2021-ம் ஆண்டில் பிரபலமான உடற்பயிற்சிகள்

336
கொரோனா ஊரடங்கு... 2021-ம் ஆண்டில் பிரபலமான உடற்பயிற்சிகள்

ஓட்டம், சுவாசப் பயிற்சி
இரண்டு வருடங்களாக உலகை ஸ்தம்பிக்க வைத் திருக்கும் கொரோனா, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் அதிக உயிரிழப்பை சந்திக்க நேர்ந்தது.

2021-ம் ஆண்டில் இளம் வயதினர் பலர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல் நலன் மீது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணரவைத்தது.

ஆரோக்கியமான உடலையும், மனதையும் பேணுவதற்கு பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி ஆண்டாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும் 2021-ம் ஆண்டில் இருந்து விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அவை வழக்கமாக நடைமுறையில் இருந்து வரும் உடற்பயிற்சிகள்தான். அனைத்து தரப்பினரும் எளிமையாக மேற்கொள்ளக் கூடியவைதான் என்றாலும் இதுநாள் வரை அதனை அலட்சியமாக கருதியவர்கள் கூட ஆர்வமாக உடற்பயிற்சி மீது கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

2020-ம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள், ஜிம்கள் உள்ளிட்ட உடற்பயிற்சி மையங்களில் நீடித்த கட்டுப்பாடுகள் காரணமாக பலரும் வெளிப்புற பயிற்சிகளை மேற்கொண்டார்கள். 2021-ம் ஆண்டில் அதிகம் பேரால் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடற்பயிற்சிகளின் தொகுப்பு இது.

ஓட்டம்:

அன்றாட நாளை சுறுசுறுப்பாக தொடங்குவதற்கு சிறந்த வழி, ஓட்டப்பயிற்சியை மேற்கொள்வதுதான். இது வெளிப்புற பயிற்சிகளில் முதன்மையாக கருதப்படுகிறது. ஓடுவது சுவாசம் மற்றும் இதய துடிப்பை சீராக பராமரிக்க உதவும். உடல் ஆற்றலை (ஸ்டெமினா) அதிகரிக்கச் செய்யும். ஓடுவதும், ஏரோபிக் உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாக கருதப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

நடைப்பயிற்சி:

ஓடுவதை விட விறுவிறுப்பான நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த பயிற்சியின்போது கால்களின் பின் பகுதி தசைகளுக்கு போதுமான அழுத்தம் கொடுக்கப்படும். அதன் மூலம் கால் தசைகள் வலுப்பெறும். மேலும் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி இதய துடிப்பு மற்றும் சுவாசத்தில் சமநிலையை ஏற்படுத்தும். அதனால் இது ஒட்டுமொத்த உடல் அமைப்புக்கும் சிறந்த பயிற்சியாக அமைந்திருக்கிறது.

சுவாசப் பயிற்சிகள்:

கொரோனா தொற்று நுரையீரலை கடுமையாக பாதிக்கக்கூடியது. முதல் அலையை விட இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. பல உயிரிழப்புகளுக்கு காரணமானது. உடலில் ஆக்சிஜன் அளவு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி நிறைய பேர் மரணத்தை தழுவினார்கள். ஆழ்ந்த சுவாசம், ப்ரோனிங், பிரணாயாமம் போன்ற சுவாச பயிற்சிகள் ஆக்சிஜன் அளவை சீராக பராமரிக்க உதவின. அதனால் பலரும் சுவாச பயிற்சிகளில் கவனம் செலுத்தினார்கள்.

வயிற்று சுவாசம்:

‘பெல்லி ப்ரீத்திங்’ என்று அழைக்கப்படும் இந்த மூச்சுப் பயிற்சி உடல் முழுவதும் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை அதிகரிக்க உதவும். இந்த பயிற்சியை மேற்கொள்வது எளிதானது. முதலில் கால்களை மடக்கிய நிலையில் ரிலாக்‌ஸாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். பின்பு கைகளை வயிற்று பகுதியில் வைத்து அழுத்திய நிலையில் அடி வயிற்றி லிருந்து மூச்சை உள்ளிழுங்கள். அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சுக்காற்று பரவும் வகையில் 10 வரை எண்ணுங்கள். பின்பு மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். வாய் வழியாகவும் மூச்சை வெளியிடலாம். இந்த பயிற்சியை நான்கைந்து முறை செய்யுங்கள். நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் பயிற்சி இது. உதரவிதான தசையையும் பலப்படுத்தும். ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கும்போதும், முந்தைய நேரத்தை விட நன்றாக மூச்சை உள்ளிழுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நடைப்பயணம்:

இயற்கை வளங்கள், பசுமை சூழ்ந்திருக்கும் பாதைகள் அல்லது நீண்ட, வளைந்த சாலைகளில் நடைப்பயணம் மேற்கொள்வது ‘ஹைகிங்’ என்று அழைக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் பலரும் நடைப்பயணம் மேற்கொள்ள தொடங்கியதால் 2021-ம் ஆண்டில் இந்த உடல் செயல்பாடு பிரபலமடைந்தது. இந்த நடைப்பயணம் மூலம் இயற்கையுடனும், வெளிப்புறச் சூழலுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட தூரம் பயணிக்கலாம். இது உடலையும், மனதையும் ரிலாக்ஸாக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும். மலைப்பகுதிகளில் ‘ஹைகிங்’ மேற்கொள்வது சிறப்பானது.

SHARE