அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னணியும், நாமல் ராஜபக்ஷவின் பிரதமர் இலக்கும்

568
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தீவிரவாதம், பயங்கரவாதம் இந்த இரண்டும் இந்நாட்டில் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுபோன்ற ஒரு வெளித்தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்களே தவிர இந்த தீவிரவாதம், பயங்கரவாதம் இரண்டையும் வைத்தே அன்றிலிருந்து இன்றுவரை தமது அரசியலை முன்னெடுத்து வருகின்றது.
காலத்தின் தேவை கருதி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய தேவை அரசிற்கு ஏற்பட்டாலும், இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டோர், விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டோர், தண்டனைகள் ஏதுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டோர் என்று பல வகையினர் இலங்கையின் சிறைகளில் இருக்கிறார்கள். குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் தீவிரமாக அமுல்ப்படுத்தப்பட்டது. இதனை உலகின் பல நாடுகளும் எதிர்த்தன. இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலமாகவே விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று இலங்கை அரசு முத்திரை குத்தினார்கள்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் அதிதீவிரமாக விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்படவேண்டும் என்று இந்தியா முடிவெடுத்தது. உலக நாடுகளுடன் பல ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டு விடுதலைப்புலிகளின் போராட்டம் திட்டமிட்டே மழுங்கடிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்களை எட்டியுள்ள இந்நிலையில் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமலுள்ளது என்பது தான் இந்த நாட்டில் மேலும் போராட்டங்கள் இன்றும் வலுப்பெறக் காரணங்களாக அமைந்துள்ளன.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பார்க்கின்றபோது, நல்ல எண்ணம் கருதி அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவருடைய பேச்சை அங்கீகரித்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையானது வரவேற்கப்பட்ட ஒரு விடயமாக இருந்தாலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வைத்து அல்லது அரசியல் கைதிகளை வைத்து ஒரு விளம்பரத்தைத் தேடுகின்ற அரசியலையே இவர்கள் மேற்கொள்கின்றார்கள் என்கிற விமர்சனங்களும் எழாமலில்லை. ஆனாலும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் மக்களும் இவ்விடயம் தொடர்பாக மிகத் தெளிவாக உள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அரசுடன் இணைந்துகொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள், தாம் வலியுறுத்தியதன் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்கின்ற ஒரு நிலைப்பாட்டினையும் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் பத்து வருடங்களுக்கு மேற்பட்ட இருவரும், ஏனைய 14 பேரும் ஏழு வருடங்களுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். இன்னமும் அரசியல் கைதிகள் அநுராதபுரம், பூசா, பல்லேகல, போஹம்பர போன்ற சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள். அதுமட்டுமன்றி மத்திய வங்கி, கொலன்னாவ, கெப்பித்திகொல்லாவ, மொரட்டுவ பஸ் சம்பவ தாக்குதல், கொழும்பு கொட்டகெனா, வெலிக்கந்த, உப்புவெளி, கட்டுநாயக்கா, அநுராதபுரத் தாக்குதல், வவுனியா யோசப் முகாம் தாக்குதல் போன்ற இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் வருடக்கணக்கில் சிறைகளில் உள்ளனர். இவர்;கள் தொடர்பில் இன்னமும் வழக்கு விசாரணைகள் இடம்பெறாமல் உள்ளது. அதனை நோ டேட் என்றும் ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதைவிடவும் மத்திய வங்கி குண்டுத்தாக்குதலில் லொறியினை கொண்டுசென்று வழங்கிய சாரதிக்குத்; தண்டனை 200 வருடங்களாகும். இவர் 2011ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். மத்திய வங்கித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கூறப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான், லொறி சாரதி நவரட்ணம் போன்ற இவர்களுக்கானத் தீர்ப்பு 600 வருடங்களாகும். இந்த மூவருக்கும் தலா 200 வருடங்கள், மொத்தமாக 600 வருடங்கள் என சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது அப்போது நாட்டில் பேசுபொருளாக மாறியும் இருந்தது. இதில் நவரட்ணம் மட்டுமே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் போஹம்பர சிறையில் இருப்பதாகவும், கண் பார்வைகள் அற்ற நிலையில் மரணமடைந்ததாகவும் கூட செய்திகள் வெளிவந்தன. உண்மை தெரியவில்லை. இது ஒரு மிலேச்சத்தனமான தீர்ப்பு என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மீதான தாக்குதல், அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதல், பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீதான தாக்குதல், ஜனக பெரேரா, முத்தலிப், ரேலங்கி மற்றும் செல்வராசா, புளொட் மோகன் இதுபோன்ற இன்னும் பல அரசியல் வாதிகளும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். பிரேமதாசா மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு ஒத்தாசை வழங்கிய குடத்தனை ரவி கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்திய ஆரூரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. மேற்கூறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலேயே இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் ஏன் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. இதைவிடவும் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த 110 போராளிகளுள் தளபதிகள், விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பானவர்கள், ஆய்வுப்பிரிவினர் என 52 கட்டமைப்புக்களுக்குப் பொறுப்பானவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியாது. பொலன்னறுவ, வெலிக்கந்த, திருகோணமலை கடற்படைத்தளம், மிகிந்தலை போன்ற பகுதிகளில் ரகசியமாக இவர்கள் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என செய்திகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சிலரின் கருத்துக்களின் படி இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள் என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆனால் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு அரசு பதில் கூறவேண்டும். அவர்களை கைது செய்து கொண்டுசெல்கின்ற ஆதாரங்களும் உள்ளது. அதிலும் 35 போராளிகளை கிடங்கு ஒன்றில் புதைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
புலிகளின் குரல் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மற்றும் விடுதலைப்புலிகள் அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ஆதாரங்களும் இருக்கின்றன.
சரி. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்று வைத்துக்கொண்டாலும் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள், மேற்படி தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் வாடும் இவர்களை இன்னமும் அரசு ஏன் விடுதலை செய்யவில்லை. இவ்வாறான நிலையில் தான் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் 16 அரசியல் கைதிகள் என்று கூறுவது ஒரு பெயரளவில் மாத்திரம் என்றே கூறமுடியும். முக்கியமான தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் பங்கெடுத்தவர்கள், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரையில் தெரியவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் பலர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த கொலைகளை அரசாங்கம் ஒட்டுக்குழுக்களைப் பயன்படுத்தி செய்து முடித்தார்கள். ஆக மொத்தத்தில் இவர்கள் ஏன் கொலை செய்யப்பட்டார்கள். எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என்கிற கேள்விக்கு அரசு பதில் கூறவேண்டும். தமிழர்களை தமிழர்களே அழித்தொழிக்கும் நடவடிக்கையாக கருணா – பிள்ளையான் பிளவை உருவாக்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வடகிழக்கில் பலியாகினர்.
ஆகவே இந்த அரசாங்கமானது விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதுடன், தமிழ் மக்களையும் இணைத்து முத்திரை குத்தியது மித் தவறான விடயம். பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என தமிழ் மக்களையும் அழித்தொழித்தது ஒரு மடத்தனமான விடயம். தற்போது அரசு எந்த பயங்கரவாதிகளைக் காப்பாற்ற நினைக்கிறது. தலதா மாளிகைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்கள் இன்று பொது மன்னிப்புடன் நடமாடித் திரிகின்றார்கள்.
நாட்டின் அடுத்த பிரதமராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவைக் கொண்டுவருவதற்கான பின்னணிகள் தான் தற்போது இடம்பெறுகிறது என்று கூறப்படுகிறது. பாரத லக்ஸமன் கொலைக்கு தண்டனை வழங்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலைக் குற்றம் தொடர்பில் வெலிக்கட, மஹர, நீர்கொழும்பு போன்ற சிறைகளில் 250க்கும் மேற்பட்ட மரண தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கவேண்டும். இவர்கள் 35 வருடங்களுக்கும் மேற்பட்டவர்கள். இவர்கள் இன்று போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். பல வருடங்களாக சிறைகளில் வாடும் கைதிகளின் மனநிலை இதனால் பாதிக்கப்படும் என்பதனை அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் மக்களது பிரச்சினைகளாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணி மற்றும் பொலிஸ் அதிகாரம், வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் இவற்றை வைத்தே தற்போதைய அரசாங்கம் அரசியலை மேற்கொள்கிறது.
பௌத்த துறவிகள் இந்த நாட்டை ஒரு பௌத்த நாடாக மாற்றியமைக்கவேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்கள். அதுபோன்று வடகிழக்கிலும் பௌத்தத்தையே நிலைநாட்டவேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற அரசையே நாம் ஆதரிப்போம் என்கிற தோரனையில் செயற்படுகின்றவர்கள் பௌத்த தேரர்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த நாட்டில் இருந்து எடுக்கப்படுமாகவிருந்தால் கிட்டத்தட்ட இந்நாட்டில் முக்கால்வாசிப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது விடுதலைப்புலிகளது தமிழினத்திற்கான நிகழ்ச்சிநிரலை அரசிற்கும் உலகிற்கும் வெளிப்படுத்துவது. ஆனால் இன்று இவர்களது நிகழ்ச்சி நிரல் தமது அரசியலை முன்னெடுப்பதும் தமது கட்சியை வளர்ப்பதுமாக மாறியுள்ளது. புலம்பெயர்ந்தவர்களது அரசியலை இந்நாட்டில் முன்னெடுக்க எ;நத தமிழ்க் கட்சிகளும் விரும்பவில்லை. கடந்த தேர்தல்களிலும் கூட விடுதலைப்புலிகள் சார்பாக போட்டியிட்டவர்களைக் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழினத்தின் ஆதரவின்றி தம்மால் தனித்து வெற்றிபெற்று ஆட்சியமைக்க முடியும் என்ற திட்டத்தில் அரசு இன்று வெற்றியும் கண்டுள்ளது. அதுமட்டுமன்றி ராஜபக்ஷ பரம்பரையின் அடுத்த வாரிசாக அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்களை பிரதமராக நியமித்து, அதன் ஊடாக தொடர்ந்தும் ராஜபக்ஷ பரம்பரை தான் இந்த நாட்டை ஆட்சிசெய்யவேண்டும் என்கிற நோக்கிலான தீவிரமானத் திட்டம் தான் இந்த அரசியல் கைதிகளின் விடுதலை என்றே பார்க்கப்படுகின்றது.
அதற்கு பொசன் தினத்தினமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டினுடைய ஜனாதிபதியும், பிரதமரும் இதுவரை பாராளுமன்றில் வலியுறுத்தாக ஒரு விடயத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ செயற்படுத்திக் காட்டிவிட்டதாக இன்று பேசப்படுகிறது. இலங்கையினது அரசியலில் 30 ஆண்டு கால வரலாற்றில் கையாளப்படாத மற்றுமொரு ராஜதந்திர நகர்வுகள் இப்போது நகர்த்தப்படுகிறது. இதன் மூலமாக புலம்பெயர்ந்தவர்களை உள்வாங்க முடியும். தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் தமது திட்டங்களையும் இலகுவாக மேற்கொள்ள முடியும். இதனை தமிழ் அரசியல் தலைமைகள் நன்கு புரிந்துகொண்டு தமது அரசியலை நகர்த்திச் செல்வது காலத்தின் கட்டாயமாகும்.
-இரணியன்-
SHARE