வன்னி தேர்தல் கள நிலவரம் – மக்கள் செல்வாக்கு நிறைந்த வேட்பாளர்கள் யார்?

922

தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு உட்பட்டு நடைபெறும் ஒன்று. அந்த அடிப்படையில் கொரோனா வைரஸ் என்கிற கிருமியின் தாக்கத்தினால் உலகமே முடங்கிப்போயுள்ள நிலையிலும், தற்போது சில நாடுகள் வழமைக்குத் திரும்பி வரும் இச்சூழ்நிலையில், எமது நாட்டில் தொடரும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு மத்தியில், தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்றுகூடி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக, பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ள இந் நிலையில், வடக்கு – கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய ஒரு சில தமிழ்க் கட்சிகளும், அரச மற்றும் ஏனைய சிங்களக் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பிரித்தாளும் தந்திரோபாயத்தில் 40இற்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள் இத்தேர்தலிலும் குதித்துள்ளனர்.

இம்முறை வேட்பாளர்களில் பலரும் புதுமுக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். வன்னி தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் புதுமுக வேட்பாளர்களில் பொறியியலாளர் கெங்காதரன் – தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக விரிவுரையாளர் சிவலிங்கம் இருவரும் தற்போது முன்னிலையில் இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் குணசீலன் அவர்கள் இருக்கிறார். இருந்தபோதிலும் மூன்று மாவட்டத்தில் இவர்களுக்கான செல்வாக்கு இருக்கிறது. ஆனால் ஏனையவர்களுக்கு குறித்த பிரதேசத்தில் மாத்திரமே செல்வாக்கு இருக்கிறது. தற்போது வன்னியில் தனியாகக் களமிறங்கியுள்ள சிறீரெலோவின் தலைவர் உதயராசா அவர்களுக்கான வாக்குவங்கி என்பது தமிழ் பேசும் மக்கள் முஸ்லீம்களுக்கும் சிங்களர்வளுக்கும் வழங்கும் வாக்குகளைக் கைப்பற்றுவதன் ஊடாக இவரின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். த.தே.கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தி வாக்குகளைச் சிதறடிக்க நினைப்பது மடமைத்தனம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுள் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வைத்திய கலாநிதி சிவமோகன், முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் தற்போது முன்னிலை வகிக்கிறார்கள். ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோதராதலிங்கம் போன்றவர்கள் அடுத்தநிலைப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். நிலைமைகள் இவ்வாறிருக்க வன்னிப் பிராந்தியத்தில் சிங்களக் கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் களமிறங்கியுள்ளது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்கள் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் உதயராசா ஆகியோருக்கிடையில் கடும்போட்டி நிலவும்.

முஸ்லீம்கள் ஒருபோதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆகவே தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளர்களுக்குத் தான் வாக்களிக்கவேண்டும் என்கிற கட்டாயம் எழுந்துள்ளது. சிங்களவர்கள் சிங்கள வேட்பாளர்களுக்கே வாக்களிப்பார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் வாக்களிக்கும்போது உதயராசா அவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. ஆனால் தமிழ் பேசும் மக்கள் சிங்களவர்களுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ வாக்களித்தால் இனிவரும் காலங்களில் அது வரலாற்றுத் துரோகமாகவே அமைந்துவிடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 ஆசனங்களை கைப்பற்றுகின்ற நோக்குடன் ஒருமித்து செயற்படுமாகவிருந்தால் தமிழ் மக்கள் இந்நாட்டில் அரசியல் ரீதியாக மேலும் பலம் பொருந்தியவர்களாக மாற்றம் பெறுவார்கள்.

யாழ் மாவட்ட தேர்தல் கள நிலவரம்

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை இம்முறை கடுமையான போட்டி நிலவும். குறிப்பாக முன்னாள் பா.உ விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் பா.உ அங்கஜன், முன்னாள் பா.உ, அமைச்சருமான டக்ளஸ் ஆகிய மூவரும் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு தீவிரமாக செயற்படுவார்கள். இதில் டக்ளஸ் அவர்களின் ஆசனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை முன்னாள் பா.உ மாவை சேனாதிராஜா, முன்னாள் பா.உ சுமந்திரன், முன்னாள் பா.உ சிறீதரன், முன்னாள் பா.உ சித்தார்த்தன், முன்னாள் பா.உ சரவணபவான், சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், புதுமுக வரவில் யாழ் மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் தற்போது முன்னணிப் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், அருந்தபாலன், சுரேந்திரன் குருசுவாமி போன்றவர்கள் இரண்டாம் நிலை போட்டியாளர்களாக இருக்கிறார்கள். இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவது கடினம். மாகாணசபையில் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு அனந்தி சசிதரன் அவர்கள் இத் தேர்தலில் முன்னோக்கிச் செல்லலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அறிய முடிகிறது. ஆனால் இவர்கள் தற்போதும் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற விடயங்களைக் கோடிட்டுக்காட்டி தமது அரசியலை நகரத்தி வருகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுயேட்சையில் களமிறக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களது வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் யாழில் களமிறக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தமிழ் மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும்.

இதில் ஒரு கவலைக்குரிய விடயம் என்னவென்றால் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விடுதலைப்புலிகளைப் பிரதிபலிக்கும் எந்த நபர்களும் தற்போது தேர்தலில் களமிறக்கப்படவில்லை. தற்போது தேர்தலுக்கு அடுத்த நிலையில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்னவென்றால் முன்னாள் பா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் பற்றித்தான். இவரின் கருத்துக்கள் த.தே.கூட்டமைப்பிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இதனையும் கடந்து எவ்வாறு இவர் இம்முறை வாக்குகளைப் பெறப்போகிறார்?. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளால் த.தே.கூ உருவாக்கப்பட்டது என்பதற்காக வாக்களிக்கத் தவறமாட்டார்கள். அதனைவிட மத – சாதி பிரச்சினைகள் யாழில் தலைதூக்கியிருக்கிறது. சாதியினை வைத்து வாக்குகளைச் சேகரிக்க வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். யாழ் நிலவரம் இவ்வாறிருக்க அங்கு இராணுவமயமாக்கலும் இடம்பெறுகிறது. இவ் மயமாக்கலில் இருந்து மக்கள் தம்மைப் பாதுகாக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. ஆகவே பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளைப் பெறுவதற்காக, இந்நாட்டில் தமிழ் மக்களது அரசியல் பலத்தின் அவசியத்தை உணர்ந்தவர்களாக பாராளுமன்றில் ஆசனங்களைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாகவே எம்மை எமது எதிர்கால இருப்பைப் பலப்படுத்த முடியும் என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பறைசாற்றியிருக்கிறார்கள். இம்முறையும் அவ்வாறே அமையும். சுமந்திரன் அவர்களின் செயற்பாட்டில் தமிழ் மக்கள் தவறு இருக்கிறது என்று கருதினால் நிச்சயமாக இம்முறை யாழில் அவர் தோற்கடிக்கப்படுவார்.

கிழக்கு மாகாண தேர்தல் நிலவரம்

குறிப்பாக கிழக்கினைப் பொறுத்தவரை யாழ், வன்னியை விட மிக சிக்கலான பிரச்சினைகள் அங்கு இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுடைய ஆதிக்கம், சிங்களவர்களின் ஆதிக்கம் என்பது வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் அதிகம். தமிழர் பகுதிகளை சிங்கள – முஸ்லீம்கள் ஆக்கிரமிக்கின்றார்கள். ஆகவே சிங்கள – முஸ்லீம்களை எதிர்க்கக்கூடிய ஒரு வேட்பாளராவது இம்முறை தெரிவுசெய்யப்படவேண்டும். அம்பாறையைப் பொறுத்தவரை சிங்கள – முஸ்லீம்களால் தமிழர் நிலப்பரப்பு சுரண்டப்பட்டு வருகிறது. காலப்போக்கில் தமிழர் வாழ்ந்த இடங்கள் முற்றாக அழிக்கப்படலாம். தமிழர் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களாக மாற்றும் நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் தான் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களுடைய மீள் வருகையும் அவசியமாகிறது. இவருக்கு மாத்திரம் பயப்படுகின்ற ஒரு சூழல் இன்றும் கிழக்கில் இருக்கிறது. இவரை இன மத தேசியத்துரோகி எனக் கூறினாலும் அவருடைய பாராளுமன்ற வருகையும், அவரது துணிவான செயற்பாடுகளும் கிழக்கில் பெரும் அச்ச சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் இம்முறை 03 ஆசனங்களை வெல்லும். திருகோணமலையில் 01, ஏனைய ஆசனங்கள் சிங்கள மற்றும் முஸ்லீம்களால் அபகரிக்கப்படும்.
முன்னணி வேட்பாளர்களாக முன்னாள் பா.உ சிறிநேசன், முன்னாள் பா.உ கோடீஸ்வரன், முன்னாள் பா.உ யோகேஸ்வரன், சாணக்கியன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ஏனையவர்கள் குறைந்த வாக்குகளையே பெறுவார்கள். அரச தரப்பில் வியாழேந்திரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்கிற பிள்ளையானின் கட்சி 01 ஆசனத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது. அவருடைய கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளவர்கள் போராட்டம் சார்ந்தவர்கள் இல்லை. வர்த்தகர்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார்ந்தோர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களின் வெற்றியும் உறுதிப்படுத்தப்படும்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ் பேசும் மக்களாகிய நாம்; சிங்கள மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கி, தமிழின வாக்குகளை சிதறடித்துவிடக்கூடாது. எந்தத் தமிழனும் சிங்கள மற்றும் முஸ்லீம் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டான். எமது இனத்தின் அடையாளங்களை நாமே அழிப்பதற்கு உடந்தையாக மாறிவிடக்கூடாது. தமிழினம் டட்லி – கோட்டாபய ராஜபக்ஷ வரை என அரச தரப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் கிழித்தெறியப்பட்டதும், ஏமாற்றி வந்ததும் வரப்போகிறதும் தான் வரலாறு. ஆகவே இம்முறை தேர்தல் களமானது தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை ஜனநாயக வழியில் காய்நகர்த்த உறுதுணையாக அமையுமே தவிர, தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்கிற விடயங்களை நிலைநாட்ட முடியாது போகும். இதனை நிலைநாட்ட வேண்டுமாகவிருந்தால் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே பெறமுடியும். தற்போது மதவாதம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு – கிழக்கில் பாரிய சிக்கல்கள் உருவாகும். அரசாங்கம் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூறுபோட அதற்குள் சகுனியாக சுமந்திரனைக் களமிறக்கியிருப்பதாக அக்கட்சியில் அங்கம் வகிக்கும் பலரும் கூறுகிறார்கள். சுமந்திரன் அவர்கள் கட்சியில் உள்நுழைக்கப்பட்டதன் பின்னர் தான் கட்சிக்குள் தொடர்ந்தும் பிரச்சினைகள் உருவாகியிருப்பதாக தொடர்ந்தும் கூறியும் வருகின்றனர். எது எவ்வாறாக இருப்பினும் நாம் மக்களுக்கு கூறவேண்டிய விடயங்களைக் கூறுகின்றோம். இது தொடர்பில் சிந்தித்துத் தீர்மானித்து செயற்படுத்தவேண்டியது மக்களாகிய உங்களின் கையில் தான் இருக்கிறது.

நெற்றிப்பொறியன்

SHARE