புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.

343
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் இன்னமும் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதாகவும் விரைவில் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ் பேச்சாளர் தொடர்ந்து குறிப்பிடுகையில்

மாணவியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும் ஜூன் மாதம் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன் 48 மணிநேர பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இதன்பின்னர் குறித்த சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்,

மாணவி வித்யா, பலாத்காரம் செய்யப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை ஆகிய விடயங்களுடன் சந்தேக நபர்கள் குறித்த பின்னணி தொடர்பாகவும் இந்த குழு விசாரணை செய்யப்படவுள்ளது.

அதனை விட எவரேனும் சந்தேக நபர்களை காப்பாற்ற முனைந்தனரா, அவர்களுக்கு தெரிந்து கொண்டே அடைக்கலம் கொடுத்தனரா உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உள்ளடங்கியதாக பரந்துபட்ட வகையில் இந்த விசாரணை அமையும் என்றார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பதாவது சந்தேக நபர் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில் வைத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சென்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையினை ஆய்வு செய்து பின்னர் தமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையிலேயே சந்தேக நபர்களை பாதுகாக்க முனைந்தவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்கக்கோன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய நேற்று முன்தினம் இரவு இவர் யாழ். புறப்பட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

SHARE