நீர்ச்சத்து: கர்ப்பகாலத்தில் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் வழிவகை செய்யும். தொடர்ந்து தண்ணீரையே பருகிக்கொண்டிருந்தால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். அதற்கு மாற்றாக ஐஸ்கட்டியை தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது உங்களுக்கு பிடித்தமான பானத்தை குளிர்சாதனப்பெட்டியின் பிரீசரில் வைத்து அதனை ஐஸ்கட்டியாக மாற்றலாம். பின்பு அதனை தண்ணீரில் கலந்து பருகலாம். சிலருக்கு குளிர்ச்சியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று பானங்களை பருகுவது நல்லது.
முதுகுவலி: கர்ப்பகாலத்தில் முதுகுவலி உள்பட பிற உடல் வலி சார்ந்த பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும். முதுகு தண்டுவட பகுதி வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமானது. ஆகையால் எலும்பு மற்றும் முதுகுதண்டுவட சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. ஒட்டுமொத்த உடல் நலத்தை பேணவும் முதுகு தண்டு ஆரோக்கியத்தை காக்கவும் கர்ப்பகாலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
பாதாம் எண்ணெய்: சுக பிரசவமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் கர்ப்பிணி பெண் மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரிடமும் இருக்கும். அதற்கு சாத்தியமான சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். பாதாம் எண்ணெய்யையும் உபயோகிக்கலாம். கருத்தரித்து 8 மாதங்கள் கடந்த பிறகு குழந்தை வெளியேறும் பகுதியில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வரலாம். அது தசைகளை நெகிழ்வடைய செய்யும். சுகப்பிரசவம் ஆவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும்.
உள்ளாடை தேர்வு: கர்ப்ப காலத்தில் மார்பகத்தின் அளவு அதிகரிப்பது இயல்பானது. அதனால் பழைய பிராவை தவிர்த்து, அதற்கு ஏற்ற வகையிலான பிராவை தேர்ந்தெடுப்பது நல்லது. குறிப்பாக வயருடன் கூடிய பிராவை தவிர்த்துவிட வேண்டும். அவை பால் சுரப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
குறட்டை சத்தம்: கர்ப்பகாலத்தில் உடலின் சில பகுதிகள் வீக்கம் அடையும். பாதங்களின் அதன் தாக்கத்தை நேரடியாக உணரலாம். சுவாச குழாய்களிலும் அதன் தாக்கம் எதிரொலித்து குறட்டை சத்தமாக வெளிப்படும். அது இயல்பானதுதான். அதனை கட்டுப்படுத்த விரும்பும் பட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
கூந்தல் பராமரிப்பு: கர்ப்ப காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கூந்தல் பராமரிப்புக்கு போதிய நேரம் செலவிடமுடியாமல் போகும். குழந்தை பிறந்த பிறகு ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும். அதனை தவிர்க்க பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு சிறிதளவு கூந்தலை கத்தரித்து நேர்த்தியாக அலங்கரித்துவிடலாம்.
நடைப்பயிற்சி: கர்ப்ப காலத்தில் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்த வேண்டும். அது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். கர்ப்ப காலத்தில் ஒருவித சோர்வை உணரக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய முடியாவிட்டாலும் நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும். அது பிரசவம் சுமுகமாக நடைபெற உதவும்