ஆரோக்கியமான புத்திக் கூர்மையுள்ள குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்பது சகல தாய்மாரினதும் நோக்கமாகும். அதனை அடைவதற்கு கர்ப்ப காலத்தில் தாயினது உணவு சிறப்பாக இருக்க வேண்டும். இதற்கு இலாபகரமானதும் இலகுவானதுமான முறையில் உணவைப் பெறுவதற்கு சரியான ஆலோசனைகள் தாய்மாருக்கு முக்கியமானது.
பிரதான உணவு வேளைகளுக்கு மேலதிகமாக சிற்றுண்டிகளை உட்கொள்வதற்கும் கிளினிக் மூலம் வழங்கப்படும் விற்றமின்களை உண்பதற்கும் தாய்மாருக்கு சரியான ஆலோசனை வழங்கப்படல் வேண்டும்.
தாயின் போஷாக்கினை அளவிடுவதற்கு உயரத்திற்குப் பொருத்தமான நிறையுள்ளதா என ஆராய்ந்தறிவது அவசியமாகும். இதனை உடற்திணிவுச் சுட்டி (BMI) என அழைக்கப்படும். BMI 18.5 ஐ விடக் குறைவாயின் போசணை மட்டத்தில் குறைந்து செல்வதாகக் கருதப்படும். கர்ப்ப காலத்தில் நிறை அதிகரித்தல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். இதன் மூலம் நல்ல பிறப்பு நிறை கொண்ட குழந்தையொன்றை பெறும் சந்தர்ப்பம் ஏற்படும்.
கர்ப்ப காலம் முழுவதும் தாயின் உடல்நிறை 12-–14 Kg அளவுவரை அதிகரிக்கும்.இரத்தச் சோகை குறித்துக் கர்ப்பிணிப் பெண்கள் அறிந்திருத்தல் அவசியம்.
இரத்தச் சோகை உள்ளதா? என அறிவதற்கு கிளினிக்குகளில் ஹீமோ குளோபினின் அளவை இரத்தத்தில் பார்ப்பது அவசியம். இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருந்தால் கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும் பாரிய பிரச்சினைகள் ஏற்படலாம். அத்துடன் குழந்தையின் பிறப்பு நிறையும் குறைவடையும். ஹீமோகுளோபினின் அளவு 11g ஐ விட அதிகமானால் இது திருப்திகரமான நிலை உள்ளதெனவும் 11g ஐ விட குறைவானால் இது இரத்தச் சோகை நிலை எனவும் கருதப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் மருத்துவர்கள் தரும் விசேட ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன் கிளினிக்குகளில் தரப்படும் இரும்புச்சத்து குளிசைகளுக்கு மேலதிகமாக இரும்புச்சத்து (IRON) அடங்கிய உணவு வகைகளை உணவுடன் சேர்த்துக் கொள்வதும் அவசியமாகும்.
ஹீமோகுளோபினின் அளவு மேலும் 7g க்கு குறைவானால் அது அதிக இரத்தச்சோகை நிலையாகும். இச்சந்தர்ப்பத்தில் அப்பெண்ணை வைத்தியசாலையில் அனு மதித்து சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்ணொருவருக்கு வழங்கப்படும் குளிசை வகைகள்
01) முதல் 12 கிழமைகளுக்குள் போலிக் அமிலக் குளிசை (Folic Acid) நாளாந்தம் ஒரு குளிசை வீதம் 12 கிழமைகளுக்கு எடுக்க வேண்டும்.
இது சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு அவசியமாகும்.
02) முதல் 12 கிழமைகளின் பின் நாளாந்தம் ஒரு இருப்புச்சத்து குளிசையும் விற்றமின் C குளிசை ஒன்றும் இரவு உணவின் பின் எடுக்கப்பட வேண்டும்.
இரத்தச்சோகை பிரச்சினையை தவிர் த்துக் கொள்வதற்கு இக்குளிசைகள் உதவுகின்றன.
03) கர்ப்ப காலத்தில் 5 மாதங்களில் வைத்தியரால் சிபாரிசு செய்யப்படும் பூச்சிக் குளிசைகள் உட்கொள்ளப்பட வேண்டும். (WORM TREATMENT) வயிற்றுப் புழுக்களிலிருந்து பாதுகாப்புப் பெறவும் இரத்தச் சோகை வராமல் காப்பதற்கும் இவை உதவுகின்றன.
தேயிலை, கோப்பி, பால் போன்றன இருப்புச்சத்து குளிசைகளில் மற்றும் உணவுகளில் அடங்கியுள்ள இரும்புச்சத்து உடலினால் உறிஞ்சப்படுவதைத் தடுப்பதனால் பிரதான உணவு வேளைக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரும் மற்றும் உணவின் பின் ஒரு மணித்தியாலத்திற்கும் அப்படியான பானங்களை அருந்தாமல் இருத்தல் பொருத்தமானது.
விற்றமின் C குளிசையினாலும் உணவின் பின் உட்கொள்ளப்படும் பழங்களினாலும் உடம்பினுள் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவது இலகுவாக்கப்படுகின்றது.
04) வேறு நோய்கள் இருந்து அவற்றுக்காக மாத்திரைகள் பாவித்துக் கொண்டிருப்பின் கிளினிக்கிற்கு வந்த முதல் நாளிலேயே அந்த விடயத்தை வைத்தியரின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
05) கர்ப்ப காலத்தில் மருத்துவ ஆலோசனை இன்றி எந்த வேளையிலும் எந்த மருந்தினையும் பாவிக்கக் கூடாது. ஏதேனும் நோய்க்கு ஆளானால் முடிந்தளவு விரைவாக வைத்தியரை நாடி ஆலோசனை பெறுதல் அவசியமாகும்.
06) கர்ப்பத்துள் வளரும் குழந்தை பூரணமாகப் போஷாக்கினை பெற்றுக்கொள்வது தாய் உள்ளெடுக்கும் உணவுகளிலிருந்தே. ஆதலால் குழந்தையின் ஆரோக்கியமான விருத்தியைக் கருத்திற்கொண்டு உள்ளெ டுக்கும் உணவுகளில் கவனஞ்செலுத்து தல் வேண்டும்.
07) முதல் 2–3 மாதங்களில் உட்கொள்ளும் உணவு சுவையின்றி அல்லது உணவில் விருப்பமின்றி இருந்தால் நாட்டுப் பழவகைகள், இளநீர், மரக்கறிசூப், பிஸ்கட் போன்றவற்றை உட்கொள்ளலாம். அதுமட்டுமன்றி ஏனைய நாட்களில் தான் உட்கொண்ட பிடித்தமான உணவுகளை வழக்கப்படி உட்கொள்ளலாம்.
புதிய பழங்களான வாழை, நெல்லி, வெரளு, விளா, கொய்யா, பழுத்த பப்பாசி, பழுத்த அன்னாசி போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் தேவையான விற்றமின் போசணைப் பதார்த்தங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
08) ஏனைய நாட்களை விட சோறின் அளவு சற்றுக் கூடுதலாக உள்ளெடுக்கப்பட வேண்டும். மரக்கறி, கீரைவகை, பருப்பு, அவரை மற்றும் விதை வகைகள் மற்றைய நாட்களை விட சற்றுக் கூடுதலாக உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* இயலுமான எல்லா வேளைகளிலும் மீன், இறைச்சி அல்லது நெத்திலி உணவுடன் சேர்த்தல் பொருத்தமானது.
* மீன் இறைச்சி உட்கொள்ளாதவராயின் அதற்குப் பதிலாக சோயா, பயறு, கடலை, கௌபி போன்ற அவரை வகைகளைக் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்தல் வேண்டும்.
* வாரத்துக்கு 3 முட்டைகள் வீதம் உணவுடன் சேர்த்துக் கொள்ளல் போதுமானதாகும்.
* இலகுவாகக் கிடைக்கக் கூடிய வசதிகள் இருக்குமானால் ஒரு நாளைக்கு ஒரு தடவை ஒரு கிளாஸ் பால் அல்லது யோகட், தயிர் போன்ற பாலுணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.
* பிரதான உணவின் பின் நாளைக்கு இரண்டு தடவைகளாவது பழமொன்றை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் அதிக தாய்மாருக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல் போன்றன ஏற்படாதிருக்க நார் சேர்ந்த மரக்கறி, பழங்கள், கீரைகளை உணவுடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். கீரை வகைகளை உணவுக்கென உட்கொள்ளும் போது முடிந்தளவு பச்சையாக சலாது செய்து தயார்படுத்தல் சிறந்தது. அதனால் அதிலிருந்து போஷாக்கு பாதுகாக்கப்படும்.
உ+ம்- வல்லாரை, பொன்னாங்கண்ணி, அகத்தி போன்றவற்றை சிறிதாக வெட்டி சலாது செய்யலாம் )
உங்களது BMI பெறுமானம் 18.5 ஐ விடக் குறைவாயின் மாச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை உள்ளெடுப்பது சிறந்தது.
கடைகளில் கிடைக்கும் சமைத்த உணவுகளை தவிர்த்து வீட்டில் சுத்தமாக சமைத்த உணவினை எடுப்பதற்கும் கொதித்தாறிய நீரினைப் பருகுவதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். எந்த வேளையிலும் இயற்கை உணவுகளை உட்கொள்ளவும் தரமற்ற செயற்கை பதார்த்தங்களை தவிர்க்கவும் பழகுதல் சிறந்ததாகும்.
கவனத்திற்கொள்ள வேண்டிய
ஏனைய விடயங்கள்
* கர்ப்ப காலத்தில் பெண்கள் தமது உடற்சுத்தத்தைப் பேண வேண்டும். அத்துடன் அணியும் ஆடைகள் உள்ளா டைகளை தினமும் கழுவிச் சுத்தமாக பாவிக்க வேண்டும்.
* பற்சுகாதாரம் பற்றிக் கவனித்தல் அவசியம். தினமும் பிரதான உணவு வேளையின் பின் பற்பசை கொண்டு பற்தூரிகையினால் பல்லை துலக்குதல் பொருத்தமானது.
* மேலதிகமாக பல் வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் பல் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும். கர்ப்ப காலத்தில் தொற்று நோய்களிலிருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும். நோய்கள் தொற்றக்கூடிய பொது மக்கள் கூடும் இடங்கள், வைத்தியசாலைகள், நோயா ளிகள், வீடுகள் போன்ற இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.