பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் தான். அதற்கு இணையான உணவு வேறு எதுவுமே இல்லை. சிசேரியன் மூலம் குழந்தை பிறந்திருந்தாலும் அதற்கு அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்திகளும் தாய்ப்பாலிலேயே கிடைத்து விடுகின்றன.
குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 அல்லது 3 ஆண்டுகள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். அதனால் குழந்தையும், தாயும் ஆரோக்கியமாக இருப்பார்களே தவிர குறை ஒன்றும் ஏற்படாது. அப்படி தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடாலோ, தொற்று நோயாலோ மரணம் ஏற்படாது. அதே நேரத்தில் தாய்ப்பாலை குறைவாக குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வகையில் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
குழந்தை பிறந்தவுடன் தண்ணீர், காய்ச்சிய நீர், சர்க்கரை கலந்த நீர், தேன், விளக்கெண்ணெய், கழுதைப் பால், ஆட்டுப்பால் கொடுப்பது, கழுதை ரத்தத்தை நாக்கில் தடவுவது, தங்கத்தால் நாக்கை தடவுவது போன்ற செயல்கள் செய்யவே கூடாது. அவ்வாறு செய்வது தொற்று நோய் கிருமிகளை நாமே குழந்தையின் உடலுக்குள் செலுத்துவது போன்றது.
மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் ரத்த வங்கிகள் போன்று தாய்ப்பால் வங்கிகளும் தற்போது உள்ளன. தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை விலை கொடுத்து வாங்கி அதை பாதுகாத்து தேவை உள்ளவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பால் கொடுக்க இயலாதவர்கள் இந்த பாலை விலை கொடுத்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.
சீனா ஒருபடி மேலே போய், தாய்ப்பாலில் காபி, டீ, பால் இனிப்பு போன்றவற்றை தயார் செய்து கொடுக்கிறது. ஓட்டல்களில் மார்பக பாலில் தயாரான டீ என்று கூடுதலான விலைக்கு விற்கிறார்கள். இதற்காகவே தாய்ப்பாலை தினமும் விற்கும் பெண்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. விலங்குகளின் பாலில் செய்யப்படும் உணவுப் பொருட்களை விட மனிதப் பாலில் இருந்து செய்யப்படும் உணவுகள் ருசியாக இருப்பதாலும் இதற்கு அதிக கிராக்கி இருக்கிறது. சீனாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தாய்ப்பாலில் போடப்பட்ட டீ, காபியை குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அங்கு தாய்ப்பால் சிறந்த வியாபாரமாக மாறி வருகிறது.