தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர்.

338

 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர் கட்சிதலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ அற்றவர். – இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வரமாறு:- வழமைகள் சம்பிரதாயங்கள் போன்றவற்றை நாம் இன்றைய சூழ்நிலையில் கணக்கில் கொள்ளமுடியாது. ஒரு குறிப்பிட்ட இனமோ, குழுவோ எடுத்த முயற்சி என்றில்லாமல் நாட்டுமக்கள் அனைவரும் இணைந்து ஏற்படுத்திய இரத்தம் சிந்தாத அமைதியாக ஏற்படுத்தப்பட்ட புரட்சியே இன்றைய நிலைமைக்குக் காரணம். அதற்கு அரசியல் கட்சிகள்கூட உரிமை கோரமுடியாது.

Tamil-MPs-happy-party-2013-7

தமிழ் மக்கள் தம் வழிநடத்தலுக்கு ஒத்துச் செயற்பட்டனர் என்று நாடாளுமன்றத்தில் சம்பந்தனும், ஊடகங்கள் மூலமாக மாவை சேனாதிராசாவும் நன்றி கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஆனால் இவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுவதற்கு முன்பே தபால் மூலம் 500,000க்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்துவிட்டார்கள். பொது வேட்பாளரின் பெயர் தெரியப்படுத்தப்படுவதற்கு முன்பே நாடுபூராவும் மக்கள் அத்தகைய வேட்பாளருக்கு வாக்களிக்க தீர்மானித்துவிட்டார்கள். வேட்பாளர்களின் பெயர் வெளியாகியவுடனேயே தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆதரவை பொது வேட்பாளருக்குத் தெரியப்படுத்தி ஊடகங்கள் மூலமாக அறிக்கை வெளியிட்டது. எனது அபிப்பிராயத்தின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வை மக்களிடமே விட்டிருக்கவேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் இன்னும் கூடுதலான வாக்குகளை பொதுவேட்பாளர் பெற்றிருக்கமுடியும். எதிர் கட்சித் தலைவர் பதவியைப் பற்றி கூறுவதற்குமுன்பு தேசிய நிறைவேற்றுக் குழுவில் சம்பந்தனை நியமித்தது புத்திசாலித்தனமற்ற செயல் என்பதைச் சுட்டிக் காட்டவிரும்புகின்றேன். ஏனெனில் அச்சபை மந்திரி சபையிலும் பார்க்க அதிகாரம் கூடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறானால் சரியோ பிழையோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முகவராக சம்பந்தன் செயற்படுகின்றார் என்ற கருத்தே மக்களுக்கு ஏற்படுகின்றது. பிரதமரின் நடவடிக்கை எனது சிந்தனைக்கு வலுவூட்டுகின்றது. சிறுபான்மை மக்களை அவர் புறக்கணித்து அநாதைகளாக்கிவிட்டார். உண்மையில் பகிரங்கமாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சம்பந்தனையும் வளர்க்க உதவுவதால், நேரடியாகச் சிறுபான்மை மக்கள் அவமதிக்கப் படுகின்றனர். 60 ஆண்டுகளுக்குமேல் நான் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதோடு ஒருகாலத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒருகட்சியின் தலைவராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தவன்.

நாடாமன்றத்தை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை எதிர்த்து ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் பதவிகளைத் துறந்த ஒரேயொரு கட்சியாகவும் எனது கட்சி இருக்கிறது. இத்தகைய பெறுமதி மிக்க கட்சியை ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்ட ஓர் அமைப்பைக் கொண்டு முற்றுமுழுதாக அழிக்கமுயற்சித்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. பிரதமர் யாழப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகிய நான் அங்கிருந்தபோதும் பிரதமர் என்னைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறுபான்மைக் கட்சிகளை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாகவுள்ளார். சகல கட்சிகளும் ஆதரவுவழங்கியும் அக்கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படத் தவறிவிட்டார்.

சிறுபான்மைக் கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறை தானே தீர்த்துவைக்காமல் ஜனாதிபதி உதவியை நாடி தோல்விகண்டவர். 2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 95 வீதம் வாக்குகளைப் பெற்று 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்தது உலகில் எந்தநாட்டிலும் நடக்காத பெரும் மோசடியாகும். இதே த.தே.கூ 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்து வீதமானவாக்கு களைக்கூட பெறமுடியவில்லை. உதாரணமாக ஏழரை லட்சம் வாக்காளர்களைக் கொண்ட யாழ். தேர்தல் மாவட்டத்தில் 63,000 வாக்குகளையேபெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் கூட யாழ்ப்பாணத்தில் மீளக் குடியமர்த்த எதுவித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. இத்தகைய அமைப்பின் தலைவர் ஒருபொறுப்புள்ள பதவியை அடைய வேண்டுமானால் மேலே கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு உடன் பரிகாரம் தேடவேண்டும்.

SHARE