மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மூலமே எம் இனம் உண்மையான விடுதலையை அடையும்!

327

 

வவுனியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு:
unnamed (8) unnamed (9)
மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அஞ்சலி வழமைக்கு மாறாக உணர்வுபூர்வமான நிகழ்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வரலாற்று நிகழ்விலேயே நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கின்றோம். 2009ஆம் ஆண்டு எங்களுடைய உறவுகள், நண்பர்கள், போராளிகள், குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், பெரியோர்கள், பொதுமக்கள் மரணித்த பேரவலம் நிகழ்ந்தது.
மரத்தடி நிழல்களே மருத்துவமனைகளாக இருந்த அவலம். அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்களும் தாக்குதல்களுக்கு இரையாகினர்.  காயப்பட்டவர்கள் அவர்களைச் சுமந்து வந்த உறவினர்கள் நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்  வழிகளில் மடிந்தனர்.
புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் யுத்தத்தில் இறந்த உறவுகளை நினைவுகூருவதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என பகிரங்கமாக அறிவித்தது. மறுபுறம் பொலிஸார் மூலம் நீதிமன்ற தடை உத்தரவு பெற்று  உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளை அஞ்சலி நிகழ்ச்சிகளை சுதந்திரமாக நடைபெறுவதற்கு இடமளிக்காத  பல செயற்பாடுகள் தமிழர் தாயகங்களான வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
உயிர் நீத்த எம் உறவுகளை நினைவு கூரும் நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது நெஞ்சத்தில் பொதிந்திருக்கும் கவலைகளை பகிர்ந்துகொள்ளக்கூடாது. ஊடகங்கள் இவற்றை காட்சிப்படுத்தி சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லக்கூடாது. சர்வதேசம் தமக்கு எந்தவிமான அழுத்தங்கள், நெருக்கடிகளையும் தந்துவிடக்கூடாது. பெரும்பான்மையினத்தின் வாக்கு வங்கி குறைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதாலேயே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுவதைப்போன்ற இரட்டை முகச் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
கடந்த ஐந்து வருடங்களாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்தும் மே-18 ஆத்மசாந்தி அஞ்சலிக்கூட்டங்களில் நேரடியாக நானும் பங்களிப்புகளை வழங்கியுள்ளேன். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அப்போதைய அசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர், போரில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை அஞ்சலி கூட்டங்களை முதல்தடவையாக 2010ஆம் ஆண்டு நாங்கள் வவுனியாவில் நடத்தினோம்.
சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தை அஞ்சலி கூட்டத்துக்காக நாங்கள் முற்பதிவு செய்திருந்தபோது, இராணுவ புலனாய்வாளர்கள் மண்டப உரிமையாளர்களை மிரட்டியதால் மண்டப அனுமதி மறுக்கப்பட்டது, பல்வேறு தடைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாங்கள் விரைந்து மாற்று இட ஏற்பாடுகளை மேற்கொண்டு வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்கூட்டத்தை நடத்தியிருந்தோம். அப்படியிருந்தும் நிகழ்ச்சிக்காக அச்சடிக்கப்பட்டிருந்த பதாதைகளை பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் கிழித்தெடுத்துக்கொண்டு சென்றிருந்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை, யுத்தத்தில் உயிர் நீத்த எமது உறவுகளுக்கான அஞ்சலி கூட்டங்களை கடந்த ஐந்து வருடங்களாக பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், சவால்கள், ஆபத்துகள் என்பவற்றுக்கு மத்தியில் வவுனியா பிரஜைகள் குழுவுடன் இணைந்து தொடர்ச்சியாக நடத்திவந்திருக்கிறோம்.
குறிப்பாக வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் உட்பட பல உறுப்பினர்கள்  அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். குழுவின் தலைவர் கி.தேவராசாவை நெடுங்கேணி பகுதியில் வைத்து இரும்புக்கம்பிகளினால் இனந்தெரியாதவர்கள் தாக்கினர்.  படுகாயப்படுத்தியவரை இறந்து விட்டதாக எண்ணி வயலுக்கு தூக்கி வீசிவிட்டுச் சென்றிருந்தனர். அது மட்டுமன்றி அக் குழுவின் உறுப்பினர்களின் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்த இராணுவப் புலனாய்வாளர்கள் சிவில் சமுக மனித உரிமை செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இறந்தவர்களுக்கான தேசிய துக்க நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அரசாங்கம் மற்றம் பாதுகாப்பு படையினருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அச்சுறுத்தல் விடுத்தனர். அந் நிலையிலும் இம்முறையும் ஆறாவது தடவையாக நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை நடத்தும் பிரஜைகள் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் நாங்கள் இயக்கத்தின் இளைஞர்களின் துணிவு இவ்விடத்தில் மெச்சப்படவேண்டியதொன்று.
அதேநேரம் இங்கே வருகை தந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய எழுச்சி நிகழ்ச்சிகள், மக்கள் போராட்டங்களின் போதெல்லாம் தமது பங்களிப்புகள், பொறுப்புகள் என்ன என்பதை தமது மனச்சாட்சியிடம் கேள்வி எழுப்ப வேண்டும். சீர்தூக்கி பார்க்க வேண்டும். இறுதி யுத்தத்துக்குப்பின்னர் தமிழர் புலங்களான வடக்கிலும் கிழக்கிலும்  உயிர் ஆபத்தான காலங்களில் பல்வேறுபட்ட ஜனநாயக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களை கண்டறிதல், காணி அபகரிப்புகள், வாழ்வாதார பிரச்சினைகள் என  எம்மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வேண்டி பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கத்தில் ‘மண்ணின் மகிமை’ என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது அதற்கு எதிராகவும் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினோம். யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு இராணுவ ஒடுக்குமுறைக்குள் நலிவுற்ற தருணத்தில் எவ்வாறு 2010ஆம் ஆண்டு முதல்தடவையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை வவுனியாவில் நடத்தினோமோ அதேபோன்றே காணி அபகரிப்புக்கு எதிரான முதலாவது ஜனநாயக போராட்டமும் வவுனியாவிலேயே நடத்தப்பட்டது.
இதன்போதெல்லாம் மக்கள் போராட்டங்கள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் பலதரப்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள், கெடுபிடிகள், பாதுகாப்பு பிரச்சினைகள்  காணப்பட்டன. அக்காலங்களில் ஊடகவியலாளர்களை விடவும் இராணுவ புலனாய்வாளர்களே புகைப்படக்கருவிகளுடன் வருகை தந்து ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்தார்கள். இதன்போதெல்லாம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏன் தலைமறைவாகியிருந்தார்கள் ஏன் மக்களோடு மக்களாக நிற்கவில்லை என்ற கேள்விகள் இன்றும் காணப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில்  கலந்தாலோசித்து வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்வதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு கட்சிகளினதும் பிரதிநிதிகள் ஒரு மாவட்ட குழுவையாவது கட்டமைக்க வேண்டும் என பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தோம். பங்காளிக்கட்சி தலைமைகளுக்குள் முரண்பாடுகள் பல இருந்தாலும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் மாவட்ட மட்டத்திலாவது ஒரு குழுவை கட்டமைத்து மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை நன்கு திட்டமிட்டு செயற்படுத்துவோம் என்பது தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தோம்
ஆனால் தற்போதுவரையில் அதற்கான முனைப்புக்கள் எவையுமே நடைபெறவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இவ்வாறான நிகழ்ச்;சிகளை ஒருங்கிணைத்து காத்திரமாக செய்திருக்க முடியும். இன்று நிகழ்ச்சிகளுக்கு மக்கள் குறைந்த அளவில் பங்குபற்றுகின்றார்கள் எனில் மாவட்ட அளவிலாவது நாம் இணைந்து செயற்பட தயாராக இல்லை என்பதாலேயே இந்த நிலைமை என்பதில் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வது சாலச்சிறந்தது.
இன்றைய நினைவேந்தலுக்கு  பல்வேறு கெடிபிடிகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வந்துள்ள இம்மக்கள் பெறுமதியானவர்கள். ஆயினும் எல்லா மக்களும் நடைபெற்றுள்ள போராடும், போரின் இழப்புகளோடும் ஏதோ ஓர் வகையில் தொடர்புபட்டுள்ளனர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. ஒவ்வொரு வருடமும் கெடுபிடிகளுக்கு மத்தியில் விளக்கேற்றி அஞ்சலித்து விட்டு போவதோடு மட்டும் எமது கடமைகள் நிறைவுபெற்றுவிட்டதாக நாம் கருதிவிட முடியாது. போரால் கடுமையாக காயமுற்றுள்ளவர்களுக்கு, பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்களுக்கு, தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு, காணாமல் போனவர்களின் உறவுகள் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு என்ன செய்யப்போகிறோம்? நாம் எவ்வகையில் அவர்களுக்கு உதவி செய்யப்போகின்றோம் என்ற மனத்தாகமே எங்களிடம் இருக்க வேண்டும்.
எமது கண் முன்பாகவே பல ஆயிரம் போராளிகள், குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், பொதுமக்களை  இழந்த பின்பும் கூட கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் ஐக்கியப்படாமல் நீ பெரிதா நான் பெரிதா என்ற நிலைப்பாட்டில் இருப்பது இறந்த எமது உறவுகளின் இலட்சிய நோக்கத்தை களங்கப்படுத்தும் செயலாகும். எனவே கூட்டமைப்பை ஒரு பலமான அரசியல் இயக்கமாக உருவாக்குவதே நாம் எமது உறவுகளுக்கு செய்யும் பிரதி உபகாரமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதியையும், வாழ்க்கைத்தர மேம்பாட்டையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மையான நோக்கமும், விருப்பமும் இருக்குமாகவிருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு ஒரு யாப்பின் கீழ் பலம் பொருந்திய ஒரு சக்தியாக உருவெடுக்க அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும். எனவே வாழ்க்கையில் சொல்லமுடியாத இழப்புகளையும், வலிகளையும் சந்தித்து நொந்துபோயுள்ள மக்களின் அரசியல் அபிலாசைகளோடு விளையாடாமல் நாங்கள் உண்மையாக இருப்போம். மக்களின் விடுதலைக்காக விசுவாசமாக உழைப்போம்.
புதிய அரசாங்கமும் எங்களை பகடைக்காயாக பயன்படுத்த முயல்கிறது. எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கூறினால், சிங்கள மக்கள் கோபித்துக்கொள்வார்கள். எமது மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்குமாறு கூறினால் சிங்கள மக்கள் எதிராக வாக்களித்து விடுவார்கள். இவ்வாறான மாயைகளை  கட்டியெழுப்பி இந்த புதிய அரசாங்கத்திற்கு பாதகம் வராமல் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்தே நாங்கள் அரசியல் நடத்த வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இனியும் சிங்கள மக்களின் நலனுக்காக அரசியல் செய்ய முடியாது. எமது மக்களின் உரிமை பிரச்சினைகளுக்காக, வாழ்வாதார பிரச்சினைகளுக்காக தீர்வுகோரி தீவிர ஜனநாயக போராட்டங்களை நடத்துவதற்கு நாம் அனைவரும்  ஒருங்கிணைந்து கூட்டாக வீதியில் இறங்க வேண்டும். தொய்வுறாத போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க  வேண்டும்.
எனவே அதற்காக  எங்களுடைய தனிப்பட்ட நலன்கள்  களைந்து சிவில் சமுக அமைப்புகளை பலப்படுத்தி அவற்றுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஒன்றுபட்டு நடத்துவதன் ஊடாக உண்மையான விடுதலையை வென்றெடுக்க முடியும்.

 

SHARE