ஆடைகளின் வரிசையில் முதலிடத்திலுள்ள பட்டுப்பாவாடைகள்

476
பெண்களை பரவசமூட்டும் பட்டுப் பாவாடைகள்...

பெண்களை பரவசமூட்டும் பட்டுப் பாவாடைகள்…
பட்டுத்துணிகளால் வடிவமைக்கப்படும் பாரம்பரியத் தென்னிந்திய உடை என்று இவற்றைச் சொல்லலாம். சிறிய பெண் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடைகளை அணிவித்து அழகு பார்ப்பது பொதுவாகவே தென்னிந்தியாவில் வழக்கமான ஒரு நிகழ்வாகும்.

கலாச்சார விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், திருமணம், பிறந்தநாள் விழா, கோவிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி என அனைத்திற்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளின் வரிசையில் முதலிடத்தில் பட்டுப்பாவாடைகள் இருக்கின்றன.

முழுநீளப் பாவாடை மற்றும் ஸ்கர்ட் போன்றவை பட்டுத்துணிகளில் பெண் குழந்தைகளுக்காகத் தைக்கப்படும் பிரபலமான ஆடைகளாகும். பிறந்த குழந்தைகளுக்கு பட்டுப்பாவாடையை அணிவிக்க முடியாது என்பதால் பட்டுத்துணியை ப்ராக் பாணியில் தைத்து விற்பனை செய்கிறார்கள்.

நடக்கும் வயதிலிருக்கும் குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை துணியாகவோ அல்லது ரெடிமேடாகவோ கிடைக்கின்றன. பட்டுப் பாவாடைகளுக்கு மேல் கையில்லாத குட்டைச் சட்டை அல்லது சோளி மற்றும் தாவணி அணிவதும் வழக்கத்தில் உள்ளது. முழுக்கை, முக்கால் கை மற்றும் குட்டைக் கைகளுடனும் சட்டைகளானது பட்டுப் பாவாடைகளின் மேல் அணிய்ப படுகின்றன. குழந்தைப் பருவம் முதல் திருமணமாகும் வரை பெண்கள் பட்டுப் பாவாடைகளை அணிகிறார்கள்.

தமிழகத்தில் பட்டுப்பாவாடை என்ற பெயருடனும், கர்நாடகத்தில் லங்கா தாவணி என்றும், ஆந்திராவில் லங்காவோனி என்றும் மக்கள் இந்த ஆடையை அழைக்கிறார்கள்.

அடர்த்தியான வண்ணங்களில் செல்ப் பார்டர்கள், கான்ட்ராஸ்ட் பார்டர்கள், பெரிய பார்டர், சின்ன பார்டர், பாவாடையின் புற த்தில் ஜரிகை புட்டாக்கள், பாவாடை முழுவதுமே ஜரிகைக் கோடுகள் அல்லது கட்டங்கள் என மிகவும் அருமையாக வடிவமைக்கப்படுகின்றன.

அடர் பச்சை நிறத்திற்கு மெரூன் பார்டர், மாம்பல நிறத்திற்கு பச்சை பார்டர், சிவப்பு நிறத்திற்கு நீல வண்ண பார்டர், மயில் கழுத்து நிறத்திற்கு மெஜந்தா பார்டர், வெண் பட்டு நிறத்திற்கு சிவப்பு பார்டர், கத்தரிப்பு வண்ணத்திற்கு ஆரஞ்சு பார்டர் போன்றவை பட்டுப் பாவாடைகளில் காலம் காலமாக பிரபலமாக இருக்கும் நிறங்களாகும்.

சமீப காலங்களில் இரண்டு மூன்று வண்ணங்கள் இணைந்து வருதும், மென்மையான வண்ணங்களுக்கு அடர்ந்த நிறத்தில் பார்டர்கள் வருவதும் பிரபலமாகி வருகிறது.

பட்டுப் பாவாடை என்றாலே காஞ்சிபுரம் பட்டு என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும். அதுபோல் தர்மாவரம் பட்டு, இளம் பிள்ளைபட்டு, சிறு முகை பட்டு, பனாரஸ் பட்டுத் துணிகளிலும் பட்டுப் பாவாடைகளைத் தைத்து அணிகிறார்கள்.

காஞ்சிப் பட்டில் இருப்பது போலவே பனாரஸ் பட்டிலும் பலவிதமான டிசைன்கள் உள்ளன. பூ டிசைன்கள், ஜ்யாமெட்ரிகல் டிசைன்கள், யானை, மான், அன்னம், மயில் என அனைத்தும் அழகான ஜரி வேலைப்பாட்டுடன் பாவாடைகள் அலங்கரிக்கின்றன.

பட்டுப் பாவாடைகளின் பார்டர்கள் இரண்டு விரல் அகலத்திலிருந்து முழங்கால் வரை உயரமான பார்டர்களாகவும் கிடைக்கின்றன.

கை நெசவு செய்யப்படும் பட்டுப் பாவாடைகளுக்கு தனி மவுசு என்றே சொல்லாலம்.

ஆரி வேலைப்பாடு, ஜரி வேலைப்பாடு மற்றும் பாவாடைகளில் கற்கள் பதிப்பது, முத்துக்கள், ஜர்தோஸி வேலைப்பாடுகளுடனும் பட்டுப் பாவாடைகள் அணியப்படுகின்றன.

பாவாடைகளுக்குத் தைக்கும் ஜாக்கெட்டுகளானது புது வித டிசைன்களுடன் அழகாக வடிவமைக்கப்படுகின்றன.

“பட்டோலா பட்டு, சந்தேரி பட்டு, டிசைனர் பட்டு என பட்டுப் பாவாடைகளில் அட்டகாசமான கலெக்‌ஷன்கள் வந்துள்ளன.

தென்னிந்தியப் பெண்களிடம் ஒரேயொரு பட்டுப் பாவாடைத் தாவணி செட் என்பது கட்டாயம் இருக்கும். பட்டுப் பாவாடைத் துணிகளை எடுக்கும் பொழுது அத்துடன் இணைந்த பட்டுச் சட்டைகளும் வருகின்றன.

குட்டிப் பெண் குழந்தைகள் வண்ணமயமான பட்டுப் பாவாடைகளை அணிந்து கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வது வண்ணத்துப் பூச்சியானது இங்கும் அங்கும் பறப்பது போலத் தோன்றுகிறது.

பட்டுப் பாவாடைகளைத் தைப்பதிலும் பல புதிய பாணிகள் வந்து விட்டன.

நாகரீக மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும் பட்டுச் சேலைகளும், பட்டுப் பாவாடைகளும் அணிந்து கொள்வதில் மாற்றம் இருக்காது.

பட்டுப் பாவாடைகள் பராமரிப்பு:

பட்டு பாவாடைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு கொடிகளில் காற்றாட உலர்த்த வேண்டும்.

பட்டுப் பாவாடையை துவைப்பதாக இருந்தால் முதல் முறை ட்ரை வாஷ் கொடுப்பது நல்லது.

வீட்டில் துவைப்பதாக இருந்தால் ஒரு பக்கெட் நீரில் மென்மையான ஷாம்புவைக் கலந்து அதை நுரை வரும்வரை கலந்து பின்பு பட்டுப் பாவாடையை அந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் இரண்டு மூன்று பாவாடைகள் அல்லது பாவாடைச் சட்டை இரண்டையும் ஒரே சமயம் ஊற வைக்காமல் தனித்தனியாக ஊற வைத்துத் துவைப்பது நல்லது.

அதேபோல் பாவாடையையும் அதிக நேரம் வரை ஷாம்பூ நீரில் ஊற வைக்கக்கூடாது. பாவாடையை மிகவும் மென்மையாக கசக்கி பின்பு மற்றொரு தண்ணீர் நிரப்பிய பக்கெட்டுகளில் ஐந்தாறு முறை ஷாம்பூ நுரை போகும் வரை அலச வேண்டும்.

மற்ற துணிகளை இறுக்கிப் பிழிவது போல் பட்டுப் பாவாடையை இறுக்கிப் பிழியக்கூடாது.

சுருக்கம் இல்லாமல் நிழலில் பட்டுப் பாவாடையைக் காய வைக்க வேண்டும்.

உலர்ந்த பட்டுப் பாவாடைகளை சாதாரணமாக மடித்து பருத்தித் துணிகளில் சுற்றி வைக்க வேண்டும்.

எப்பொழுது பட்டுப் பாவாடையை உபயோகிக்கப் போகிறோமோ அப்பொழுது இஸ்திரி செய்வது நல்லது.

SHARE