பந்து பயிற்சி: ‘எக்சர்சைஸ் பால்’ எனப்படும் உருளை பந்தை பயன் படுத்தி பயிற்சி பெறலாம். அதனை உபயோகிப்பது முதுகு, இடுப்பு பகுதிக்கு மசாஜ் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உடல் தசைகளை தளர்த்தி இடுப்பு வலியையும் குறைக்கும். இந்த பயிற்சியை செய்யும்போது உடலை சரியாக வைத்திருக்க வேண்டும். தவறான உடல் தோரணையிலோ, பந்து நழுவும் விதமாகவோ பயிற்சி மேற்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி நிபுணரின் துணையுடன் செய்வதுதான் நல்லது.
சூடான குளியல்: வெதுவெதுப்பான நீரில் குளியல் போடுவதும், சூடான நீரில் துணியை நனைத்து உடலில் ஒத்தடம் கொடுப்பதும் இடுப்பு வலியை குறைக்க உதவும் ஆரோக்கியமான வழிமுறைகளாகும். சூடான நீரை கொண்டு ஒத்தடம் கொடுப்பது தசைகளை தளர்த்தி உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெற வழிவகை செய்யும். மூட்டுகளின் இறுக்கத்தையும் குறைத்து நிவாரணம் தரும். ‘ஹாட் பேடும்’ உபயோகிக்கலாம்.
கர்ப்பகால தலையணை: கர்ப்பகாலத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக தலையணையும் இடுப்பு வலியை குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். அவை உடல் அமைப்புக்கு இதமாக அமைந் திருப்பதால் உடல் தசைகளுக்கும் இதமளிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தை தூங்குவதற்கு ஏதுவாக இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக மோசமான உடல் தோரணை மற்றும் தூங்கும் நிலை காரணமாக பல பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள். ஆனால் கர்ப்பகால தலையணையை பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்க முடியும். இவை மகப்பேறு தலையணைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் இடுப்பு வலியைக் குறைப்பதில் முக்கிய பங்கும் வகிக்கின்றன.
மசாஜ்: கர்ப்ப காலத்தில் இடுப்பு, கீழ் முதுகு பகுதியில் மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவும். மசாஜ் செய்யும்போது தவறுதலாக உடலில் அழுத்தம் கொடுத்தாலோ, அதிகமாக அழுத்தினாலோ அது குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் மசாஜ் செய்வதாக இருந்தால் மருத்துவ நிபுணர்களின் துணையோடுதான் அதனை மேற்கொள்ள வேண்டும்.
இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது?
கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பது, ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக கர்ப்பிணி பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள். இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள். எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.