதவாதம் என்னும் கொடிய யுத்தத்தை தொடங்க உள்ள யாராகிலும் தயவு தாட்சனியம் இன்றி இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவையாகும்.

SHARE