இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானம்

417
பெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்...

பெண்கள் தினமும் அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை அருந்தினால்…
சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட பானத்தை பருகுவது இதயத்தின் செயல்பாடுகளை பலவீனமாக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்கும் குறைவான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், பதார்த்தங்களைத்தான் உட்கொள்ள வேண்டும். அதுவே 6 டீஸ்பூன் சர்க்கரைக்கு சமமானது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

52 வயது நிரம்பிய 1 லட்சத்து 6 ஆயிரம் பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு சர்க்கரை பானங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சர்க்கரை பானங்களை அரிதாகவோ அல்லது ஒருபோதும் பருகாத பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கன் இதய அசோசியேஷனின் ஊட்டச்சத்துக்குழு தலைவரும் ஆராய்ச்சியாளருமான செரில் ஆண்டர்சன் குறிப்பிடுகையில், “பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் பல வழிகளில் அதிகரிக்கக்கூடும் என்று கருதுகிறோம். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும், இன்சுலினின் செறிவும் உயர்வதற்கும் இனிப்பு காரணமாக இருக்கிறது. பசியை அதிகரிக்கச்செய்து உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். இவை இதய நோய்களுக்கான முக்கிய காரணிகளாக அமையும்” என்கிறார்.

தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட இனிப்பு பானங்கள், தேநீர், சர்க்கரை சேர்க்கப்பட்ட பழச்சாறு, கலோரிகள் அதிகம் கொண்ட குளிர்பானங்கள் பருகும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அரிதாகவோ அல்லது ஒருபோதும் இனிப்பு பானம் அருந்தாத பெண்களாகவோ இருந்தால் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைகிறது.

அமெரிக்கன் இதய அசோசியேஷனின் பரிந்துரையின்படி, பெண்கள் தினமும் 100 கலோரிகளுக்குள் தயாரிக்கப்பட்ட சர்க்கரை பொருட்களை மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆண்கள் 150 கலோரி அளவுக்கு இனிப்பு பொருட்களை சாப்பிடலாம்.

SHARE