இன்பமான வாழ்க்கை வாழ இரு பெண் குழந்தைகள்

324
இன்பமான வாழ்க்கை வாழ இரு பெண் குழந்தைகள்

இன்பமான வாழ்க்கை வாழ இரு பெண் குழந்தைகள்
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போன்று, எல்லா விஷயங் களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கம் நேர் மறையானது. இன்னொரு பக்கம் எதிர்மறையானது. சிலர் எல்லாவற்றையும் நேர்மறையாகவே பார்ப்பார்கள். சிலருக்கு எதிர்மறையாக மட்டுமே பார்க்க தெரியும். குழந்தை பிறப்பு விஷயத்திலும் அப்படிதான். திருமணமான பெண் தாய்மையடைய கூடுதலாக சில வருடங்கள் ஆகிவிட்டால், எதிர்மறையாக பேசி அந்த குடும்பத்தில் குழப்பம் நிகழச் செய்வார்கள்.

அவள் தாய்மையடைந்துவிட்டால் ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று அடுத்த சர்ச்சையை கிளப்புவார்கள். பெண் குழந்தை என்றால் அதன் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதற்கும் எதிர்மறையான சாயம் பூச முயற்சி செய்வார்கள். ஆனால் இப்போது பெண் குழந்தை பிறப்பதை பலரும் எதிர்மறையாக எடுத்துக்கொள்வதில்லை. ‘தமது குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் பெண் வடிவில் அடித்திருக்கிறது’ என்று மகிழ்கிறார்கள். அப்படி மகிழக்கூடியவர்களுக்கு கூடுதலாக ‘போனஸ்’ ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது அவர்கள் வீட்டில் கூடுதலாக இன்னொரு பெண் குழந்தையும் பிறந்தால் கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுமாம். இதை பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அந்த ஆராய்ச்சி சொல்லும் சுவாரஸ்யமான தகவல்கள் என்னவென்று பார்ப்போமா!

ஒரு வீட்டில் இரண்டுமே பெண் குழந்தைகளாக இருந்தால் அந்தக் குழந்தைகள் நெருக்கமாக வளர்வார்களாம். ஒருவருடன் ஒருவர் இணைந்து விளையாடுவார்களாம். அரிதாகத்தான் அம்மா, அப்பாவுக்கு தொல்லை தருவார்கள். போகக்கூடாது என்று தடுக்கும் மண்மேடு, புழுதியில் எல்லாம் சென்று விளையாடாமல் சமர்த்து என்று பெயர் வாங்குவார்களாம். எல்லா பெண் குழந்தைகளுமே பெற்றோரின் பாராட்டுக்கு ஏங்குவார்கள். அதனால் பெற்றோருக்கு பிடிக்காத செயல்களில் அவர்கள் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை என்கிறது அந்த ஆய்வு.

வீட்டில் பொதுவாக பெண் குழந்தைகள் அதிகமாக கூச்சல் போடுவதில்லை. அவர்கள் ஒருவரையொருவர் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்வது ரொம்ப அபூர்வம். அவசர நேரத்தில் அம்மாவிடம் செல்லமாக இருக்கும் குழந்தையை அப்பாவிடம் விட்டுச் சென்றாலும் அடம்பிடித்து அழ மாட்டார்களாம். அந்த சூழலுக்கேற்ப பெற்றோருடன் அடம்பிடிக்காமல் பிரியமாக இருந்து ஒத்துழைப்பார்களாம்.

அக்கம் பக்கத்தவர்கூட இந்த சகோதரிகளை விரும்ப தொடங்கிவிடுவார்கள் என்கிறது ஆய்வு முடிவு. இந்த குழந்தைகளின் கலகலப்பான பழக்கவழக்கங்களும், சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் குணம், ஒத்துழைக்கும் குணம் போன்றவை மற்றவர்களையும் கவர்ந்துவிடுகிறது. அதனால் சுற்றியுள்ளவர்களும் இந்த பெண் குழந்தைகளை விரும்பத் தொடங்கிவிடுவார்களாம். அந்த குழந்தைகள் மூலம் வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும் ஒரு சந்தோஷமான சூழல் உருவாகிவிட வாழ்வே வசந்தமாகிவிடுவதாக தெரிய வந்துள்ளது.

ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இரு குழந்தைகளை பெற்றவர்கள் ‘அஸ்திக்கு ஒன்று.. ஆசைக்கு ஒன்று’ என்று மகிழ்ந்தாலும் அவர்களுக்குள் அவ்வப்போது அடிதடி கலாட்டாக்கள் அரங்கேறவே செய்யும். ‘தான் ஆண் என்று ஒன்றும், பெண் என்றாலும் தான் பெருமையானவள்’ என்று இன்னொன்றும் அடிக்கடி சொல்லி மோதிக்கொண்டிருக்கும். இரண்டும் பெண் என்றால், ‘உன்னை மாதிரிதான் நானும்’ என்று இருவருக்குள்ளும் நன்றாக ஒத்துப்போகிறதாம். அது மட்டுமின்றி அவர்கள் இருவரும் ஒரே பாலினமாக இருப்பதால் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மகிழ்ச்சியின் முதலிடத்தில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற குடும்பத்தினரும், இரண்டாவது இடத்தில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பெற்றவர்களும் இருக்கிறார்கள். இதில் மூன்றாம் இடம் யாருக்கு தெரியுமா? இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு!

ஆய்வு இப்படி சொன்னாலும் மகிழ்ச்சி என்பது பாலினம் சார்ந்தது அல்ல. எந்த குழந்தையாக இருந்தாலும், வீட்டிற்கு ஒரே குழந்தையாக இருந்தாலும் வளர்க்கும் விதத்தில் குழந்தையை மகிழ்ச்சிகொள்ளச் செய்யலாம். மகிழ்ச்சி என்பது பெற்றோரிடம் இருந்தால் குழந்தைகளுக்கும் பரவும்.

SHARE