மண் அகழ்வை முற்றாக நிறுத்துமாறு கோரி அரச அதிகாரிகளையும் கண்டித்து இன்று காலை 9 மணிக்கு மூதூர் இறால்குழியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம் பெற்றுள்ளது.

324
இறால்குழிக் கிராமத்தில் இடம்பெற்று வரும் மண் அகழ்வை முற்றாக நிறுத்துமாறு கோரியும் இந்தச் செயலுக்கு துணை போகும் அரச அதிகாரிகளையும் கண்டித்து இன்று காலை 9 மணிக்கு மூதூர் இறால்குழியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று இடம் பெற்றுள்ளது.

இறால்குழி பிள்ளையார் கோயிலில் ஆரம்பித்த இப்பேரணி மட்டக்களப்பு திருகோணமலை ஏ6 வீதி் வரை இடம்பெற்றது.

12 சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன இணைந்து இப்பேரணியிணை ஏற்பாடு செய்திருந்தன. இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறால்குழிப் பகுதியில் சட்ட விரோதமாக மண் அகழ்வு இடம்பெறுவதனால் தமது விவசாயச் செய்கை பாதிக்கப்படுவதாகவும், வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் மீன் பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மக்களால் முன் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் தாம் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபடவில்லை என்றும் அரசாங்கத்தினது அனுமதியுடனேயே இம்மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மண் அகழ்வில் ஈடுபட்டு வருபவர் கருத்துத் தெரிவித்தார்.

அதற்கான ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் நிரூபித்தார் இதேவேளை மண் அகழ முடியும் என காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப் பலகையையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் உடைத்தெறிந்தனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு ஏ6 பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் வாகனப் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு மூதூர் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர் வந்து இம்மண் அகழ்வில் ஈடுபடுவதை ஒரு வாரத்துக்குள் நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதாகக்கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கை விடப்பட்டது.

SHARE