யாழில் தூய நீருக்கான போராட்டம் நாளை-அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது

332

 

அரசியல் கலப்பற்ற பேரணியாக அமைவதோடு எந்தவொரு அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது!

நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி நாளை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

நல்லூர் முன்றலில் ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி கோயில் வீதியூடாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ் மாவட்ட அரச அதிபர், உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் அரசியல் வாதிகள் கலந்துகொள்ள முடியாதென தெரிவித்துள்ள இந்த அமைப்புக்கள் இந்த விடயம் குறித்து தெரிவிக்கையில் வலிகாமம் நிலத்தடி நீரில் ஏற்பட்டிருக்கும் மாசு தொடர்பாக பல்வேறு குழப்பகரமான ஊகங்கள், குற்றச்சாட்டுக்கள் மக்கள் மத்தியில் நிலவுகிறது. வட மாகாணசபை 40 கிணறுகளில் ஆய்வுரீதியான பரிசோதனை முடிவு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தெளிவின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நீரை குடிக்கலாமா? கூடாதா? ஏன்ற கேள்விக்கு பொறுப்பானவர்களால் பதிலளிக்கப்படவில்லை. இக்கேள்விக்கான பதிலை விசேட செயலணியின் தலைமை வழங்க வேண்டும். பதிலளிக்காதவிடத்து வடக்கு முதலமைச்சர் அல்லது அரசாங்க அதிபர் இதற்கான பதிலை வழங்க வேண்டும்.

இந்த மாசடைதல் தொடர்பாக மக்கள் தெளிவின்றி இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையையும், காத்திருப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு வாராவாரம் மாசடைதல் தொடர்பான எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன? எந்தெந்த இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது போன் தரவுகளை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

இது கடைசி போராட்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள இந்த இயக்கம் ஆர்ப்பாட்ட பேரணியில் மாணவர்களும், பொதுமக்களும் நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம் என்ற கோஷத்துடன் இணைக்கப்படுவர். நாம் பொறுமையை இழந்துவிட்டோம். வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம். நாம் நமது வாழ்வாதாரப் பிரச்சனைப்பற்றி பேசப்போகிறோம். தமது இயற்கைக்காகவும், எமது எதிர்கால சந்ததியினருக்காகவும் வாழ்நாளில் ஒருநாளை வழங்க தயாராவோம். இனமத, பேதமற்ற பேரணியாகவும், நீருக்காகவும், எதிர்காலத்திற்காகவும் ஒன்று திரள்வோம் என கேட்டுள்ளது.
அரசியல் கலப்பற்ற பேரணியாக அமைவதோடு எந்தவொரு அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது

SHARE