தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இரு வாரங்களுக்குள் ஆராய குழு ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது எனத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று முற்பகல் 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தை சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: மத்திய குழுக் கூட்டம்தில் முக்கியமாகத் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதன. விசேடமாக 19 ஆவது திருத்தச் சட்டத்தின் விடயங்கள், அதனால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அத்துடன் இனி வரவுள்ள தேர்தல் முறை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தேர்தல் முறை தொடர்பில் ஆராய்ந்து அதன் நன்மை, தீமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. மேலும் இதில் எம்மால் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இரு வாரத்திற்குள் இது தொடர்பாக ஆராய்ந்து தமது அறிக்கையை சமர்ப்பிக்கும். அரசியல் நிலை சம்பந்தமாகவும் அடுத்து வரவுள்ள தேர்தல் காரணமாகவும் எமது நிலைப்பாடு தொடர்பாக கிராம மட்டத்தில் சென்று மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி சம்பந்தமாக முன்வைக்கப்படும் பொய் பிரச்சாரங்கள் குறித்து மத்திய குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து தேவையேற்படின் பதில் அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதைவிட, கட்சி விதிகளை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முக்கியமாக மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனை ஏற்று தேர்தல் ஆணையாளரும் கடிதம் அனுப்பியுள்ளார். கட்சி விதிகளை மீறிய ஏனையவர்கள் தொடர்பாக விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பதில் அனுப்பியவர்கள் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். பதில் அனுப்பாதவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியாக மத்திய குழு தீர்மானித்துள்ளது.- என்றார். இதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் சுமந்திரன் எம்.பி. பதிலளித்தார்.
கேள்வி:- இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன்கெரி, அரசுடன் இணைந்து செயற்படுமாறு கூறியிருந்தார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில்:- ஆட்சி மாற்றத்தின் பின் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்லாட்சியை ஏற்படுத்துவதாகவே புதிய ஜனாதிபதி போட்டியிடும் போது கூறியிருந்தார். அதற்குத்தான் நாமும் ஆதரவு தெரிவித்திருந்தோம். இருப்பினும் இரவோடு இரவாக திடீரென நல்லாட்சி ஏற்பட்டுவிடாது. அது படிப்படியாக தான் ஏற்படும். 19 ஆவது திருத்தச் சட்டம் இதற்கு வாய்ப்பாக அமையும் என்பதே எமது நிலைப்பாடு
. கேள்வி:- வடக்கு முதலமைச்சர் ஜோன்கெரியிடம் வழங்கிய கடிதம் தொடர்பில் ஏதாவது தெரியுமா? பதில்:- அரை மணித்தியால சந்திப்பாகவே அது இருந்ததால் வடக்கு முதலமைச்சர் கடிதம் ஒன்றை கையளித்தார். அதில் வட மாகாண சபை இயங்குவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தொடர்பில் கூறப்பட்டிருந்தன. அதை அவர் கொடுக்கும் போது குறுகிய நேரத்தில் அரசியல் விடயம் பேசப்படுவதால் மாகாண சபை தொடர்பான விடயங்களை எழுத்திலேயே கொண்டு வந்துள்ளேன் எனக் கூறியே அதை இராஜாங்க செயலாளரிடம் கையளித்தார். அதை வாங்கிப் பார்த்துவிட்டு நிறைய வீட்டு வேலை எனக்கு தந்திருக்கு என இராஜாங்க செயலாளர் கூறினார் எனத் தெரிவித்தார். கேள்வி:- உள்ளக விசாரணை தொடர்பில் ஜோன் கெரியிடம் வலியுறுத்தப்பட்டதா?
பதில்:- ஜோன் கெரியிடம் நாங்கள் பேசியபோது அமெரிக்கா இதுவரை எடுத்துள்ள குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் கூறினார். அதேவேளை, புதிய அரசாங்கத்துடன் இணைந்து தீர்க்க வேண்டிய விடயங்களை தீர்க்க அமெரிக்கா உதவும் எனவும் கூறினார். கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், ப.அரியநேந்திரன், பொன்.செல்வராசா, அ.யோகேஸ்வரன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். –