ஒரு நாட்டில் அல்லது நாடுக ளில் அல்லது உலகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி களை உடைய மக்கள் வாழ்ந்து வந்தால், அது பன்மொழிச் சமூகம் என அழைக்கப்படும். பன்மொழிச் சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தினதும் தாய்மொழி வளர்ச்சியும் தாய்மொழி செம்மையும் எவ்வாறு உள்ளன என ஆய்வு செய்வதே இந்த ஆய்வுக்கட்டுரையின் பிரதான நோக்கம். பெரும்பாலும் பிறப்பிலிருந்து ஒருவர் பேசி வரும் மொழி அல்லது தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தும் மொழி தாய் மொழி ஆகும்.
உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஏழாயிரம் தொடக்கம் பத்தாயிரம் வரை இருப்பதாக அறியப்படுகின்றது. மனித இனம் தன்னுடைய மௌனத்தைக் கலைத்து ஒலித்த ஒலி பல்வேறு கால கட்டங்களில் பரிணாம வளர்ச்சி பெற்று மொழியாக மலர்ந்தது. மொழியின் வளர்ச்சிப் படிகளை மொழியியல் ஆய்வு அறிஞர்கள் பின்வருமாறு வகைப்படுத்துவர். அவையாவன : போலி மொழிக் கொள்கை, உணர்ச்சி மொழிக் கொள்கை, பண்மொழிக் கொள்கை, ஏலேலே கொள்கை, பாட்டு மொழிக் கொள்கை இவ்வாறு வளர்ந்த மொழியானது, பின்னர் நாகரீகம் வளர வளர சித்திர எழுத்தின் நிலையும் வளர்ச்சியடைந்து, சொற்கள் உருவாகத் தொடங்கின. அடுத்து மனிதன் காலப்போக்கில் அளவற்ற சொற்களை உருவாக்கிக் கொண்டான். இன்றைய மொழி நிலை இவ்வாறே உருவாகியது.
மனித இனம் மெது மெதுவாக நாகரிக வளர்ச்சி அடையும்போது, அவனுடைய ஐக்கிய வாழ்விலும் தளம்பல் நிலை ஏற்பட்டது. மனி தன் நாகரீகம் தெரியாத நிலையில் இருந்து எப்போது நாகரீகமடையத் தொடங்கினானோ அப்போதே மக்களிடையே பேதங்கள் வளர்ந்தன. பல்வேறு பிரதேசங்கள் பிரியத் தொடங்கின. மொழிச் சண்டைகள் உருவாகின. மொழிக் குடும்பங்கள் உருவாகின. மொழியியல் அறிஞர்கள் பின்வருமாறு மொழிக் குடும்பத்தைப் பிரித் துள்ளன. அவையாவன : இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம், அமெரிக்க இந்திய மொழிக் குடும்பம், குசிடிக் செமிடிக் மொழிக் குடும்பம், ஹாமிடிக் மொழிக் குடும்பம், யூரல் அட்லாய்க் மொழிக் குடும்பம், சீன திபெத்திய மொழிக் குடும்பம், ஜப்பானிய கொரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், மலேயா போலினிஷிய மொழிக் குடும்பம், ஆபிரிக்க ஆசிய மொழிக் குடும்பம், ஆபிரிக்க மொழிக் குடும்பம், தென் கிழக்கு ஆசிய மொழிக் குடும்பம் முதலியனவாகும்.
தமிழ், கிரேக்கம், லத்தீன், வடமொழி ஆகியன தொன்மை வாய்ந்த மொழிகளாகும். இன்று உலகம் தழுவிய நிலையில் ஆதிக்கம் பெற்றிருப்பது ஆங்கில மொழியாகும். அதில் பல்வேறு மொழிகளின் சொற்கள் கலந் துள்ளன. தமிழ் மொழியிலும் ஆங்கில மொழி போல் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. எனினும், அது தன் தனித் தன்மையை இழக்கவில்லை. ஆங்கில மொழியில் தமிழ், கிரேக்கம், லத்தீன், ஃபிரெஞ்சு, ஹீப்ரூ, அராபிக், பெர்சியன், சைனா, ஜப்பான், இத்தாலி, ஸ்பானிஷ், டச்சு, ஜெர்மன் முதலிய மொழிகளிலிருந்து உருவான சொற்களே அதிகம் கிரீக் எனப்படும் கிரேக்க எழுத்துச் சான்றுகளாய் விளங்கும் கல்வெட்டுக்கள் கி.மு.7ஆம் அல்லது 8 ஆம் நூற் றாண்டுகளில் ஏதென்ஸ் நகரில் கிடைக்கப்பெற்றுள்ளன. கிரீக், கிரேக்க நாட்டிலும் சைப்ரஸ் தீவிலும் அரசியல் மொழியாக அங்கீகாரம் பெற்றிருந்து சுமார் ஒரு கோடி மக்களின் தூய மொழியாக விளங்கிய இம் மொழி தான் ஒலி எழுத்து முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது என மொழியியல் அறிஞர்கள் கூறுவர்.
இன்று உலகத்தில் மக்கள் பல்வேறு மொழிகளைத் தூய மொழி யாகக் கொண்டு பன்மொழிச் சமூகமாக வாழ்கின்றனர். இலங்கை, சிங்கப்பூர், தமிழ்நாடு, புதுச்சேரி முதலிய பிரதேசங்களில் தமிழ் அலுவலக மொழியாகவும் தூயமொழியாகவும் கொண்டோர் அதிகம் வாழ்கின்றனர்.
ஒரு தாய் மொழிக்குச் சிறப்பு என்பது, அம்மொழி பல கூறுகளிலும் ஒரு நிலையான வளர்ச்சியினை அடைவதாகும். பிறமொழிகளின் சொல்லாதிக்கத்தினால், பாதிக்கப் பட்டாலும் பிற மொழிச் சொற்களைத் தம் மொழியில் இணைத்துக்கொண்டு சிதைவு படாமல் தனித்தன்மையோடு வளர்ச்சிபெற்றுள்ள மொழிகளும் நிலையான வளர்ச்சியினை உடைய மொழிகளும் தாய்மொழிகள் ஆகும். இன்று உலகில் பல மொழிகள், பிற மொழிகளின் தாக்கத்தினால், பாதிக்கப்பட்டு வழக்கொழிந்தவையாய் இருக்கலாம். எனினும் அம் மொழிகள் வளமான வளர்ச்சி பெற்றிருந்த காலத்தில் தோன்றிய இலக்கண – இலக்கியங்களைக் கருத்திற்கொண்டு அவற்றைச் சிறந்த மொழிகளாகக் கருதுகின்றனர். உலகில் தலைசிறந்த மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில. அவை யாவன, தமிழ், வடமொழி, லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம், ஹீப்ரூ, பிரெஞ்சு, ரஷ்யன், ஜெர்மன், இத்தாலியன், அரபு முதலியவைகளாகும். இம் மொழிகள் யாவும் ஒவ்வொரு வகை யில் சிறப்பானவையாகவும் பல தேசங்களில் தாய்மொழியாக கொண்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்மொழி மிகத் தொன்மை யானது ஆகும். இம் மொழியில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் நீதி நெறியினைப் புகட்டுவன. மக்களின் வாழ்வியல் முறைகளைச் சுட்டுவன. நாகரி கமும் பண்பாடும் மிகத் தொன்மை யான மொழிகளுள் தமிழ் மொழி சிறந்த தாய்மொழியாகும். தமிழ் மொழி பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் காலத் துக்குக்காலம் பல்வேறு மாற்றங்களைக் கண்டபோதும், தமிழ்த்தாய் இன்னும் புனி தம் அடைந்திருக்கின்றாள் ஒழிய மாசுபடவுமில்லை. மாசு அடைந்தவர்களை நல் வழிபடுத்தாமல் விடவுமில்லை. இம் மொழியில் உள்ள ழ, ற ஆகிய இரண்டும் மற்றெந்த மொழியி லும் இல்லாத எழுத்துக்களாகும். தொன்று தொடங்கி தமிழ் அன்னை தன்னுடைய கற்பைப் பேணி வருவது அவளது தூய்மையைக் காட்டுகின்றது.
இதுவரையும் பன்மொழிச் சமூகம் பற்றியும் மொழிகள் பற்றியும் தாய் மொழிகள் பற்றியும் பொது அடிப்படையிலும் சிறப்பு அடிப்படையிலும் சுருக்கமாக அலசப்பட்டன. இனி விரிவாக பன்மொழிச் சமூகம் ஒன்றில் தாய் மொழியின் வளர்ச்சியினைக் கண்டு கொள்வோம்.
இன்று உலக நாடுகளில் பன்மொழிச் சமூகம் என்பது ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் உள்ளது. சீனா, தைவான் முதலிய நாடுகளில் சீன மொழியான மண்டரின் பேசுவோர் 1120 மில்லியனும் கனடா, அமெரிக்கா, பிரிட்டன், நியூசிலாந்து, அயர்லாந்து முதலிய நாடுகளில் ஆங்கில மொழி பேசுபவர்கள் 510 மில்லியனும் உல கில் அதிக மக்கள் பேசும் மூன்றாவது மொழியான இந்தி மொழியை பேசுவோர் வட இந்தியாவில் 490 மில்லியன் மக்களும் வாழ்கின்றனர். அத்தோடு இந்திய மொழிகளில் தாய்மொழியாகக் கொண்டோர் வரிசையில் இந்தி வங்காளி மொழியை 476 மில்லியன் மக்களும் உருது மொழியை 207 மில்லியன் மக்களும் பஞ்சாபி மொழியை 94 மில்லியன் மக்களும் தெலுங்கு மொழியை 75 மில்லியன் மக்களும் மராத்தி மொழியை 71 மில்லியன் மக்களும் கன்னடம் மொழியை 46 மில்லியன் மக்களும் குஜராத்தி மொழியை 44 மில்லியன் மக்களும் மலையாள மொழியை 36 மில்லியன் மக்களும் தமிழ் மொழியை 74 மில்லியன் மக்களும் தாய்மொழியாகக் கொண்டு உலக அளவில் வாழ்கின்றனர்.
இன்று உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 21 ஆம் திகதி தாய்மொழித் தின மாகக் கொண்டாடப்படுவதைக் காணலாம். 1953.02.21 ஆம் ஆண்டு தங்கள் தாய் மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமைப் போராளிகளின் நினைவாகவும் அழிந்துவரும் தாய்மொழிகளைப் பாதுகாக்கவும் மாசி 21 ஆம் திக தியை யுனெஸ்கோ நிறுவனம் உலகத் தாய்மொழித் தினமாகவும் அறிவித்தது.
இலங்கையில் 1956 ஆம் ஆண்டு முதல் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக ஆக்கப்பட்டமையால், நாட்டில் பல்வேறு கலவரங்கள் ஏற்பட்டு, அது நீண்ட நாள் இன யுத்தமாக மாறி பல உயிர்களைக் காவு கொண்டது. 1987ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர் சிங்களத்துடன் சேர்த்துத் தமிழும் அரச கரும மொழியாக்கப்பட்டு 30 வருடங்களாகிவிட்டன. இலங்கை அரசியலமைப்பின் 04 ஆம் அத்தியாயத்தின் 18 – 25 சரத்துக்களே மொழி உரி மைகள் சம்பந்தப்பட்டவையாக அமைந்திருக்கின்றன. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்ற அதேவேளை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்று 18வது சரத் பிர கடனம் செய்கிறது. சரத் 19 இன் ஏற்பாடுகளின் கீழ் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக பிர கடனம் செய்யப்படுகின்றன. இது 1991இல் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு, பெயர் அளவிலேயே இன்று வரை இருப்பதைக் காணலாம். இலங்கை நிர்வாகத்தில் இரு அரச கரும மொழிகளும், பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அரசியலமைப்பின் 4 ஆவது அத்தியாயத்தின் ஏற்பாடுகளை உகந்த முறையில் நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டு 30 வருடங்கள் கடந்த பின்னரே மொழிக் கொள்கையில் இழைக்கப்பட்ட தவறு உணரப்பட்டது. இலங்கை யில் சிங்களத்தையும் தமிழை யும் தாய்மொழியாகக் கொண்ட மக்களே பெரும்பான்மையினராக இருக்கின்றார்கள். அதில் சிங்களத்தைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இலங்கை மொழிச் சட்டத்தில், கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினால், நாட்டில் எவ்வளவோ நெருக்கடிகள் குறைந்து, அவர் அவர் தாய்மொழியும் பன்மொழிச் சமூகத்தில் பாதுகாக்கப்பட்டு வளர்ச்சி நிலையை அடையும் என்பது உறுதி.
ஒரு தாய் மொழியின் வளர்ச்சி என்பது அதன் கண் படைக்கப்படுகின்ற இலக்கியங்களை மட்டும் சாராது வாழ்வியலை ஒட்டு அமைக்கின்ற, அமைந்து விடுகின்ற உண்மை சம்பவங்களின் மூலக் கூறுகள் சிதையாது, சமூக யதார்த்தத்துடனே மக்களைச் சென்றடைகின்ற நிலையிலும் அடங்கியுள்ளது. சான்றாக, உலக அளவில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் இருந்தபோதிலும், அது ஆங்கிலம், ஃபிரெஞ்சு ஆகிய மொழிகள் அளவு பிரபலமடையவில்லை. காரணம், அதனைக் கையாள்வோர் சிறுபான்மையினராய் இருப்பதுதான்.
ஒரு தாய் மொழியின் வளர்ச்சி என்பது காலத்துக்குக் காலம் படைக்கப்படுகின்ற இலக்கியங்களிலும் வகுக்கப்படுகின்ற இலக்கண நூல்களிலும் உண்டு. உலகத்தாய் மொழியின் இலக்கிய வரலாற்றை நோக்கினால், எழுதா இலக்கியங்களே, பின் எழுதப்பட்ட இலக்கியங்களாகப் புதுமை வடிவமும் பொலிவும் பெற்றுப் பயின்று வருகின்ற உண்மை நிலை புலனாகும். இதிலிருந்து, முதலில் தாய்மொழியும் அடுத்து வாய்மொழி இலக்கியங்களும் அவற்றைத் தொடர்ந்து எழுதப்பட்ட இலக்கியங்களும் வாழையடி வாழையாக பிறந்து வளர்ந்து வகை கொண்டன என, தாய் மொழிகளின் இலக்கியத் தோற்றத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி முனைவர் ச.வே.சுப்பிரமணியம் அவர்கள் கூறுவர். சான்றாக, அன்று திருவள்ளுவர் அன்றை சமூகத்தை வெண்பா இலக்கியத்தில் காட்டினார். இன்று ஜெயகாந்தன் இன்றைய நவீன சமூகத்தை புனை கதை இலக்கியத்தில் காட்டினார்.
பன்மொழி பேசுகின்ற சமூகத்தில் தாய் மொழி வெறும் வரிவடிவங்களாக தாள்களில் பாதுகாக்கப்பட்டு, பன்மொழி சமூகத்தில் உறுதியான வளர்ச்சி அடையும்.
உலகத்தில் இன்று கணினியிலும் அறிவியலிலும் கண்டுப்பிடிப்புக்கள் ஆங்கில மொழியிலேயே அதிக அளவில் இடம்பெறுகின்றன. ஏனைய மொழிகளில் ஆங்காங்கே இடம்பெற்றாலும் அவை சந்தைக்கு வரும்போது, ஆங்கில மொழியிலேயே வருகின்றது. ஆங்கில மொழி மோகத்தின் மத்தியில் அவர் அவர் தாய்மொழியை வளர்ப்பதற்கு ஒவ்வொரு தாய்மொழியிலும் கலைச் சொற்களும் கலைச்சொல் அகராதிகளும் படைக்கப்படவேண்டும். சான்றாக, கணினியில் சுட்டி, திரை, விசைப்பலகை, மென்பொருள், வன்பொருள் என பல கலைச்சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய சொற்கள் உலகத்தில் உருவாகும் போது அதற்கு உரிய சொற்களை ஒவ்வொரு சமூகத்தில் உள்ள மொழியில் நிபுணர்களும் தமது தாய் மொழியில ;உருவாக்கினால், அந்த அந்த தாய்மொழி பன்மொழிச் சமூகத்தில் நின்று வாழ்வதுடன், வளர்ச்சியும் அடையும். பிறமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்தினால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவர் அவர் தாய்மொழி அழிந்துபோகும் என்பது உறுதி.
இலங்கை முதலிய பன்மொழிச் சமூகத்தைக் கொண்ட நாடுகளில் ஒரு இனத்தின் தாய்மொழியினதும், பண்பாட்டினதும் சிறப்புக்களை பரஸ்பரம் அறிந்துகொண்டால், அவர் அவர்களின் பண்பாடும் பாதுகாக்கப்படுவதுடன், தாய் மொழியும் வளர்ச்சி அடையும். தனிநபரும் பன்மொழி அறிவா ளியாக வளர முடியும்.
‘மொழித் திணிப்பு என்பது கொடுஞ் செயலாகும். தன்னைப்போல மற்றவர்களும் தம் தாய்மொழி மீது பற்றுள்ளவராய் இருப்பர்’ என்ற உணர்வை ஒவ்வொரு மனிதனுக்கும் வளர்த்தால், கட்டாயம் தாய்மொழி வளர்ச்சி அடையும் என்பது திண்ணம். இன்று எமது நாட்டிலும் அதிக அளவிலான பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த மொழித் திணிப்பே ஆகும். ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து தன்னுடைய தாய்மொழியுடன் மொழிகளைக் கற்கவேண்டும். ஒரு மனிதன் எத்தனை மொழிகளைக் கற்கின்றானோ அவன் அத்தனை மனித னாவான் என்பது முதுமொழி. இலங்கையில் கடவுச்சீட்டு எடுப்பதற்கு சிங்கள மொழி யிலும் ஆங்கில மொழி யிலும் பிறப்புக் கொப்பி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆனால், தமிழ் மொழியில் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை. இதுவும் ஒரு மொழித் திணிப்பின் வடிவமே. இவ்வாறான விடயங்களை அறிந்து அதற்கு எதிராக போரா டினால், தாய்மொழி வளர்ச்சி அடையும்.
இலங்கையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப் படுத்த தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் நியதிச் சட்ட நிறுவனமாக 2007 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சட்டத்தின் படி தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சரியாக மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தி, உலகத் தாய் மொழித் தினத்தில் அவர் அவர் தாய்மொழிக்குக் கௌரவம் செய்து, தொலைக் காட்சி, வானொலி, இணையம் சுற்று நிருபங்கள், அறிக்கைகள், விண்ணப்பங்கள் முதலி யன அவர் அவர் தாய் மொழி யில் மூலத்தை அரசாங்கம் வெளியிடுவதன் மூலமும் பாதுகாப்பினருக்கும் அரச ஊழியருக்கும் மும்மொழியைக் கட்டாயமாக்குவதன் மூலம் தாய்மொழி பாதுகாக்கப்பட்டு வளர்ச்சி அடையும்.
தனியார், அரசு முதலியோர் மன்றங்களை நிறுவி அவர் அவர் தாய்மொழி வளர்ச்சிக்காக இலக்கிய போட்டிகள், நாடகப் போட்டிகள், பட்டிமன்ற போட்டி கள் என போட்டிகளையும் மொழிகள் சம்பந்தமான விழிப்பு ணர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் தாய்மொழி வளர்ச்சி அடையும். சான்றாக, 2010 களில் முதற் தடவையாக இலங்கையில் அதுவும் வட மாகாணத்தில் எழுத்தாளரும் ஆய்வாளருமான புயல் பெ.ஸ்ரீகந்தநேசன் அவர்கள், தாய் மொழி வளர்ச்சி மன்றம், ஒன்றை ஸ்தாபித்து, பல எதிர்ப்புக்கள் மத்தியில் இன்றும் அவர் அவர் தாய்மொழிகளின் வளர்ச்சிக்குப் பல பணிகளைப் புரிந்து வருகின்றார்.
எனவே, பன்மொழிச் சமூகத்தில் மேலே காட்டியதைப்போல நடைமுறை விடயங்களைப் பின்பற்றினால், கட்டாயம் அவர் அவர் தாய்மொழி வளர்ச்சி அடையும். சட்டங்கள் அரசினால், இயற்றப்பட்டால், அது கட்டாயம் நடைமுறைப்படுத்தினால், இன ஐக்கியமும் மொழி சமவுரி மையும் பண்பாடும் தாய் மொழியும் பாதுகாக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
முற்றும்.
‘இவ் ஆய்வுக்கட்டுரை 2019இல் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் 112ஆவது குருபூசை தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில், வடக்கு மாகாண ரீதியில் முதலாம் இடம் பெற்றது.’
குறிப்பு :- சர்வதேச தாய் மொழித் தின சிறப்பு ஆய்வுக்கட்டுரை.
படைப்பு :- புயல் பெ.ஸ்ரீகந்தநேசன்,
சர்வதேச தமிழ் எழுத்தாளர் – ஆய்வாளர், தலைவர் – தாய்மொழிக் கலை மன்றம், யாழ்ப்பாணம்.