மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை

408
மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

மாதவிடாய் காலத்தில் உணவுமுறை
மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு கூடும். புரோஜெஸ்டிரானும் உயர்ந்து செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நெருங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தென்படும். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

* உப்பில் சோடியம் உள்ளது. அது மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் உள்ள தண்ணீரின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக வயிற்று பகுதியில் வலி உண்டாகும். எனவே அந்த நாட்களில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் கலந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

* காபி பருகுவதும் வலியை அதிகப்படுத்திவிடும். மாதவிடாய் கால பிற நோய்த்தொற்று அறிகுறிகளையும் அதிகப்படுத்திவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.

* காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்கள், வெண்ணெய், தக்காளி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவு களை உட்கொள்ள வேண்டும். இவை வலியை குறைக்க உதவும். மேலும் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தவும் பொட்டாசியம் உதவும். தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக அதிகம் வெளியேற்றவும் வழிவகுக்கும். மாதவிடாய் நாட்கள் நெருங்கும்போதே இத்தகைய உணவு பழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும்.

* வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின் அளவும் அதிகமாகும். சிறுநீரகங்களும் அதிக சோடியத்தை தக்கவைக்கும் நிலை உருவாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

* உடற்பயிற்சி செய்வதையும் அந்த நாட்களில் தவிர்க்கக்கூடாது. சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் கூட உடலுக்கு இதமளிக்கும். வலி, வீக்கம், தசைபிடிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை கையாளவும் உதவும். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. வீட்டுக்குள் கூட நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டு வேலைகளையும் செய்யலாம். பாலசனா, உத்ராசனா, புஜங்காசனா போன்ற யோகாசனங்களையும் செய்யலாம்.

SHARE