வில்பத்து காட்டை அழித்து குடியிருக்கவில்லை. தமது நீண்டகால பூர்வீக நிலங்களில் காடுமண்டியிருப்பதையே சுத்தம் செய்கிறார்கள்.

563

 

அண்மைய வாரங்களில் வில்பத்து காடழிக்கப்படுவதாக தென்னிலங்கை இனவாத ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரசாரங்களின் தொனி- பாரம்பரிய இயற்கைகாட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதே. வில்பத்தை அண்டிய மறிச்சுக்கட்டியில் காடுகள் அழிக;கப்பட்டு மக்கள் குடியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் வில்பத்து காட்டை அழித்து குடியிருக்கவில்லை. தமது நீண்டகால பூர்வீக நிலங்களில் காடுமண்டியிருப்பதையே சுத்தம் செய்கிறார்கள்.

131-620x330 150515161539_vilpattubikkusdemo_512x288_bbc_nocredit BBS_1_0 Wilpathu

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேறிய சமயத்தில் இந்தப்பகுதி முஸ்லீம்மக்களும் வெளியேறினார்கள். இவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இலங்கையின் பல பாகங்களிலும் அகதி முகாம்களில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர். யுத்தமுடிவின் பின்னர், மீண்டும் தமது பரம்பரைப் பூமிக்கு வந்து  மீள்குடியேறியுள்ளனர். இம் மீள்குடியேறியவர்களில் ஒரு பிரிவினரே மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி முஸ்லிம்கள்.

மறிச்சுக்கட்டி மற்றும் வில்பத்துப் பிரதேசத்தின் புவியியல் பின்னணி

 
வில்பத்து சரணாலயம்

 

வில்பத்து இலங்கையின் இரண்டாவது பெரிய இயற்கை சரணாலயமாகும். இது வடமேல் மாகாணத்தின் வடமேற்கேயும் வடமத்திய மாகாணத்தின் கிழக்கேயுமாக சுமார் 130000 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பைக் கொண்டு அமைந்துள்ளது. வில்பத்து சரணாலயத்தின் எப்பகுதியும் வடமாகாணத்தில் உள்ளடக்கப்படவில்லை. வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள இச்சரணாலயத்தையும் வடமாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் முசலிப் பிரதேசத்தையும் பிரிக்கும் எல்லையாக மோதரகம ஆறு (உப்பாறு) காணப்படுகிறது.

மறிச்சுக்கட்டி

வடமாகாணத்தில் மன்னார் மாவடத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள முசலிப் பிரதேசத்திலுள்ள 20 கிராம சேவையாளர் பிரிவுகளில் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி, முள்ளிக்குளம் ஆகியன முசலிப் பிரதேசத்தின் தெற்கே அமைந்துள்ளது. இப்பகுதியின் வடக்கே கொண்டச்சி என்ற கிராம சேவையாளர் பிரிவும், கிழக்கு மற்றும் தெற்காக மோதரகம ஆறும் (இவ்வாறே வில்பத்து சரணாலயத்தின் வடக்கு எல்லையாக காணப்படுகிறது), மேற்கே இந்து சமுத்திரமும் காணப்படுகிறது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பிரதேச மக்கள், பரம்பரை பரம்பரையாக இப்பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயம், மீன்பிடி, காட்டுத் தொழிலையே தங்களது பிரதான ஜீவனோபாயத் தொழிலாக செய்து வந்துள்ளனர். இவர்களின் விவசாயத் தொழிலை மேம்படுத்துவதற்காக 1940 களுக்கு முன்னரே வியாயடி நீர்ப்பாசனத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வியாயடி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மறிச்சுக்கட்டிக் குளம், முள்ளிக்குளம், பாலைக்குளிக் குளம் என பல குளங்கள் கட்டப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யானையைப் பிடித்து வியாபாரம் செய்துள்ளனர். இப்பிரதேச மக்கள் கண்டி தலதா மாளிகைக்கும் அன்பளிப்பாக யானை வழங்கியுள்ளதாக வரலாறு கூறுகிறது.

இலங்கையின் மிகவும் வறண்ட பகுதியான மறிச்சுக்கட்டிப் பகுதியில் சுமார் 8ஆம் 9ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்ந்து வந்த இம்மக்கள், 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி வாரத்தில் வடமாகாணத்திலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது இவர்களும் வெளியேறினர்.

இன்று இடம்பெயர்ந்த மக்கள்தான் இன்று மீள்குடியேற்றத்திற்கு தமது பிரதேசங்களிற்கு செல்கிறார்கள். உண்மையில் அவர்கள் துப்பரவு செய்யும் காணிகள் வில்பத்து சரணாலய காடுகள் அல்ல. அதன் எல்லைக;கிராமமான இவர்களின் கிராமங்கள் காடுவளர்ந்து, வில்பத்தின் தொடர்ச்சி போலாகிவிட்டது. அதை வைத்துத்தான் இப்பொழுது பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

யுத்தத்தின் முடிவில்- சுமார் 22 வருடங்களின் பின்னர் தமது தாயக பூமிக்கு இந்த மக்கள் திரும்பியபோது, அவர்கள் கிராமமும் வில்பத்தைப் போலவே ஆகிவிட்டது. மீள்குடியேறுவதாக இருந்தால் தமது பிறந்த இடங்களில் வளர்ந்துள்ள மரங்களை அழித்துத்தான் மீள்குடியேற வேண்டும் என்ற நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே, குடியிருப்புப் பிரதேசங்களிலும், விவசாய நிலங்களிலும் வளர்ந்துள்ள மரங்களை அழிப்பதற்காக அரசாங்கத்தின் உதவியைப் பெறுவதற்காக, அமைச்சர் றிசாத் பதியுதீன், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோரின் உதவியுடன் அம்மரங்களை அழித்து அதிலே குடியேறினர்.

1990 ஆம் ஆண்டு மன்னார் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி, பாலைக்குளி பிரதேசங்களிலிருந்து சுமார் 500 இற்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறினார்கள். 23 வருடங்களின் பின்னர் தற்போது அவர்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்த மக்கள் தாம் குடியிருப்பதற்கு சரியான குடியிருப்ப நிலமின்றி தவித்தனர்.

அதேநேரம், இவர்களின் மூதாதையர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மறிச்சுக்கட்டி மக்களின் 700 ஏக்கர் காணியும், மையவாடியும், முள்ளிக்குளக் கிராமமும் கடற்படை முகாம் அமைப்பதற்காக அரசாங்கத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவின் குற்றச்சாட்டு

 

ஏற்கனவே வில்பத்து சரணாலயத்தின் வடக்குப் பகுதியிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் மன்னார் எல்லையை சுத்தம்செய்து அங்கு 300 குடும்பங்கள் கூடாரங்களை அமைத்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டுக்குள் தனியான முஸ்லிம் வலயங்களை நிர்மாணிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என பொதுபல சேனா குற்றஞ்சாட்டியது.

வில்பத்து சரணாலயம் தற்போது அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில், வில்பத்து முதல் மன்னார் வரையில் எஸ்.எச் ஜாஸ்மின் சிட்டி என்ற பெயரில் பாரியதொரு வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் ரிஷாட் தலைமையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும், வீடமைப்புத் திட்டத்துக்கு முறையான அரசாங்க அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் பொது பல சேனாவின் பொதுச் செயலர் வண. குலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஜாஸிம் சிட்டியின் அமைவிடம்

ஆனால், அமைச்சர் ரிசாத்தினால் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் மன்னார் மாவட்டத்திற்குட்பட்டது. அதற்கும் வில்பத்து சரணாலயத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. இந்த வீட்டுத்திட்டம் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அவ்வீட்டுத் திட்டத்திற்கும் வில்பத்து சரணாயத்திற்கும் புவியியல் ரீதியாக எவ்விதத்

தொடர்புமில்லை.

மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளும் முசலிப் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அமைக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக அனைத்து அறிக்கைகளும் அம்மக்களிடம் காணப்படுகின்றன.

வில்பத்து சரணாலயத்தின் எல்லையில் அமைந்துள்ள பூக்குளக் கிராமம்

மறிச்சுக்கட்டி கிராமத்தின் எல்லையிலிருந்து அதாவது மோதரகம ஆற்றின் தெற்காக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வில்பத்து சரணாலயத்திற்குள் கடற்கரை ஓரமாக சிங்கள மக்களைக் கொண்ட பூக்குளம் என்ற ஒரு கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 150 இற்கும் அதிகமான குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அதேநேரம் வில்பத்து சரணாலயத்திற்கு வெளியே மக்கள் குடியிருந்த பிரதேசத்தில் மக்கள் குடியேறும்போது அப்பகுதி வில்பத்து சரணாலயத்திற்குச் சொந்தமான பகுதி என்றும், அது வன ஜீவராசிகள் நடமாடும் பகுதி எனத் தெரிவிப்பது யுத்த பாதிப்புக்குள்ளான மக்களிற்கு செய்யும் நிவாரணமா?

SHARE