இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கி அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது சட்டங்கள்  தமிழர்களுக்கு எதிரான வையாகவே இருந்தன

506

 

தமிழர்களால் இலங்கை என்றும், அனைவராலும் சிலோன் என்றும் அழைக்கப்பட்டு வந்த எமது நாடு அந்நிய ஆட்சியிலிருந்து விடுபட்டு ஸ்ரீலங்கா என்று அழைக்கப்பட தொடங்கியதிலிருந்து இனவாதப் பிரச்சினை தலைவிரிக்கத் தொடங்கிற்று. அரசினால் இயற்றப்பட்ட புதுப்புது சட்டங்கள் ஏதோ வொரு வகையில் தமிழர்களுக்கு எதிரான வையாகவே இருந்தன.


1958ம் ஆண்டு சிறீகுழப்பம் என்கின்ற பெயரில் ஆரம்பமான அடக்குமுறை இனப்பிரச்சினைக்கு வழியமைக்க பிரச்சினை மேலும் அதிகரிக்கின்றது. கல்வித் தகைமை, திறமை ஆகியவற்றில் சிறந்து இலங்கையின் பல்வேறு திணைக்களங்கள், அலுவலகங்களில் அதிகாரம் செலுத்தக்கூடிய தமிழர்கள் முதல் பாமரத் தமிழர்கள் வரையில் அனைவரும் ஏதோவொரு வகையில் இனப்பிரச்சினைக்கு முகம் கொடுத்தல் அதிகாரிக்களாயிற்று.
தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்த மூத்த தமிழ் பேசும் அரசியல் வாதிகள் அறவழிப்போராட்டம், சாத்வீக போராட்டம் என்ற பெயருக்குள் உட்பட்ட ஜனநாயக ரீதியாக எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் சாண் ஏற முழம் சறுக்குவதாகவே இருந்தது. சுதந்திரத்திற்காக பாடுபட்டதற்காக குதிரை வண்டியில் தம்மைப்பிணைந்து தமிழனை இழுத்து வந்த சிங்களவர்கள் வண்டிசெல்லும் பாதைக்கு ஊற்றப்படும் கொதிக்கும் தாரினால் தமிழர்களின் உயிருக்கு அபிஷேகம் செய்கின்ற நிலைமையே காணப்பட்டது.
தமிழரின் பூர்வீக பிரதேசமான வடக்கு, கிழக்கில் மாத்திரம் போரட்டங்கள் நடத்துவதினால் அதிகளவில் பலன் கிடைக்கப்போவதில்லை. போராட்டத்தை சர்வதேசமயப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் போராட்டம் காலிமுகத்திடல் நோக்கி பயனித்து தமிழ்த்தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து ‘சத்தியாக்கிரக போராட்டத்தில்’ ஈடுபட்டபோது வெறிபிடித்த சிங்களவர்களால் அடித்து உதைத்து நொறுக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டு போராட்டம் சிதறடிக்கப்பட்டபோது தமிழ்த்தலைவர்கள் செய்வதறியாத நிலையில் நின்ற போது தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம் தமிழர்களை இனிக்கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தமது இயலாமையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
அறவழி, சாத்வீகம் எதுவுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக இல்லை. காலத்திற்குக்காலம் சிங்களத்தலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றது. இனவெறி, கொலைவெறி, மாறி மாறி அரங்கேறுகிறன. தமிழ் மக்களின் அவலம் தலைவிரித்தாடி இடப்பெயர்வு, சொத்திழப்பு, உயிரிழப்பு அங்கவீனமென அதிகரிக்கின்றது. இனக்கலவரம் அதிகரித்து தெற்கிலிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இரத்த ஆறு நீராகப் பெருக்கெடுத்து ஓடலாயிற்று. இனியும் பொறுக்கமுடியாதென்ற நிலைக்கு வந்த இனப்பற்றுக் கொண்ட தமிழ் இளைஞர்கள் பல்வேறு இடங்களில், வௌ;வேறு தளங்களிலிருந்து ஒரே நோக்கத்திற்காக புறப்படுகின்றார்கள்.காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சப்போவதில்லை என்று உணர்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழ் புலிகள் என்கிற பெயரில் போராட்டக் குணங்கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக களத்திற்கு வருகின்றார்கள். அப்போது கற்றறிந்தோர் என்று சொல்லக்கூடிய சிலர் இளைஞர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் தம் பாணியில் எடுத்துரைக்கின்றனர். பொறுமையிழந்த தமிழிளைஞர்கள் ஆயுதப்போராட்டமே விடுதலைக்கான ஒரே வழியென உணர்ந்து தமது சிந்தனைக்குரிய வழிகளைத்தேடி முன்னேறுகின்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்த தமிழ் மக்களின் உதவியுடன் ஆயுதப் போராட்டம் மெல்ல மெல்ல பரிணாமம் பெறுகின்றது. அதேவேளை ஆயுதப் போராட்டத்தை அவ்வளவு இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியாத வகையில் அப்போதிருந்த இலங்கை பொலீசில் வேலை பார்த்து வந்த தமிழ் பொலீசார் தம் திணைக்களத்தில், தொழிலில் காட்டிய விசுவாசம் முட்டுக்கட்டைகளை போடுவதாகவே இருந்தது. காட்டிக் கொடுப்புக்கள் முனைப்புப் பெறுகின்றன.
எந்த வகையிலானாலும் சரி வருகின்ற எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்துக்கொண்டே போராட்டத்தை முன்னகர்த்தவேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. தமிழ்ப்புலிகள் தமது போராட்டத்திற்கு வலு சேர்க்க பல்கலைக்கழகம் நோக்கி தம் பயணத்தை நகர்த்துகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் போராட்டத்திற்கு வேறு வேறு வழிகளில் ஒத்துழைக்கின்றனர். வீதி மறியல் போராட்டம், கதவடைப்பு, உண்ணாவிரதம் என பல வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது போராட்டக் குழுவில் அப்போது முன்னின்ற பிரபாகரன், உமாமவேஸ்வரன் ஆகியோரிடையே காதலி என்ற ரீதியில் (பின்னால் பிரபாகரனின் மனைவி மதிவதனி) ஆரம்பித்த விரிசல் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தி 1984ம் ஆண்டு விலகி செல்லும் உமாமகேஸ்வரன் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியை உருவாக்கி பிரிந்து செல்கின்றார்.

தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் பத்மநாபா ஆகியோரும் பிரிந்து செல்கின்றனர். சமகாலத்தில் க.வே.பாலகுமாரன் தலைமையிலான ஈழவிடுதலை மாணவர் முன்னணியாக ஈரோகம் உருவாகின்றது.
மக்களின் தேவை விடுதலை, நிம்மதி, அவலமற்ற வாழ்வு இவையனைத்தும் இழைஞர்களால் கிடைத்துவிடும் என்கிற பெரும் எதிர்பார்ப்பு மக்களுக்கு தமக்கு இல்லாவிட்டாலும் சரி போராடுகின்ற இளைஞர்களை ஊக்கப்படுத்த சளைக்க வில்லை. அதற்கேற்றாப்போல் வேறு இயக்கங்களாக பிரிந்த இளைஞர் குழுக்கள் தாம் தம் இலக்கிலிருந்து தவறியதாக அப்போது நினைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எவ்கெங்கு எதிர்ப்பு தாக்குதல் நடத்த முடியுமோ அங்கங்கு ஆயுத தாக்குதல்களை நடத்தி வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தனர். (புளொட் இயக்கத்தை தவிர)
சமகாலத்தில் மக்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களை பெரிதாக கவனத்தில் கொள்ளாது வேறுபாடின்றி போராடும் இளைஞர்களை ஊக்குவித்த வண்ணமே இருக்கின்றார்கள்.

இப்போராட்ட குழுக்களில் இருந்த ஒரு சில சுய நலம் கொண்டவர்களினால் தம் மக்களின் சொத்துக்களையே குறி வைத்து சூறையாடுகின்ற சம்பவங்களும் அரங்கேறுகின்றன.இந்த இடத்தில் மீண்டும் முனைப்பு பெறுகின்றது. யார் பெரியவர்? யார் மக்களுக்காக போராடுகின்றார்கள்? போன்ற கேள்விகள்.

திண்ணைவேலியில் 13 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த  LTTE  யினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். பிரபாகரனின் பெயர் விசாரிக்கப்படுகின்றது. தலைக்கு கனம் ஏறி தன்னிகரற்ற தலைமை தாமே என்பதனை காட்டும் முகமாக திரைமறைவில் நடைபெற்று வந்த சகோதர இயக்கப்படுகொலைகள் மக்களுக்கு துரோகிகளாக அடையாளம் காட்டி மக்கள் மத்தியில் மக்கள் முன்னிலையில் அரங்கேறுகின்றது. யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் முகாம் அமைத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த TELO அமைப்பைச் சேர்ந்த தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொள்ளப்பட்டனர். TELO  இயக்கம் அமைதியாகின்றது. தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாது முடமாக்கப்பட்டு தடுமாறுகிறது.

தொடர்ந்து EPRLF இயக்கத்துடன் முரண்பாடு ஏற்பட்டு பொது எதிரணியை அழிப்பதை விட இதுவே முக்கியம் எனக்கருதி EPRLF யைச் சேர்ந்த பல்வகைத் திறமைகொண்ட போராளிகள் தனியாகவும், குழுவாகவும் பல்வேறு இடங்களில் கொன்றுக்குவிக்கப்பட EPRLF யின் தலைமை போராட்டத்தை இடை நிறுத்தி போராளிகளை முதல் காப்பாற்றும் நோக்கில் இந்தியாவை நோக்கி நகர்கின்றது. இரண்டாவது ஆயுதப்போராட்ட குழுவும் தன் இறுதி நிலை நோக்கி நகர்த்தி வைக்கப்படுகின்றது. ஆனால், இந்திய அரசு EPRLF இயக்கத்தை தமக்கு சார்பாக அரவணைத்துக்கொள்கின்றது.

தொடர்ந்து வந்த காலத்தில் இலங்கை அரசுக்கும்  LTTE  யினருக்கும் இடையிலான ஒப்பந்தம் அரங்கேறுகின்றது. இந்திய இராணுவத்தின் உதவியுடன் ஓரங்கட்டப்பட்ட ஆயுதக்குழுக்கள் மீண்டும் மெல்ல தாயகம் நோக்கி வருகின்றார்கள். பொது எதிரியான இலங்கை இராணுவத்தினருடனான எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதும் சகோதர இயக்க படுகொலைகள் நின்றபாடில்லை.
சம காலத்தில் இன்னொரு முக்கிய விடயம் நடைபெறுகின்றது. EPRLF ல் இருந்த டக்ளஸ் தேவானந்தா தனக்கென ஓர் இடத்தை தக்கவைக்கும் நோக்கில் EPRLF லிருந்து பிரிந்து EPDP என்கிற இயக்கத்தை ஆரம்பிக்கின்றார். இவரின் பிரிவு காலத்தில் இலங்கையில் மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக்காலம் ஆரம்பிக்கின்றது.

பிரேமதாசாவிற்கு ஆதரவாக அறிக்கைவிட்டதுடன் இலங்கை அரசின் உதவியுடன் இவரின் தலைமையை கொழும்பு நோக்கி நகர்கின்றது. LTTE யுடனான எதிர்முனைத் தாக்குதல் கடும் உக்கிரமாக காணப்பட்டபோதும் அதற்கு முகம் கொடுத்த டக்ளஸ் தேவானந்தா இன்றும் ஏதோ வகையில் தாக்குபிடித்து நிற்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இன்னுமொரு முடக்கப்பட்ட ஆயுதக்குழு ஈரோஸ் பற்றியும் சொல்ல வேண்டும். பல்வேறு திறமைசாலிகளான போராளிகளையும் அறிவாளிகளையும் கொண்ட ஈரோஸ் இயக்கம் அச்சுறுத்தல் காரணமாக நேரிடையாக க.வே.பாலகுமாரன் தலைமையிலான ஒரு பகுதியினர்  LTTE  யுடன் இணைகின்றனர். இவர்களுக்கு ஆங்காங்கே சிறு சிறு பதவிகள் உருவாக்கப்பட்டு வழங்கி அடக்கப்படுகின்றனர்.  LTTE  யினருக்கு சவாலாக செயற்படக்கூடிய ஈரோஸ் இயக்கமும் முடக்கப்பட்டு விடுகின்றது.

ஒட்டுமொத்தமாக அனைத்து ஆயுதக்குழுக்களும் மழுங்கடிக்கப் பட்டதுடன் இன்று  LTTE  யினரின் போராட்டம் மகிந்த ராஜபக்சாவினால் மழுங்கடிக்கப்பட்டது. ஆனால் உலகநாடுகளில் விடுதலைப்புலிகளின் நாடுகடந்த போராட்ட வரலாறு தொடர்கிறது. இந்நிலையில் மழுங்கடிக்கப்பட்ட ஆயுதக்குழுக்கள் மீண்டும் தமது கைவரிசையினை அரசுக்கு எதிராக காட்டுவார்களா? என்பது இன்னமும் கேள்விக்குறியான விடயம்.

SHARE