‘பெண்கள் பின் தூங்கி முன்எழவேண்டும்’ என்ற நியதி ஏற்கனவே இருந்துகொண்டிருந்தது. பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.
கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். அப்போது கருப்பையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் மல்லாந்த நிலையில் கர்ப்பிணிகளால் தூங்கமுடியாது. கர்ப்பப்பை கொடுக்கும் அழுத்தத்தினால் சிலருக்கு ரத்த ஓட்டமும் பாதிக்கக்கூடும்.
அதனால் அவர்கள் வலது பக்கமாக ஒருக்களித்து படுக்கவேண்டும். அந்த நிலைக்கு அவர்கள் இயல்பாக மாறிய பின்புதான் நன்றாக தூங்கமுடியும். சிலருக்கு வழக்கமாக தூக்கத்தில் கால் தசைகளை இழுத்துப்பிடிக்கும் பாதிப்பு இருந்துகொண்டிருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கர்ப்பகாலத்திலும் அதுபோன்ற அவஸ்தைக்கு உள்ளானால் அவர்களது தூக்கம் வெகுவாக பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.
பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்கமுடியாமல் தவிப்பார்கள்.
பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.
பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.