தமிழ் தேசியத்தை பாராட்ட வடகிழக்கு தமிழர் தாயகமாக இணைக்கப்பட வேண்டும் இல்லையேல் ஆபத்து

478

இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தம் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய அரசியல் கட்டமைப்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய போராளிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழினத்தை அடக்கியாளுகின்ற ஒரு நிலைமையை தற்பொழுது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒருபக்கத்தில் இருந்தாலும் மறுபக்கத்தில் தமிழின சுத்திகரிப்பு மறைமுகமாக இந்த நாட்டில் இடம்பெற்றுவருகிறது. தற்பொழுது இருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதனூடாகவே தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை முன்னெடுத்து செல்லமுடியும். நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஒருசில அணுகுமுறைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்தும் இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கிறது. இதில் அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதியான கொழும்பு மாவட்ட முன்னாள் ஆளுநர் அசாத்சாலி, முன்னாள் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதின் ஆகியோரின் கைதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்வலைகளுக்கு முக்கிய காரணமாக இலங்கைத்தீவில் சஹரானினுடைய குண்டுத்தாக்குதலே அமைந்தது. முஸ்லிம் தீவிரவாதிகள் இந்த நாட்டில் தாக்குதலை நடத்தியிருந்தது என்பது வேறு, தமிழீழ விடுதலைப்புலிகளின் இலங்கை அரசாங்கத்துடனான மோதல் என்பது வேறு. இரண்டையும் ஒன்றுடன் ஒப்பிட்டு சிறுபான்மையின மக்களை பயங்கரவாதிகள் என அரசாங்கம் முத்திரை குத்தியிருப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது ஒன்று.
ஆகவே தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் கட்டமைப்பை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் திரைமறைவில் ஆரம்பிக்க வேண்டும். எல்லா விடயங்களையும் அரசாங்கத்துடன் பேசி அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது பகல் கனவு. போருக்கு முன்னரான காலப்பகுதி என்பது வேறு, போருக்கு பின்னரான காலப்பகுதி என்பது வேறு. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் அரசியல் தலைவர்கள் அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக செயற்பட வேண்டுமே தவிர இணக்க அரசியலை மேற்கொள்வதனூடாக தமிழ் பேசும் மக்களுக்கான இலக்கை நாம் அடைந்துவிட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை இந்த கொரோனா வைரஸினுடைய தாக்கம் ஒருபுறம் இருக்க இதற்குள் சீன அரசாங்கம் தனது சர்வதேச விகார பரவலாக்கத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தது. இதற்கு துணைபோகின்ற ஒரு நடவடிக்கையாகவே இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கைகோர்த்துள்ளது.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் கொரோனா வைரஸை பரப்பிய சீனா உலகில் சர்வதிகார நாடாக கருதியோ என்னவோ இலங்கையரசு கண்மூடித்தனமான செயற்பாடுகளிலே களமிறங்கியுள்ளது. ஆனால் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேரப்போகின்ற அல்லது நேர்ந்துகொண்டிருக்கின்ற அபாயத்தை சற்றும் சிந்திக்காதவர்களாகவே இலங்கை அரசு செயற்படுகிறது. எது எவ்வாறிருப்பினும் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்வை என்ற பழமொழிக்கு அமைவாக அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக ஒரு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டாலும் மாற்று நடவடிக்கைகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வியூகங்களை வகுத்து தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்பட வேண்டும். தொடர்ந்தும் இந்த நாட்டில் அரசியலை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று தற்பொழுது இருக்கும் அரசாங்கம் நினைக்குமானால் இந்த நாட்டில் மீண்டுமொரு இனக்களவரம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. விடுதலைப்போராட்டத்தை மலுங்கடிக்க செய்துவிட்டோம் என்ற மமதையில் தமிழ் தேசிய மக்கள் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத சூழல் உள்ளது. வடகிழக்கு, மலையகம் உட்பட வாழுகின்ற தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப்போராட்டமே இந்த நாட்டில் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது சுயலாப அரசியலுக்காக அவர் போரிடவில்லை. ஆகவே தான் அவர் பற்றி உலக நாடுகளும் பேசுகின்றன. ஒரு இனவிடுதலைக்கான போராட்டத்தை கையிலெடுப்பவர்கள் மீது பயங்கரவாத சாயம் பூசுகின்ற நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுப்பது வழமை. அதற்காக ஒரு இனத்தை அடக்கியாளுகின்ற பொழுது அதன் கொடுமைகளை சகித்துக்கொண்டு அனைவராலும் இருக்க முடியாது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் தரப்பு அதிதீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கொரோனா வைரஸை காரணம் காட்டி அரசியல் நிலைப்பாடுகளுடைய கவனம் வேறு திசைக்கு திருப்பப்படுகிறது. பூகோள அரசியலினை கருத்தில் கொண்டு சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு திட்டத்தினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை தமிழ் தரப்பு மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக யுத்தத்தின் பின்னரான காலப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், பௌத்த சிலைகளை இலங்கையின் வடகிழக்கு பகுதியில் நிறுவுதல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களில் பௌத்த விகாரைகளை கட்டுதல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் குருந்தூர் மலை, வெடுக்குநாரி, ஒதியமலை போன்ற தமிழர்களின் தொண்மைவாய்ந்த நிலப்பகுதிகள் பௌத்த இனவாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்யப்பட்ட 1 இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சமாதிகட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடருமானால் காலப்போக்கில் தமிழர் தாயக பிரதேசங்களில் இருக்கக்கூடிய தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகள் மட்டுமன்றி தமிழினம் வாழ்ந்த இடங்களும் இல்லாதொழிக்கப்படும் சூழல் உருவாகும். ஆகவே தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இதனை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க மாற்று வழிகளை அமைத்து செயற்பட வேண்டும் இல்லையேல் ஆபத்து.

SHARE