இலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது-எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டு!

315

இலங்கையில் உள்ள நிலங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பு நகரிலும் ஏனைய இடங்களிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட காணிகளை இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு விற்றுத் தேவையான வெளிநாட்டு நாணயங்களை அரசாங்கம் பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர், எதிர்வரும் காலங்களில் இலங்கையர்களின் நிலங்களில் வெளிநாட்டவர்கள் தங்கியிருப்பதைக் காண முடியும் என தெரிவித்தனர்.

இதில் சில காணிகளை வழங்குவதற்கு ஐந்து உடன்படிக்கைகள் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளன என ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையம் அமைந்துள்ள காணி, சதொச அமைந்துள்ள இடம், நாரஹென்பிட்டி, தும்புள்ள மற்றும் ஒருகொடவத்தையில் உள்ள காணி போன்ற சில காணிகள் விற்கப்பட உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு  கொரோனா தொற்றை யாரும் குறை கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கே, அந்த அரசாங்கம் கடன் வாங்க வேண்டியிருந்ததால், பொருளாதார வீழ்ச்சிக்கு கடந்த அரசாங்கத்தை குறை கூற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக கடன் வாங்கிய நிதிக்கு ஈடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மற்றும் வடக்கில் உள்ள சில தீவுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

SHARE