உள்ளூர் மைதானம் மும்பைக்கு மீண்டும் கைகொடுக்குமா?

700

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நடப்புச் சாம்பியனான மும்பை அணி, இந்தியாவில் நடைபெற்ற 2 ஆட்டங்களையும் வென்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்த 2 ஆட்டங்களும் மும்பையில் நடைபெற்றவையாகும். அதனால், பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக மும்பையின் வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டம் அந்த அணிக்கு கைகொடுக்குமா என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

மும்பை வெற்றி பெற்ற 2 ஆட்டங்களும் வலுவான பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு எதிரானவையாகும். உள்ளூரில் விளையாடும் ஆட்டங்களில் மும்பை வீரர்கள் அசாத்தியமான செயல்பாட்டை அளித்து வருகின்றனர். இது, 2 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னைக்கு எதிராக சாத்தியம் ஆகுமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

மும்பை அணியில் ரோஹித், போலார்டு, சிதம்பரம் கெüதம் ஆகியோர் கடந்த 3 ஆட்டங்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலு சேர்த்துள்ளனர். மும்பைக்கு தொடக்கம் சிறப்பாக அமையாததும், கோரி ஆண்டர்சன், அம்பாட்டி ராயுடு ஆகியோர் தங்களது ஆட்டத்தை தொடங்காததுவும் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

சென்னையைப் பொறுத்தவரை பேட்டிங் துறை வலுவாக இருந்தாலும், பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாபின் மேக்ஸ்வெல், சென்னை வீரர்களின் பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் விளாசினர். இதே பாணியிலான ஆட்டத்தை மும்பை வீரர்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில் சென்னை அணியின் வெற்றி கேள்விக்குறியாகும்.

சென்னையின் தொடக்க வீரரான வேயன் ஸ்மித்துக்கு, மும்பை மைதானம் ராசியானது என்பதால், அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை சென்னை ரசிகர்கள்

எதிர்நோக்கி உள்ளனர். சென்னையுடன் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் 3இல் மும்பை வெற்றி பெற்றுள்ளது. இந்த விகிதத்தை மாற்ற சென்னை வீரர்கள் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

 

வாழ்வா-சாவா ஆட்டத்தில் டெல்லி

பீட்டர்சன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் எதிர்பார்த்த அளவு ஜொலிக்காததால், புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில், தில்லியில் சனிக்கிழமை நடைபெறும் ஹைதராபாதுடனான ஆட்டத்தை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற சூழல் டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தில்லியில் இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் டெல்லி அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இத்தொடரில் வெறும் 2 வெற்றிகளை மட்டும் பதிவு செய்துள்ள டெல்லி, ஐபிஎல் தொடரில் தற்போது எழுச்சி பெற்றுள்ள ஹைதராபாதை வீழ்த்துவது சவாலானது.

SHARE