ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம். எம்பிராய்டரி செய்யப்பட்டு சிக்கலான வடிவங்களை ஜரிகையில் பார்டர்கள் மற்றும் பல்லுவில் நெய்வதால் இந்தச் சேலைகள் மணமகள் அணியும் சேலையாகவும் உள்ளது. பாரம்பரிய அழகு மற்றும் நவீன வடிவமைப்புடன் இருக்கும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் பட்டு குடும்பத்திலும், பேஷன் உலகிலும் புகழ் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.
தோற்றம் மற்றும் வரலாறு
ஆந்திராவின் ராயல்சீமா பகுதியில் அமைந்துள்ள அனந்தபூர் மாவட்டத்தின் கிராமப்புறத்தில் அமைந்துள்ள தர்மாவரம் என்ற சிறிய கட்டமைக்கப்பட்ட நகரத்திலிருந்துதான் இந்தப் பட்டுச்சேலைகள் உருவாகின்றன. இந்தப் பட்டுச் சேலைகள் நூற்று இருபது ஆண்டுகள் பழமையானவை.
மஞ்சள் மற்றும் மெரூன் வண்ணச் சேர்க்கையில் நெசவாளர்களால் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட சேலைகள் திருமணப் புடவையாகவே கருதப்பட்டது. இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்த ஷேட்டுகளுடன் வரும் இந்தப் பட்டுச்சேலைகள் ஒரு தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவைப் பெற்ற என்றே சொல்லலாம்.
இன்றைய நிலை
குறைந்த எண்ணிக்கையில் துவங்கப்பட்ட தர்மாவரம் நெசவு உற்பத்தியானது இன்று ஆயிரத்து ஐநூறு பட்டு உற்பத்தியாளர்களுடன் ஒரு லட்சம் கைநெசவையும் கொண்டுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் தூய்மையான ரகம் மற்றும் வடிவமைப்பால் இன்று உலகளவில் லட்சக்கணக்கான மக்களிடையே புகழ் மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் விலை வரம்பானது ரூபாய் இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருப்பதும் இதன் புகழுக்கு மற்றொரு காரணியாகும்.
புடவையில் இடம் பெறும் வடிவமைப்புகள், ஜரிகை மற்றும் எம்பிராய்டரி போன்றவை அதன் விலையைத் தீர்மானிக்கின்றன. தர்மாவரம் புடவையின் இரண்டு வண்ணங்கள் இணைந்து தரும் ஷேடுகள் தர்மாவரம் பட்டின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றது.
வகைகள்
தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை, பார்டர்கள் மற்றும் அவற்றில் பிரிண்ட் செய்யப்பட்ட கலைப் படைப்புகளுக்கு தர்மாவரம் புடவைகள் மிகவும் பிரபலமானவை. இவை தவிர கோயில்களிலும் பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள மதச் சின்னங்களை ஒத்த தங்க ப்ரோக்கேட் வடிவங்கள் மற்றும் உருவங்களும் இந்த பட்டுச் சேலைகளில் பொரிக்கப்படுகின்றன.
யானை வடிவமைப்புகள், மயில்கள் அல்லது அழகிய கோயில் எல்லைகளாக இருந்தாலும், இந்த கருக்கள் மற்றும் வடிவமைப்புகள் இந்த புடவைகள் மூலம் மதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இதனால் இவை உலகளவில் மட்டுமல்லாமல், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகின்றன.
இன்றைய தர்மாவரம் புடவைகள் அலங்காரக்கற்கள், சம்கிகள், சீக்வின்ஸ்கள் மற்றும் குந்தன்கள் ஆகியவற்றால் புதுமையாக அலங்கரிக்கப் படுகின்றன. அவை ஒரே நிறத்திலோ அல்லது பல வண்ணங்களைக் கொண்டோ புடவையின் வண்ணத்திற்கு ஏற்றாற்போல் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த கலைப்படைப்பானது தர்மாவரம் பட்டுப் புடவைகளில் மட்டுமல்லாமல் தர்மாவரப் பட்டில் தயாரிக்கப்படும் சல்வார் கமீஸ், குர்திஸ், ஸ்கார்ஃப்ஸ் மற்றும் ஸ்டோல்களிலும் இருப்பதைக் காண முடியும்.
பொருந்தக்கூடிய தன்மை
தர்மாவரத்தில் தயாராகும் பட்டுப்புடவைகள் முக்கியமாக தென்னிந்திய மணப்பெண்களுக்கான ‘திருமணப் புடவை’ என்ற அடையாளத்துடனும் குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பட்டுப்புடவைகளின் கம்பீரமான தோற்றமும், பாரம்பரிய வடிவமைப்பும் மத விழாக்கள், திருமணங்கள், குடும்ப விழாக்கள், பூஜைகள் என அனைத்திற்கும் அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது.
இந்தப் பட்டுச் சேலைகள் இந்திய அளவில் மட்டுமல்லாமல், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என சர்வதேச அளவிலும் கால் பதித்துள்ளன. பல வெளிநாடுகள் தர்மாவரம் பட்டு வெளிப்படுத்தும் ராயல்டி மற்றும் நேர்த்தியைப் பாராட்டுகின்றன. அத்துடன் இந்த பட்டுப்புடவைகளின் பாரம்பரிய அம்சத்தையும் அங்கீகரித்து வருகின்றன.
இந்தப் பட்டுப்புடவைகள் தங்கம் மற்றும் வைர நகைகளுடன் அணிய ஏற்றவை என்று சொல்லலாம்.
தர்மாவரம் பட்டுத்துணியானது கனமாகவும், அதே நேரத்தில் மென்மையாகவும் இருப்பதால் இவற்றை உலர் சலவை செய்து இஸ்திரி போடுவதே உகந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சேலைகளின் பிரத்யேக வண்ணச் சேர்க்கைகள் மற்றும் பல்வேறு வகையான இன வடிவமைப்புகளால் ராஜ்வாடி புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இயந்திரம் மற்றும் கைநெசவின் மூலம் தயாரிக்கப்படும் இந்தப் பட்டுப் புடவைகளில் அடிப்படையாக இருபத்தி ஆறு டிசைன்கள் உள்ளன.
ஒரு புடவையை கைநெசவின் மூலம் உருவாக்க இரண்டு நெசவாளர்கள் தொடர்ச்சியாக நான்கிலிருந்து எட்டு நாட்கள் வரை தங்கள் உழைப்பைத் தர வேண்டியுள்ளது. பிரம்ம கமலம் மற்றும் நட்சத்திர டிசைன்கள் இந்தச் சேலைகளில் மிகவும் பிரபலம் என்றே சொல்லலாம்.
எழிலான தோற்றம் தரும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய புகழைப் பரப்பியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.