பதவியைப் பிடித்த பான் கீ மூன்

336

2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்-  ஜொங் தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான Dong-A Ilbo வெளியிட்டிருக்கிறது.

தாம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி, சிறிலங்கா சார்பில் 2006ம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவை போட்டியில் இருந்து விலக வைத்ததுடன், பான் கீ மூனை ஆதரிக்கச் செய்ததாகவும், தென்கொரிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் ஆரம்பக்கட்டத்தில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சுராகியாட் சதிராதை மற்றும் ஐ.நாவின் உதவிச்செயலராக இருந்த இந்தியாவின் சசி தாரூர் ஆகியோருக்குச் சாதகமாக இருந்தது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் மூன்று கட்ட வாக்களிப்புகள் நடத்தப்பட்ட போதும் வெற்றியாளரைத் தெரிவு செய்ய முடியவில்லை.

இந்தநிலையில், 2006 செப்ரெம்பர் இறுதியில், ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகி, பான் கீ மூனுக்கு ஆதரவளித்ததையடுத்து, அவர் ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.

சிறிலங்காவின் ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகியதையடுத்து, ஒக்ரோபர் 2ம் நாள் நடந்த நான்காவது கட்ட வாக்களிப்பில், பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில், 14 நாடுகளின் வாக்குகளை பான் கீ மூன் பெற்றார். ஒரு நாடு வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, 2006 ஒக்ரோபர் 13ம் நாள் பான் கீ மூனை ஐ.நா பொதுச்சபை தெரிவு செய்தது.

சிறிலங்கா அதிபருடனான தனது தனிப்பட்ட நெருக்கமே, இதனைச் சாதிக்க உதவியதாக, தனது நண்பர்களிடம், தென்கொரியத் தொழிலதிபர் சங் கூறியுள்ளார்.

ஜயந்த தனபால வெற்றிபெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால்,பான் கீ மூனுக்கு ஆதரவளிக்கும்படி தான் மகிந்த ராஜபக்சவிடம் கோரியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த உதவிக்காக பான் கீ மூன் தொழிலதிபர் சங்கிற்கு நன்றி கூறியதாக Dong-A Ilbo நாளிதழ் தெரிவித்துள்ளது.

சங்கின் கட்டுமான நிறுவனம் 1978ம் ஆண்டு சிறிலங்காவில் நுழைந்து, அங்கு வீடமைப்பு மற்றும் உட்கட்டுமானத் துறைகளில் ஈடுபட்டு வருகிறது.

சங் கடந்த 9ம் நாள் தற்கொலை செய்து இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

முன்னாள் தென்கொரிய அதிபர் லீ மயூங்- பக்கின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த மோசடிகளுடன் தொடர்புடையதாக இவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

hindha

SHARE