இனவாத ஊடகமும், இனவாத ஊடகவியலாளரும் சுமந்திரனிடம் கேட்கப்பட்ட இனவாத கேள்விகளால் ஏற்பட்ட சர்ச்சைகள்

545

கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒரு பக்கம் இருக்க இனவாத கொரோனாவின் தாக்கம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் முன்னாள் த தே கூ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மீது கொழும்பில் இயங்கி வருகின்ற குறித்த இனவாத ஊடகம் தனது இனவாதத்தினுடைய வெளிப்பாட்டை குறித்த ஊடவியலாளர் மூலம் நாடித்துடிப்பு இவ்வாறாகத் தான் இருக்கிறது தமிழ் மக்கள் மீது என்பது புலப்படுகிறது. அவ்வாறான கேள்விகள் தான் அன்று முன் வைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் தவிர்ந்த அறிக்கை விடுகின்ற ஆயுத கட்சிகள் ஈழ இராச்சியத்தை கோருவதற்கு தகுதியற்றவர்கள். காரணம் என்னவென்றால் ஈழ இராச்சியத்தை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் போராடிய போது இராணுவ கைக்கூலிகள் மற்றும் இலங்கை அரசுடன் இணைந்து காட்டிக்கொடுத்த துரோகிகளே இவர்கள்.

குறிப்பாக பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் மாகாணசபை நடைமுறைகள் போன்றவற்றில் தங்களை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் ஏற்றுக்கொள்ளும் போது இந்த நாட்டிற்கு அரசியலமைப்புக்கு எதிராக செயற்படமாட்டோம் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்கள் தான் இவர்கள். விடுதலைப்புலிகள் மட்டும் தான் தமிழீழ கோரிக்கையுடன் தமிழ் தேசியம் சுயநிர்ணயம் என்றும் வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம் என்றும் போராடியவர்கள். கடைசி வீரன் வரை போராடியவர்கள். காட்டிக்கொடுப்புக்களும் கப்பங்களும் கொலைகளும் கொள்ளைகளும் யார் செய்தார்கள் என்று தெரியும். ஆயுத போராட்டம் பிழை என்று ஒதுங்கிக்கொண்ட அரசியல் கட்சிகளும் இந்த துரோகப் பட்டியலில் அடக்கப்படுகிறார்கள். மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் எல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளுடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகுவதற்கு முன்னர் அனைத்து ஆயுத கட்சிகளையும் ஒன்றிணைந்து போராட வருமாரு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்திருந்த பொழுது டெலோ பிளட் ஈபிஆர்எல்எப் கட்சிகள் மறுத்துவிட்டார்கள். அதனால் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த ஆயுத கட்சிக்குள் ஊடுறுவி அவர்களுக்குள் பிரிவிiனையை ஏற்படுத்தினார்கள். ஒருசாரார் இராணுவத்தோடும் மறுசாரார் விடுதலைப்புலிகளுடனும் இயங்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஈழ இராச்சிய கோரிக்கையை மறுத்து கைவிடாது தொடர்ந்தும் போரிட்டிருந்தால் இன்று தமிழீழம் வளர்ந்திருக்கும். போராட்டத்தினால் தமிழ் மக்கள் வெற்றி வெறும் அறிய வாய்ப்பினை காட்டிக்கொடுத்ததினாலேயே இந்த தமிழீழ கனவு கைகூடவில்லை. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. மாவிலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட போர் முள்ளிவாய்க்காலோடு மௌனிக்கப்பட்டது. அந்த கட்டத்தில் கூட குறித்த ஆயுத கட்சிகள் இலங்கை அரசிற்காக போரிட முன்வரவில்லை. அதன் பொழுதும் இராணுவத்துடன் இணைந்து மினிப்பாம்களிலும் பல இராணுவ தடை முகாம்களிலும் ஒட்டுண்ணியாக இருந்து சரணடையும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தார்கள். அதனால் முக்கிய தளபதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன் பின் நடைபெற்ற தேர்தலின் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்களை கூட தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட த தே கூட்டமைப்பில் கூட வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளால் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினால் விலக்கப்பட்டார்கள். அதன் பின்னர் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளின் மௌனிப்பின் பின்னர் தனக்கு ஏற்றாட் போல் அந்த கட்சியில் அரசியல்வாதிகளை நியமித்தார்.

அந்த காலகட்டத்தில் தான் திரு சுமந்திரன் அவர்கள் தேசியப்பட்டியல் ஊடாக த தே கூட்டமைப்பில் உள்நுழைந்தார். அப்பொழுது ஊடக பேச்சாளராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் படிப்படியாக ஊடகப்பேச்சாளர் பதிவியிலிருந்து விலக்கப்பட்டுக் கொண்டிருந்தார். பின்னர் சுமந்திரனின் உள் நடவடிக்கையினால் ஜெனீவா பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட அதற்காக குரல் கொடுத்த சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் தலைமையை மீறி செயற்படுகிறார் என்ற காரணத்தால் கூட்டமைப்பு பேச்சாளர் பதவியிலிருந்து முதலாவதாக விலக்கப்பட்டார். பின்னர் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்தும் 2015 இல் நடைபெற்ற தேர்தலில் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும் சுரேஸ் பிரேமச்சந்திரன் த தே கூட்டமைப்பின் ஊடக பேச்சாளராக இருந்த காலகட்டத்தில் ஊடக அறிக்கைகள் விடுகின்ற பொழுது நேர்காணல்களை சந்திக்கும் பொழுது மிக பொறுப்பு வாய்ந்தவராகவே பதிலளிப்பார்.

ஆனால் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தில் பிழையான பாதையில் பயணிக்கின்றது என்னும் பொழுது அதற்காக குரல் கொடுக்கப்போய் அதற்காக தேசிய பட்டியலை இழந்தது அனைவரும் அறிந்ததே. நிலைமை இவ்வாறிருக்க த தே கூட்டமைப்பில்; நானே ராஜா நானே மந்திரி என்னும் மந்திரத்தை சுமந்திரன் கையில் எடுத்து செயற்பட்டார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் திரு சுமந்திரன் அவர்கள் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தார். குறிப்பாக சொல்லப்போனால் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம், பாராளுமன்ற விவகாரம், தமிழ் மக்கள் தொடர்பாக இழைக்கப்படும் அநீதி தொடர்பாக வாதாடி அதனை செயன்முறைப்படுத்துவதிலும் வீச்சாக செயற்பட்டதன் விளைவு தமிழ் தேசிய கூட்டமைப்போடு தற்பொழுது இயங்கி வருகின்ற அரசியல்வாதிகளுக்கும் இவரால் நெருக்கடி நிலைமைகளுக்குள்ளானார்கள். சுமந்திரனை எப்பொழுது, எந்த சந்தர்ப்பத்தில் வெளியேற்றலாம் என்பதே அனைவரதும் திட்டம். ஆனாலும் சுமந்திரனுடைய எதர்ச்சியான நடவடிக்கை ஒவ்வொன்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை பாதிக்கும் வகையில் இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒற்றுமையை சீர் குழைக்கும் ஒரு நபராக பார்க்கப்பட்டார். தொடர்ந்தும் இவ்வாறே பார்க்கப்பட்டு வந்த நிலையில் சிங்கள பேரினவாதிகளுடனும் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் ரணிலுடன் இணைந்து செயற்பட்டதன் அடுத்தகட்ட விளைவு சுமந்திரனை சிங்கள தேச மக்களிடையே அரசியல் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்பதே ஆகும்.

அந்த அடிப்படையில் சுமந்திரனை ஒன்றில் சிங்கள மக்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களிடம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அப்புறப்படுத்த வேண்டும். அதற்கானது தான் குறித்த நேர்காணல். ஏனைய கேள்விகளுக்கு மிக சாதூரியமாக பதிலளித்த சுமந்திரன் ஆயுத போராட்டம் பற்றிய கேள்விகளை மட்டும் கோட்டைவிட்டார். அதில் முக்கியமான கேள்வி என்னவென்றால் பிரபாகரனுடைய ஆயுத போராட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? அவரது பதில் இல்லை என்பதாகும். மற்றும் இந்த நாட்டின் கொடியை ஏற்றுக்கொள்கின்றீர்களா? ஆம் என்று பதிலளித்தார். நீங்கள் ஒரு இனவாதியா? இல்லை என்று பதிலளித்தார். ஒருமித்த நாடு என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா? ஆம் என்றும் பதிலளித்தார். ஆக இவர்களுடைய நோக்கமெல்லாம் ஏதோ ஒரு வகையில் இல்லை என்று பதில் கூறியிருந்தால் அவரை சிங்கள மக்கள் மத்தியில் இரு இனவாதியாக காண்பித்திருக்கலாம். அவ்வாறு காண்பிக்கப்படும் பொழுது மிக இலகுவாக சுமந்திரனை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு எதிரியாக ஒரு துரோகியாக சித்தரித்திருக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியலமைப்பா? என்று கேட்ட பொழுது இல்லை என்னும் பதிலை கூறினார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் தான் உருவாக்கப்பட்டது என்று கட்சியின் தலைவர் சம்மந்தன் அவர்கள் கூறியிருந்தார். மற்றும் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ விரும்புகிறீர்களா? ஆம் என்று பதில் கூறுகின்றார். உங்களது அரசியல் தலைவர் யார்? சம்மந்தன் என்று பதில் கூறுகின்றார். நாடு கடந்த தமிழக அரசோடு உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? முன்பு இருந்தது தற்பொழுது இல்லை என்று கூறுகின்றார். நீங்கள் தனி நாடு பிரிவினை கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நபரா? இல்லை என்கின்றார். த தே கூ சமஷ்டி கோருவது என்பது தனி நாட்டை பிரிப்பது தானே? அப்படியல்ல. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற பல நாடுகளில் இந்த சமஷ்டி இருக்கிறது. தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? ஆம் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறினார். இதில் முக்கியமான கேள்வி நீங்கள் விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவரின் அரசியலமைப்பை மற்றும் ஆயுத அமைப்பை ஏற்றுக்கொள்பவரா? ஏற்றுக்கொள்பவனல்ல என்று பதில் கூறுகின்றார். இதில் ஒரு விடயம் என்வென்றால் ஆயுத போராட்டத்தில் ஈடுபடாத ஒருவரோடு, போராட்டத்தின் வலி தெரியாத ஒருவருடன் இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ஆயுத போராட்ட வலி தெரிந்த ஒருவர் இந்த நேர்காணலை சந்தித்திருந்தால் குறித்த ஊடகவியலாளர் திக்கித்தினறிருப்பார். குறித்த ஊடவியலாளர் சிங்கள பேரினவாதிகளுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவர். அது போன்று இதனை தமிழ் மொழியில் மொழி பெயர்த்து ஒளிபரப்பிய மற்றுமொரு ஊடகமும் மகிந்தவின் கைக்கூலியாக செயற்படும் ஊடகமாகும்.

ஆகவே இரண்டு இனவாதிகளும் ஒன்றாக இணைந்து எப்படியாவது சுமந்திரனை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றிபெறுவதாக இருந்தால் குறித்த ஊடகத்தின் சார்பான குறித்த அரசியல்வாதி வெற்றிபெற முடியாது. ஆனால் இவ் விடயம் தொடர்பில் சுமந்திரன் மீது நீண்ட காலமாக பகைமையை வைத்த அரச ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு பொல்லைக்கொடுத்து சுமந்திரன் அடிவாங்கிய ஒரு விடயமாகவே இதனை பார்க்க முடிகிறது. இதனை வைத்து எதிர் வரும் தேர்தலில் அரசியல் வண்டியை ஓட்ட முடியும். குறித்த நேர்காணலில் சுமந்திரன் அவர்கள் தப்பித்துக்கொள்ளும் செயற்பாட்டை மேற்கொண்டாரா அல்லது அவரது உள் மனதில் இருந்து போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதா என்பது அவருக்கு தான் தெரியும். அரசியல்வாதிகள் என்பவர்கள் நிரந்தரமான நண்பர்களோ நிரந்தரமான அரசியளோ இல்லை. அரசியல் சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப அவர்களும் தங்களை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற வகையில் இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. குறிப்பாக த தே கூ ஊடக பேச்சாளராக இருந்து இந்த கருத்தை வெளியிட்டமை சுமந்திரன் செய்த மாபெரும் குற்றமாகும். தனிப்பட்ட கருத்தை கூட த தே கூ இருந்து கொண்டு அவர் வெளியிட்டிருக்க கூடாது. தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட த தே கூ எந்த கொள்கை வழியில் இருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாத ஒருவரை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளராக நிறுத்தியதும் தவறு. முன்னர் குறிப்பிட்டதை போல் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களோ சுமந்திரன் அவர்களோ தே கூ இருக்கும் பொழுது ஆயுத போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆகவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் த தே கூ உடைய தலைமை மாற்றப்பட வேண்டும் என்று கருதிவிட முடியாது. கட்சியில் தவறு விடுகிறவர்கள் தட்டிக்கேட்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அனந்தி சசிதரன், சிவகரன் இவர்களை போன்ற பலபேருக்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறது. தனிப்பட்ட ரீதியாக சுமந்திரன் அவர்கள் ஆயுத போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவாராக இருந்தால் அவர் ஊடகபேச்சாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழ் அரசியலில் தேசியம் சார்ந்த அரசியலிலும் இருப்பதற்கும் தகுதியற்றவர். ஆகவே இதற்கான ஒரு வழி பொது வெளியில் சுமந்திரன் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது போனால் ஆயுத போராட்டத்தின் வழியாக வந்த கட்சிகளை நிராகரித்து தனக்கான ஒரு கட்சியை உருவாக்கி அதனோடு தனது அரசியலை செயற்படுத்த வேண்டும். ஆயுத போராட்டத்தை விரும்பாதவர்கள் இவருடன் இணைந்து செயற்படுவதற்கு தகுதியுடையவர்கள். த தே கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு சாதகமாக இருக்கும் அரசியல்வாதிகளும் சற்று சிந்திப்பார்கள். சுமந்திரனுடன் நிற்க கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சாந்தி ஸ்ரீ கந்தராஜா, அனோல் இருவரும் போராட்டத்தின் வலி தெரிந்தவர்கள். சயந்தன் அவர்களுக்கு போராட்டத்தின் வலி தெரிய வாய்ப்பில்லை. ஆகவே சுமந்திரனுடன் ஒத்துப்போகின்றவர்கள் அவர்களுடன் ஒத்த அரசியலை செய்வது சிறந்தது. அதற்காக ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஆனால் சுமந்திரன் செய்தது தவறு என்று குரல் கொடுக்கின்றவர்கள் தங்களை ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இறுதியில் கருணாஅம்மான் அவர்களும் சுமந்திரனை துரோகி என்று கூறும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. ஆகவே தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சரியான தருணத்தில் சரியான பதிலை வழங்க வேண்டும். இல்லையேல் கட்சியை பல துண்டுகளாக உடைத்து விட்டு தான் சுமந்திரன் வெளியேறுவார். அல்லது பல கட்சிகளாக கூட்டமைப்பு உடைக்கப்படும் அதற்கு முன் கூட்டமைப்பை சீர் செய்ய வேண்டியது அவசியம். கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் என்ற பதவியிலிருந்து விலக்கி வேறொருவரை நியமிப்பது காலத்தின் தேவை.

SHARE