மலேசியாவுக்கு தொழிலுக்காகச் சென்று அங்கு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பெண்ணின் உடல் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பேருவளையைச் சேர்ந்த 32 வயதான சதுரிக்கா பிரியதர்ஷனி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பெண் மரணித்து சுமார் ஒன்றரை மாதத்தின் பின்னர் அவரது சரீரம் இவ்வாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது தாயார் தெரிவித்துள்ள நிலையில், குறித்த பெண் கடந்த 2019.12.30 ஆம் திகதி தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்றுள்ளார்.
அழகுசாதன நிலையத்தில் பணியாற்றுவதற்கு சென்ற குறித்த பெண்ணுக்கு, கோவிட் பரவல் நிலைமை காரணமாக இரண்டு மாதங்கள் மாத்திரமே பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. பின்னர் அவர் தொழிலை இழந்ததால், மலேசியாவில் அறிமுகமான இலங்கையர் ஒருவரின் வர்த்தக நிலையத்தில் தனக்கு பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தமது வீட்டுக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறு, பணியாற்றி வரும் போது, அவர் தனது வீட்டாருடன் அவ்வப்போது, தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், 2021 ஆகஸ்ட் 30 க்கும் பின்னர் அவரிடமிருந்து எவ்வித அழைப்பும் கிடைத்திருக்கவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் பணி இடத்திலிருந்து அறிவிக்கப்பட்டதாகவும், எனினும், தமது மகளுக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் அப்பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவரது உடல் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது சரீரம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.