
இலங்கை அரசின் செயற்பாடுகள் இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகள் வீழ்சியடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழ் அரசியல் சூழலில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதையும் ஒரு மீட்டலாக பார்த்துக் கொள்ளலாமென்று நினைக்கின்றேன். அதில் ஒன்றுமில்லை என்று தமிழர் தரப்புக்கள் அடிக்கடி கூறிவந்த மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குகொண்டது. வடக்கு மாகாண சபையில் ஆட்சியை கைப்பற்றி, அதற்கென புறபைல் உள்ளவர்களை அமைச்சர்களாக நியமித்தது. கிழக்கு மாகாண சபையிலும் அதிகாரத்தில் பங்குகொண்டது. இதேவேளை, தமிழர் அரசியல் சர்வதேச மயப்பட்டுவிட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த ஆறு ஆண்டுகளில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முன்வைத்து சர்வதேச அரங்கில் நிகழ்ந்த விடயங்கள் பலவும் தமிழரின் விவகாரமாகவே ஊதிப்பெருப்பிக்கப்பட்டன. ஆனால், அது உண்மைதானா என்பதை இப்போது தமிழர்கள் புரிந்துகொள்ள முடியும். ஜெனிவாவில் சமர்பிக்கப்பட்ட பிரேரணைகள், இவற்றின் விளைவாக மஹிந்த தலைமையிலான இலங்கை அரசு மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகள், இதன் விளைவாக சீனாவை நோக்கி இலங்கை அதிகம் சாயத் தொடங்கியது, இதனால் இந்தியாவிற்கு ஏற்பட்ட கவலைகள், இவை அனைத்தும் இணைந்து இலங்கையை ஒரு மூலோபாய போட்டியாளர்களின் களமாக உருமாற்றியமை, இப்படியாக தமிழர்களின் அரசியல் சர்வதேசமயப்படுவதாக கூறி இறுதியில் சர்வதேச நிகழ்சி நிகழ்சிநிரலில் தமிழ் மக்களின் விவகாரம் வெறும் துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்டு, இறுதியில் இன்று கவனிப்பாரற்ற ஒரு விடயமாகிவிட்டது.
இன்று ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னர் எதுவெல்லாம் பொருத்தமற்றது, நம்பிக்கயைற்றது என்று கூறப்பட்டதோ, அவற்றையே மீண்டும் நம்புமாறு அனைத்துலக தரப்புக்கள் தமிழர்களுக்குப் போதிக்கின்றன. ஏனெனில், மேற்குலகிற்கு தலையிடியாக இருந்த ஆட்சியாளர் மஹிந்த அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டார். ஆம்பத்தில் சம்பந்தன் ஜயாவிடமும் மஹிந்தவின் இறுக்கமான நிலைப்பாடுதான் இன்று தமிழ் மக்களின் அரசியலாக இருக்கிறது என்னும் பார்வையே இருந்தது. ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது அவரே இதனை கூறியுமிருக்கிறார். ஆனால் பின்னர் அவரது பார்வை திடீரென்று மாறியது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசின் ஒரு அங்கீகாரமற்ற பங்காளியாகவே செயற்பட்டு வருகிறது. அதனை தவறென்றும் இப்பத்தி கருதவில்லை. அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களின் பிரச்சினையை வெற்றிகொள்ள முடியும் என்று கூட்டமைப்பு கருதினால், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான மக்கள் ஆணையை கோரி, அதனை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், இதுவரையான கூட்டமைபின் அணுகுமுறையால் தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு சில விடயங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. நீண்டகாலமாக இழுபறிநிலையில் கிடந்த சம்பூர் மீள் குடியேற்றப் பிரச்சினை ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் இதனை தொடர்ந்து சம்பூர் அனல் மின்நிலைய விவகாரம் மேலுக்கு வரும். அதனை சம்பந்தன் ஜயா எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்?
கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பு அதிகம் இந்திய மற்றும் அமெரிக்க தலையீட்டையே தங்களின் வெற்றியாக காண்பித்து வந்திருக்கிறது. இறுதியில் கடந்த ஆறு ஆண்டுகால நகர்வுகளின் வெற்றியாக தற்போதைய ஆட்சி மாற்றத்தை கூட்டமைப்பு சுட்டுகின்றது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஒரு நாடாளுமன்ற தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்ளவுள்ளனர். இது தொடர்பில் அண்மையில் பேசிய சம்பந்தன் ஜயா, மீண்டுமொரு முறை எங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், அந்த பலத்தை கொண்டு தமிழ் மக்கள் பெறப்போகும் ஆகக் கூடிய நன்மை என்ன? அதேவேளை, 2015இல் அரசியல் தீர்வு நிச்சயம் கிடைக்கும் என்றும் அண்மையில் குறிப்பிட்டிருக்கின்றார்? அது என்ன வகையான அரசியல் தீர்வு? வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வா?
கடந்த ஆறு ஆண்டுகளாக கூட்டமைப்பின் நிலைமை இவ்வாறென்றால், கூட்டமைப்பிற்கு மாற்றான தமிழ்த் தேசிய சக்தியாக தங்களை அடையாளப்படுத்திவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாடுகளும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறு இருக்கவில்லை என்பதே எனது அபிப்பிராயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொறுத்தவரையில் தெற்கின் கடும்போக்கு நிலையும், தெற்குடன் முரண்பட்டு நிற்கும் இந்திய, மேற்குலக சக்திகளின் நலன்களும் மோதும் போது அது தமிழ் மக்களுக்கு ஒரு வியூக முக்கியத்துவத்தை கொண்டுவரும் என்னும் கணிப்பிலேயே அவர் லயித்திருந்தார். ஆனால், இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அனைத்தையும் பூச்சியமாக்கியது. கஜேந்திரகுமாரின் கணிப்பு சரி. ஆனால், அதற்கான அனைத்து கதவுகளும் தற்போது இழுத்து மூடப்பட்டுவிட்டன. மொத்தத்தில் இனி கூட்டமைப்பாலும் நகர முடியாது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாலும் நகர முடியாது. நிலைமைகளை ஆழ்ந்து பார்த்தால் கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்தல் என்னும் இலக்கு நோக்கிய அரசியல் முன்னெடுப்புக்களில் பெரிய முன்னேற்றங்கள் எதனையும் கூட்டமைப்பாலும் பெற முடியவில்லை, அதேபோன்று கூட்டமைப்பை விமர்சித்து நின்றவர்களாலும் சாதிக்க முடியவில்லை. இப்படியொரு பின்னணியில்தான் முள்ளி வாய்க்காலின் அறாவது ஆண்டு நினைவுகொள்ளப்படுகிறது.