தமிழினத்தின் அடக்குமுறைக்கு எதிராக 28.09.2020 தமிழர் தாயகம் எங்கும் கதவடைப்பு அடையாள போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும்; ஒன்றிணைந்து இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்ற நிலையில் பொலிஸார் வடகிழக்குப் பிரதேசத்தில் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கின்றது. தியாகி திலீபனின் உண்ணாவிரதத்தின் 33வது ஆண்டு நிறைவை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்காமை மற்றும் உயிர்நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை இவ்வரசு நீதிமன்றங்களினூடாக தடை செய்திருக்கிறது.
அடக்குமுறைக்கு எதிராகவே தியாகி திலீபன் ஐந்தம்சக் கோரிக்கையுடன் நீராகாரமின்றி தனது உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உயிர் துறந்தார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தியாகி திலீபனின் நினைவு தினம் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பை சார்ந்தவர்கள் இனிமேல் புத்துயிர் பெறக்கூடாது, அதுமட்டுமன்றி அவர்களுடைய எந்த நிகழ்வுகளும் இந்த மண்ணில் அஞ்சலி செய்யப்படக்கூடாது என்பதேயாகும். அடுத்து வருகின்ற மாவீரர்கள் தினம், முள்ளிவாய்க்கால் தினம் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகவே அரசு தியாகி திலீபனுடைய அகிம்சை போராட்டத்தின் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என தடை விதித்தது.
ஆனால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு தீயாகி திலீபனின் போராட்டமும் ரணசிங்க பிரேமதாஸவினுடைய விடுதலைப்புலிகளினுடனான ஒப்பந்தமுமே அதற்கான தீர்வை பெற்றுக்கொடுத்தது. இந்திய இராணுவத்துடன் மோதலை கட்டவிழ்ப்பதற்கு தூண்டுதலாக ரணசிங்க பிரேமதாஸ ஏ.கே 47, வாகனங்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றையும் வழங்கி இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து விரட்டியடித்தனர்.
குறிப்பாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் தமது தலைவர்களின் நினைவு தினத்தை வீர தினம் என்று கொண்டாடி வருகின்றார்கள். 30 வருட காலங்கள் இலங்கை அரசாங்கத்துடன் கடல், வான், தரை என முப்படைகளையும் கொண்டு ஒரு அரசியல் கட்டமைப்பை வடகிழக்கில் நிறுவிய தமிழீழ விடுதலைப்புலிகளின் இறந்த வீரர்களுக்கு தமிழ் மக்களாகிய நாம் அஞ்சலி செய்யக்கூடாது? இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்ட இயக்கங்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். தமிழ் மக்களுக்கான அடக்கு முறை இந்த நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த அடக்குமுறையை உடைத்தெரியவே வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அரசின் வன்கொடுமைக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அகிம்சை ரீதியில் மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர். சிங்கள பேரினவாதிகளின் அடக்குமுறை தொடருமானால் அதன் விளைவு இந்த நாட்டில் இன்னும் பாரிய பிரச்சினைகளை இனங்களுக்கிடையில் ஏற்படுத்தப் போகின்றது.
தியாகி திலீபனின் தினத்தன்றே கடந்த காலத்தில் யாழ்ப்பாண கோட்டை விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது என்பதனையும் இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். காந்திய வழியில் தியாகிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எமக்கான உரிமையை நாம் வென்றெடுக்க ஏன் தயங்க வேண்டும்? இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழினத்தை அடக்கியாழுகின்ற ஒரு செயல்திட்டமாகவே இலங்கை அரசு செயற்படுகிறது. அரசியல் அமைப்பில் 14 ஆம் உறுப்புரை கூறுவது என்னவென்றால் இன, மத, மொழி பேதங்களை கடந்து அகிம்சை ரீதியிலான போராட்டங்களை செய்வதற்கு மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது என்பதேயாகும். இந்த அரசியலமைப்பு இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை. அவ்வாறு மாற்றியமைத்து சட்டத்தை கொண்டு வருவதாக இருந்தாலும் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை.
ஆகவே மக்கள் மீது இவ்வாறான அடக்குமுறையை அரசு திணிக்க முற்படுவது என்பது மற்றுமொரு ஆயுத போராட்டத்தை மக்கள் மத்தியில் நினைவுபடுத்துகிறது என்றே கூறலாம். ஆகவே அரசாங்கம் இனியாவது தனது செயற்பாடுகளை தமிழினத்தின் மீதான ஆக்கிரமிப்புக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் முஸ்லீம்களும் தமிழ் மக்களுடன் இணைந்து கொண்டால் இந்த அரசாங்கம் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவை அடைய நேரிடும். ஆகவே இந்த அரசாங்கம் வன்முறைகளை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.
நெற்றிப்பொறியன்