தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள்

363
குழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை

குழந்தைகளை பாதிக்கும் தூக்கமின்மை
குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர் பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். தூக்கம் வராமல் தவிப்பது, நள்ளிரவில் திடீரென்று எழுவது, படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது போன்றவை தூக்கமின்மையின் அறிகுறியாக இருக்கலாம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

* பகல் வேளையில் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது தூக்க கோளாறு பிரச்சினைக்கு ஆரம்பகட்ட அறிகுறியாகும். சிலவேளைகளில் சோர்வு காரணமாக பகலில் அயர்ந்து தூங்கலாம். ஆனால் தொடர்ந்து பகலில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

* குழந்தைகளுக்கும் கனவுகள் வரக்கூடும். இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள் சில சமயங்களில் கனவின் பிரதிபலிப்பால் திடீரென்று பயந்து போய் எழுவார்கள். அதன்பிறகு தூக்கம் வராமல் விளையாட தொடங்கிவிடுவார்கள். இதனால் குழந்தையின் தூக்கம் பாதிப்புக்குள்ளாவதோடு வேறு சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

* குழந்தைகள் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் தூங்க வேண்டும். அதுதான் சரியான தூக்கம். தூக்கம் வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அது தூக்கமின்மை பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளால் ஆழ்ந்து தூங்க முடியாது. அவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் கண்விழித்திருப்பார்கள்.

* சில குழந்தைகள் தூங்கும்போது குறட்டை விடுவார்கள். அதனால் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதோடு தூக்கமின்மையும் உண்டாகும். மூக்கடைப்பு, சுவாசக்கோளாறு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று போன்றவை குழந்தைகளுக்கு குறட்டை ஒலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள். எனினும் தொடர்ந்து குறட்டை பிரச்சினை இருந்து வந்தால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறலும் ஏற் படக்கூடும். அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.

* தூக்கத்தில் கனவு வந்து எழுவதற்கும், எதையாவது நினைத்து பீதியில் விழித்தெழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்து திடீரென்று அலறுவது, அழுவது, எதையாவது மனதில் நினைத்துக்கொண்டு பேசுவது, வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது, வியர்வை வெளிப்படுவது, பதற்றம் அடைவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால் 3-4 தடவைக்கு மேல் அப்படி செய்தால் அது தூக்கமின்மைக்கான அறிகுறியாகும்.

* சில குழந்தைகள் திடீரென்று கண்விழித்து எழுந்து நடப்பார்கள். அப்போது சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த வழக்கம் அடிக்கடி நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமானது.

SHARE