அரசாங்கத்தினால் வடகிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சை கட்சிகளுக்கு மக்கள் சமாதி கட்டுவார்கள்

520

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களை ஒரு ஏமாற்று அரசியல் செய்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணிக்கொண்டிருக்கிறது. உண்மையில் சுயேட்சை கட்சிகள் களமிறங்கி எதனையும் சாதித்துவிடப்போவதில்லை. வெறுமனே இவர்கள் ஏதாவது ஒரு கட்சியின் ஊடாகவே செயற்படுவார்கள். அதற்கான நிதி வழங்கலும் வழங்கப்படும். உதாரணமாக வடகிழக்கில் போட்டியிடுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை சிதைப்பதற்கு இவர்கள் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஏன் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது ஏன் களமிறக்கப்பட்டிருக்கின்றோம் என்ற அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தில் இவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு சுயேட்சை குழு வெற்றிபெற வேண்டுமாக இருந்தால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற வேண்டும், வன்னி மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட வங்கரொத்து அரசியல் செய்கின்ற தமிழ் அரசியல்வாதிகளாக தங்களை இனங்காட்டுகின்ற இவர்களுக்கு அரசாங்கம் இதுவரையில் என்ன செய்திருக்கிறது. தொடர்ந்தும் இவர்களை அதாள பாதாளத்திற்குள்ளேயே கடத்தி செல்கிறது என்பதை விளங்கியும், விளங்கி கொள்ளாமையும் அற்ப்ப சொற்ப சலுகைகளுக்காக ஆசைப்பட்டு இருக்கின்ற சொத்துக்களையும் இழக்கும் நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது. இறுதியில் கட்டுக்காசையும் இழந்து விடுகின்றார்கள். இப்படிப்பட்டவர்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன். அதாவது தமிழ் மக்களின் 30 வருட கால அகிம்சை போராட்டமும் 30 வருட கால ஆயுத போராட்டமும் எதற்காக இடம்பெற்றது. 3 இலட்சத்திற்கும் மேல் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மட்டும் 1 இலட்சத்து 40 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற அடிப்படையில் பொலிஸ் காணி அதிகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு எதுவுமே அற்ற நிலையில் இறுதியாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை இருந்தும் அதற்கான பொலிஸ் காணி அதிகாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

ஆகவே குறிப்பாக சொல்லப்போனால் அதிகாரமற்ற ஒரு மாகாணசபை என குறிப்பிடலாம். அப்படிப்பட்ட மாகாண சபை எதற்கு? போருக்கு முன்னரான காலப்பகுதியிலும், பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். அது போருக்கு முன்னரும் கிடைக்கவில்லை, போருக்கு பின்னரும் கிடைக்கவில்லை. அரசாங்கம் யாரை ஏமாற்றுகிறது? இதில் ஏமாற்றப்படுபவர்கள் தமிழர்கள் என்று பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏதோவொரு காரணத்தை காட்டி உடைத்து விட அரசாங்கம் அன்றிலிருந்து இன்றுவரை முயற்சிகள் எடுத்து வருகிறது. ஆனால் அத்தனை முயற்சிகளும் தோல்வியிலேயே மடிவடைந்துள்ளது. இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்வில் இருந்த ஒரு கட்சியையும் குறித்த 2 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தன்வசப்படுத்திக் கொண்டது. இவர்கள் பணத்திற்காக ஆசைப்பட்டு தமிழர்களின் தன்மானத்தை விற்றுப்பிழைத்து அரசியல் செய்வதற்கு ஆசைப்பட்டு சென்றவர்கள்.

ஆனால் இம்முறை தேர்தலில் தமிழர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். சுயேட்சைகளினால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்காது. இருக்கக்கூடிய பலம் பொருந்திய தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏன் பலப்படுத்தக் கூடாது குறிப்பாக கடந்த காலங்களில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டதாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது. அப்படியாக இருந்தால் தற்பொழுது இருக்கக்கூடியது 14 பாராளுமன்ற உறுப்பினர்களே, மிகுதி இருக்கக்கூடிய 8 ஆசனங்களையும் ஏன் சுயேட்சைக்குழுக்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக செயற்படும் கட்சிகளோ கைப்பற்றக்கூடாது. முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் வாக்கை விட்டுக்கொடுப்பதனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் நன்மை தான் என்ன? அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மை மக்களை அடிமைப்படுத்திக்கொள்ளவே முயற்சிக்கும் அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வராத வரையிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் என்பது சாத்தியமற்றதொன்றே.

இவ்வாறான சூழ்நிலையில் வடகிழக்கில் சுயேட்சையாக களமிறக்கப்பட்டிருக்கின்ற தமிழ் பிரதிநிதிகள் சிந்தித்து செயற்பட வேண்டும். ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் காவு கொள்ளப்பட்ட மக்களின் நிலைமைகளையும் சிந்திக்க வேண்டும். விச வாயு அடிக்கப்பட்டு கொல்லப்பட்ட மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். அபிவிருத்தி அரசியல் என்பது தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு எட்டப்படும் சந்தர்ப்பத்தில் அதனை நகர்த்தி செல்வது சுலபம். ஆனால் தொடர் போராட்டங்கள் தமிழின அழிப்பு முறைகள் ஒவ்வொன்றும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் இறுதி வரை போராடினார்கள் என்பது வரலாறு. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இன்னமும் அவர்களுக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து அவர்களின் நாட்டில் வைத்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் போர் என்பது ஒரு தமிழினத்தின் முடிவல்ல. யுத்தங்கள், யுத்த வெற்றிகள் காலத்திற்கு காலம் மாறலாம். புராதன கால யுத்தம் தொடக்கம் இன்றைய யுத்தம் வரை அதனை எடுத்துக்காட்டுகிறது. எந்தவொரு மனிதனும் தன்னைத்தானே ஆளுகின்ற தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக சுயேட்சை குழுக்களுக்கு வாக்களிப்பதை விடவும் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களின் தீர்வுக்கான அல்லது அதற்கான குரல் கொடுக்கும் ஒரு கட்சியாக தொடர்ந்தும் அது பரிணாமிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தேர்தல் காலத்தில் ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள் என்றோ அல்லது இன்ன கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நான் கூற வரவில்லை. சிங்களவர்கள் சிங்களவர்களுக்கும், முஸ்லீம்கள் முஸ்லீம்களுக்கும் வாக்களிக்கும் பொழுது தமிழர்கள் மட்டும் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஏன் வாக்களிக்க வேண்டும் என நாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்பதே இக்கட்டுரையில் பிரதானமான நோக்கமாகும்.
‘வாழ்ந்தால் தமிழனாய் வாழ்வோம் வீழ்ந்தாலும் தமிழனாய் வீழ்வோம். வாழ்ந்தால் வீரனாய் வாழ்வோம் வீழ்ந்தாலும் வீரனாய் வீழ்வோம்’
அரக்கன்

SHARE