“தேசியத்தலைவர்” என்றால், அது சேர்.பொன்.இராமநாதனா? மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களா?– தமிழ் நெஞ்சங்களிலும், புஞ்சைகளிலும் நஞ்சை விதைக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியினர்!

460

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், கடந்த வருடம் 18 தை அன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் “உழவர் பெருவிழா” நடைபெற்றது.
விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக “உழவே எங்கள் உயிர்” எனும் கவியரங்கம் அரங்கேறியது. தமிழக கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமாகிய யுகபாரதி அவர்களின் தலைமையில், ‘ஏரோட்டல், நாற்றுநடல், நீர்ப்பாய்ச்சல், களையெடுத்தல், உரமிடல், அறுவடை’ எனும் உப தலைப்புகளில் ஈழக்கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
இந்த கவிஞர்கள், ஈழ விடுதலைப்போராட்டம் பற்றியும், தேசியத்தலைவர் பற்றியும், எமை எல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளான மாவீரத்தெய்வங்கள் பற்றியும், இலட்சிய பயணத்துக்காக கொடுக்கப்பட்ட உயிர்த்தியாகங்கள், அர்ப்பணிப்புகள், சேவைகள், விலைகள் பற்றியும், ஈழ இராச்சியத்தின் நடைமுறை நிர்வாக அலகுகள் பற்றியும், தமிழ் மக்களின் மீட்பர்களாகிய தமிழீழ விடுதலைப்புலிப்போராளிகளின் செயல்பாடுகளை ஆதரித்தும், அங்கீகரித்தும், சமகால நாட்டு நடப்புகளை, சமுக கலாசார நெறி பிறழ்வுகளை அக்குவேறு ஆணி வேறாக பிய்த்துதறியும், நோண்டி நுங்கெடுத்தும், தமது கவிதைகளில் மிக மிக நுணுக்கமாக, சூசகமாக, உட்கிடையாக கருத்துகளை பொதித்து வெளிப்படுத்தியிருந்தனர்.
கவியரங்குக்கு முடிவுரை வழங்கிய யுகபாரதி அவர்கள், “தமிழ் நாட்டில் பல கவியரங்குகளை நடத்தியிருக்கிறேன். பல கவியரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கெல்லாம் ஒரு விடையத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விளக்கமாக (வெளிப்படையாக போட்டு உடைத்தல்) எடுத்துச்சொல்கிறோமோ அப்போது தான் கை தட்டல்கள் கிடைக்கும். ஆனால் நீங்களோ, இங்கு ஒரு விடையத்தை பெரும் கஸ்டப்பட்டு எவ்வளவு தான் ஒழிச்சு மறைச்சு சொன்னாலும் கூட, கை தட்டி விடுகின்றீர்கள்.” என்று மனம் ஒப்பி மெச்சியது தமிழர்களின் வேகமும் துல்லியமும் நிறைந்த உய்த்துணரும் புலமைக்கு கிடைத்த மாபெரும் கௌரவ விருதாகும்!
எனவே “இந்த கௌரவ விருதுக்கு நானும் உரித்துடையவன்” என்று கருதுபவர்கள் மட்டும் (Self Confidence) அடுத்த பத்திக்குள் நுழையுங்கள்! விருதுக்கு தகுதியில்லாதவர்கள் உள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.) 
“இந்த நாட்டிலே முதலாவது தேசியத்தலைவர் என்று கூறினால், அது வேறு யாரும் கிடையாது. அது தமிழன் தான் என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தக்காலத்திலே சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசியத்தலைவராக சேர்.பொன்.இராமநாதனை பல்லக்கில் வைத்து சிங்களவர்கள் கொண்டு சென்ற வரலாறு கூட இடம்பெற்றிருக்கின்றது. இதன்மூலம் இந்த நாட்டின் தேசியத்தலைவர் தமிழன் தான் என்பதனை பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.”
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது, குறுமண்வெளி 12ம் வட்டார சக்தி சிக்கன சேமிப்பு கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா உரையாற்றியதாக கடந்த வருடம் தை 21 செவ்வாய் கிழமை அன்று வீரகேசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியாகும்.
(பத்திரிகை செய்தி குறித்த ஒளிப்படம் இணைக்கப்பட்டுள்ளது. – ஒளிப்படத்திலுள்ள செய்தியின் தலைப்பையும், அதன் உப தலைப்பையும் மறுபடியும் மறுபடியும் வாசியுங்கள். அதுபோலவே ஒளிப்படத்தில் சிவப்பு நிறத்தில் கட்டம் இடப்பட்டுள்ள பகுதியையும் மறுபடியும் மறுபடியும் வாசியுங்கள்.)  
என்ன உறவுகளே! புரிந்துவிட்டதா? இப்போது நீங்கள் ஒரு தெளிவு நிலைக்கு வந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். (குழப்பம் இருப்பின், பரவாயில்லை. கால அவகாசம் இருக்கிறது. மறுபடியும் மறுபடியும் வாசியுங்கள்.) இலங்கை தமிழரசுக்கட்சியினர் எங்கே கொண்டு சென்று முடிச்சுப்போடுகிறார்கள்? இந்த மண்ணில் எதை நிறுவ முற்படுகிறார்கள்? எக்கருத்தை இனிவரும் தலை
முறைகளுக்கு கடத்த முற்படுகிறார்கள்? எதை வரலாற்றில் பதிப்பிக்க முனைகின்றார்கள்? எனும் உண்மை இப்போது நன்றே உங்களுக்கு புலனாகியிருக்கும். (இதுபோன்ற நயவஞ்சக வேலைகள், வஞ்சிப்பு கதைகளுக்குத்தான் “வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதல்” எனும் உவமையை எடுகோளாகச்சொல்வார்கள்.)
பொன்.செல்வராசா அவர்களே! 
நம்மிடம் இந்த ‘பூடக சொல்லாடல்கள், சொல் மயக்கங்கள், கிறக்கங்கள், சொல்ச்சித்து விளையாட்டுகள், பூசி மெழுகல்கள், உள்குத்தல்கள்’ வேண்டவே வேண்டாம். ஆகவே ஆகாது!
உணவை வெறுக்கும் சிறுவர்களுக்கு நிறமூட்டிகளை போட்டும், நிலாக்காட்டியும் உணவூட்டும் கைங்கரியம் போல, மன்னிக்கவும் தாய்மார்கள் செய்தால் அது கைங்கரியம். உலுத்தர்கள் செய்தால் அது பசப்பு! இந்த பசப்பு வேலைகள், வார்த்தை ஜாலங்கள் நம்மிடம் செல்லவே செல்லாது.
உலுத்தர்களே! உங்கள் பேச்சில் இடி இருக்கிறது, மின்னலும் இருக்கிறது. ஆனால் மழை தான் இல்லை. இதனால் யாருக்குத்தான் என்ன பயன்?
கடந்த வருடம் தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சி வார காலப்பகுதிக்குள் கூடிய நாடாளுமன்ற அமர்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் “பிரபாகரன் மாவீரன்” என்று பேசிய பேச்சை, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கால தாமதமின்றி மறுத்து, “அக்கருத்து அவரது (சிறீதரனின்) தனிப்பட்ட கருத்தே ஒழிய, எமது கட்சியின் கருத்தல்ல. அது எமது நிலைப்பாடுமல்ல.” என்று பகிரங்கமாகவே கருத்து கூறியிருந்ததையும் இவ்விடத்தில் சுட்டுவது மிகவும் சாலப்பொருத்தமாக இருக்கும்.
நெஞ்சறைக்கூட்டுக்குள் அப்பழுக்கில்லாத சோகங்களோடு, பழுதில்லாத உணர்வுகளோடு உங்களுக்கு, சம்பந்தனின் அக்கருத்தை நினைவூட்ட விரும்புவதோடு,
எங்கள் தேசத்தின் ஆத்மா, எங்கள் இதயத்தின் இயக்கம், எங்கள் நெஞ்சத்தின் ஈரம், எங்கள் வாழ்வின் சாரம், எங்கள் மொழியின் நளினம், நம் சட்டைப்பையின் நாணயம் என்று எல்லாம் எல்லாமுமாகி, எமை செதுக்கியவன், எமை உருவகித்தவன், எமை நிர்வகித்தவன், எமை தேற்றியவன், எமை தாங்கியவன் என்று வாழ்வின் எல்லா காலகட்டங்களுக்கும் எமை எடுத்துச்செல்லும் (விஷ்வ மலை போல் தூக்கிச்செல்லும்),
 
எமது விடுதலை வானின் பேரொளி, தமிழ் இனத்தின் பேராண்மை தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை “மாவீரன்” என்று ஏற்றுக்கொள்ள முடியாத இலங்கை தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சிறீதரன் அக்கட்சியில் தொடர்ந்தும் ஒரு உறுப்பினராக இருக்கப்போகின்றாரா?
அத்தகைய கொள்கைகள் எமது இனத்துக்கு மிகப்பெரும் சாபம், வெட்கம், மானக்கேடு, அவமானம் ஆகாதா?
இவ்விடத்தில் ஒவ்வொரு தமிழ் மகனின், தமிழ் மகளின் ஆத்மாவிலும் மிகப்பலமாக அறைந்து மற்றுமொரு கேள்வியை எழுப்புகின்றேன்.
இந்த நாட்டிலே ‘முதலாவது தேசியத்தலைவர், இரண்டாவது தேசியத்தலைவர், மூன்றாவது தேசியத்தலைவர்’ என்று ஏதேனும் எண்ணிக்கை, அல்லது கணக்கெடுத்தல்கள், இல்லையேல் தரப்படுத்தல்கள் உண்டா? 
சொல்லுங்கள் தமிழ் பேசும் உலக உறவுகளே? நெருப்பாற்று நீச்சலில் அற்புதமான பதிவுகளை நிகழ்த்திய, மிகப்பல அருமையான அத்தியாயங்களை எழுதிய தமிழ் மண்ணில் புதியதோர் சர்ச்சையை கிளப்புகிறது இலங்கை தமிழரசுக்கட்சி.
கவிஞர் யுகபாரதி அவர்கள் கூறியது போல, 
ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை(Concentration)
தெளிவாக புரிந்துகொள்ளல்(Understanding)
போட்டோகிராபிக் மெமரி(Photographic Memory)
வேகமும் துல்லியமும்( Speed&Accuracy) தெரிந்துகொள்ளல்(Comprehension)
படைக்கும் நிலை(Creativity)
தற்சார்பு நிலை(Self Reliance)
தன்னம்பிக்கை(Self Confidence)
கவனித்தல்(Listening)
போன்ற குணவியல்புகளை அபாரமாகக்கொண்டுள்ள தமிழர்களை அவ்வளவு இலகுவில் எவரும் ஏமாற்றி விட முடியாது. ஏய்த்துப்புழைத்து விடவும் முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மறுபடியும் மறுபடியும் வலியுறுத்துகிறேன். நம்மிடம் இந்த ‘பூடக சொல்லாடல்கள், சொல் மயக்கங்கள், கிறக்கங்கள், சொல்ச்சித்து விளையாட்டுகள், பூசி மெழுகல்கள், உள்குத்தல்கள்’ வேண்டவே வேண்டாம். ஆகவே ஆகாது! பசப்பு வார்த்தை ஜாலங்கள் – பேச்சுகள் நம்மிடம் செல்லவே செல்லாது!
காலம் வெகுவிரைவாக உங்கள் எல்லோருக்கும் நல்ல கற்பிதத்தைக்கொடுக்கும். அதற்காகவே ஒவ்வொரு தமிழரும் தவமாய் தவமிருக்கிறார்கள், காலம் கனிந்து வரும் என்ற பெருத்த நம்பிக்கைகளோடு!
‘அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு சிவக்கும். மறுபடி உதிக்கும்.’ என்று, நம்புவோம்! நம்புவோம்! நம்புவோம்!
மெத்த கனிவுடனும், நிறைந்த நம்பிக்கையுடனும்,
இலங்கை முல்லைத்தீவிலிருந்து…
சுயாதீன இளம் ஊடகவியலாளர்
-அ.ஈழம் சேகுவேரா-
unnamed (2)  unnamed
unnamed (3)
SHARE