அரச மரம் இருக்குமிடமெல்லாம் புத்தர் சிலைகள் கூட்டமைப்பு கொட்டாவி விடுகின்றதா?

308

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் யுத்தம் முடிந்த பின்னும் நிலைகொண்டுள்ள, இன்றும் நிலைகொண்டிருக்கின்ற இராணுவத்தினரின் வழிபாட்டுக்கென அமைக்கப்பட்ட பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் உண்மையில் அவர்களின் வழிபாட்டுக்காக மட்டும் அமைக்கப்படுகின்றனவா? என ஐயுறுவது நியாயமானதே.

அன்பையும்; அகிம்சையையும் போதித்து, மனித நேயத்தை வலியுறுத்திய சாந்தசொரூபியான புத்தரின் சிலைகள் அமைக்கப்படுவது, புத்தரையோ அல்லது அவரது போதனைகளையோ பயபக்தியோடும் விசுவாசத்தோடும் பின்பற்றுபவர்களால் ஒரு சமதர்ம சமூதாயத்திலோ அல்லது காந்தி நெறியில் அமைந்த சமுதாயக் கட்டமைப்புக்களிலோ அமைக்கப்படுவதை எவருமே வரவேற்பார்கள். ஆனால் தமிழர் மனிதந்தனை, சுயமரியாதையை, அவர்களுடைய அரசியல் உரிமைகளைத் தன்னாதிக்கத்தை, இறைமையைப் பகவான் கௌதம புத்தர் அவர்களின் தர்மபோதனைகளுக்கு மாறாக மறுத்து ஆதிக்கம் செலுத்தி இலங்கைத் தீவில் தமிழர் சுத்திகரிப்புக்கு என்றோ அத்திவாரமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கின்றன.

buddha

அன்றைய பாரததேசத்தின் ஒரு பகுதியான நேபாளத்தில் அரச குடும்பம் ஒன்றில் தோன்றிய சித்தார்த்தர் என்னும் இளவரசர் அரண்மனையினுள் சகல சுகபோகங்களுடனும் வாழ்ந்து வந்தமையும், ஒருநாள் ஊர் சுற்றிவரப்புறப்பட்டுப் பின்னர் சுற்றியும் வந்தபோது எலும்பும் தோலுமான ஓர் உருவம் அவர் அருகில் வந்து யாசகம் கேட்டுக் கையேந்தியபோது, எனக்கும் ஒரு காலத்தில் இதே கதிதானா? என மனம் மிக வருந்தி, அரண்மனை வாழ்வையும்;;; மனைவி பிள்ளைகளையும் கைவிட்டுத் துறவியாகி, நாடோடியாக அலைந்துதிரிந்து மக்களுக்குத் தர்மபோதனைகளை வழங்கி ஆசிய ஜோதியாக மிளிர்ந்தார். இமயமலைச் சாரலிலே அன்னார் வீற்றிரு;தபோது இலங்கைத் தீவினால் கவரப்பட்டு அத் தீவு தொடர்பில் அதிக கரிசனையோடு ஆதங்கம் கொண்டதன் விளைவாக அவர் முத்திப் பேறடைந்த வெள்ளரச மரத்தடியின் நினைவாக அம் மரமும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுப் பௌத்த மதமும் இத் தீவில் பரவி வேரூன்றியது.

எனவே, புத்தர் சிலைகள் தமிழர் பிரதேசங்களில் அதிகரித்து வருவது தமிழர் சுயாட்சியின் அங்கீகாரத்தின் பின் இடம்பெறின் அது விமர்சனத்துக்குரிய ஒன்றல்ல. ஆனால், நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் தமிழர் தரப்பு உரிமைக் கோரிக்கைகள் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டமையும், இறுதியாக இடம்பெற்ற விடுதலை வேண்டிய ஆயுதப்போராட்டம் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டமையும் பகவான் கௌதம புத்தரின் ஆத்மாவையும் அலறவைக்கக் கூடியவையாக இருக்கும்போது, யுத்தம் முடிவடைந்த இன்றைய காலப்பகுதியில் தமிழர் பிரதிநிதிகள் தமது மக்களுடைய குறைகள் உடன் தீர்க்கப்பட வேண்டுமெனப் பல்வேறுவிதமான நெருக்குவாரங்களைக் கொடுத்தபோதும் கூட ஆளுவோர் தமிழர் குறைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல் தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பதற்கே ‘திடசங்கற்பம்’ பூண்டுள்ளார்கள்.
நிலைமை இவ்வாறிருக்க, தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ வழிபாட்டைச் சாக்காக வைத்துப் பௌத்த விகாரைகளையும், புத்தர் சிலைகளையும் படிப்படியாக அதிகரித்துவருவது, தமிழரின் பாரம்பரிய மதத்தையும் வழிபாட்டு முறைமைகளையும் சிதைவடைத்துப் பௌத்த மதத்தைத் தமிழர் பிரதேசங்களில் நிலைநிறுத்துவதற்கான சூழ்ச்சியேயெனப் புரிந்துகொள்ள முடிகின்றது. கிழக்கிலங்கையில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னரே சிங்களக்குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்களவு இடம் பெற்றுள்ளதோடு சில தமிழ் ஊர்களின் பெயர்களும் சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டிருந்தன. இவ்விடத்தில் 1965இல் ஆட்சிப்பீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகித்த ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி’ யின் சார்பில் திருச்செல்வம் அவர்கள் ஸ்தல ஸ்தாபன அமைச்சாரகப் பதவி வகித்தபோது அக்கட்சியின் எதிர்ப்பின்றியே கிழக்கிலங்கையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றமையையும் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதே.

நிலைமை இவ்வாறிருக்கும்போது யுத்தத்தின் பின்னரான வடக்குக் கிழக்கின் மயான அமைதியைக் கனிவோடு இயைந்த தமிழ் மக்களின் அமைதி வாழ்க்கையெனப் பூச்சாண்டி காட்டிப் புத்தர் சிலைகளை ஆங்காங்கே நிறுவுவது, கிழக்கில் குடியேற்றங்களை மேலும் தொடரவும், வன்னியின் பல பகுதிகளிலும் புதிய குடியேற்றங்களை அமைக்கவும், யாழ்ப்பாணத்திலும் வசதியான இடங்களில் குடியேற்ற முயற்சிகளை நிறுவுவதற்குமான முன்னேற்பாடு எனவே கருதமுடியும்.

golden-buddha-xi-an-china+1152_12906587712-tpfil02aw-26346

தற்போது மலையகத்தில் சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் சிங்கள இளைஞர்கள் தமது கிராமங்களிலிருந்து பெருந்தோட்டங்களுக்குள் உட்புகுந்து மலையகத் தமிழ் இளைஞர்களையும், மக்களையும் மிக மூர்க்கத்தனமாகத் தாக்கி வருவதையும் பொலிசார் பாராமுகமாக இருந்து வருவதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். மலையகத்தில் அடிக்கடி இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றபோதுக்கூட, அங்கே கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளாலோ, சிங்கள இடதுசாரிப் பிரமுகர்களாலோ தடுத்து நிறுத்தமுடியவில்லை. அவர்கள் தமது அரசியல் பதவி நிலையொன்றின் பாற்பட்டுப் பொலிஸ் அதிகாரிகளோடு தொலைபேசியிலும் எழுத்து மூலமாகவும் தொடர்புகொண்டுவிட்டுத் தாங்களும் இங்கே தான் இருக்கின்றோம் என முரசறிவித்துவிட்டுத் தப்பிக்கொள்கின்றார்கள். வடக்கினதும் கிழக்கினதும் புத்தர் சிலைகளின் நிர்மாணிப்பும், சிங்களக் குடியேற்றங்களோடு மலையகப் பாணியில் அமைந்த வாழ்க்கை நெறியை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் இளையோரும் விரும்பாமலேயே கைக்கொள்ளவேண்டிய அவல நிலையைத் தோற்றுவிக்கும்.

அதுமட்டுமல்ல இந்து மதம் சார்ந்த, கிறிஸ்தவ மதம் சார்ந்த, இஸ்லாமிய மதம் சார்ந்த மரபு சார் மக்கள் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதற்கும், அவர்களின் வழிபாட்டுரிமை பறிக்கப்படுவதற்கும், மதம் சார்ந்ததும், அவர்களால் தொன்று தொட்டு பின்பற்றப் பட்டு வந்ததுமான கலாச்சாரம் சீரழிக்கப்படுவதற்கும், அவர்களால் வீடுகளிலும் பொது விடயங்களிலும் கையாளப்பட்டுவரும் சகல வகையான கிரியைகளுஞ் சிதைந்து சின்னாபின்னமாக்கப்படுவதற்கும் வடக்கு, கிழக்கில் அதிகரித்துவரும் புத்தர் சிலைகள் வழிவகுக்கும் என்பது திண்ணம். உண்மையாகத் தமிழரின் சுயநிர்ணய உரிமை, காணி உரிமை, பொலிஸ் அதிகாரம் என்பவை அங்கீகரிக்கப்பட்ட நிலையில் சமத்துவக்கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நிலையில் பௌத்த விகாரைகளோ, புத்தர் சிலைகளோ அமைக்கப்படுவதை யாருமே எதிர்க்கமாட்டார்கள். எவருமே வெறுப்போடு நோக்க மாட்டார்கள். அகிம்சா மூர்த்தி, சாந்த சொரூபி, ஆசிய ஜோதி, கௌதம புத்தரின் சொரூபங்கள் வடக்கிலும் கிழக்கிலும் நிறுவப்படுவதை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் களிபேருவகை கொள்வார்கள்.

ஆனால், தற்போதுள்ள நிலையோ தலைகீழானது. யுத்தத்தில் காணமல் போனோர் தொடர்பில் தாய்மார்களும், சகோதரிகளும் அழுது புலம்பி ஆர்ப்பட்டங்களில் ஈடுபட்டபோதுங்கூட உரிய பலன் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்ப உறுப்பினர்களோடு அலைந்து திரிந்து எதுவித பயனுமே பெறமுடியாத நிலையில் மனச்சோர்வுக்கு ஆளாகியிருப்பதோடு, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளார்கள். மேலும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத நிலையில் அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் துன்புற்றுக்கொண்டும் இருக்கின்றார்கள். ஜே.வி.பி அரசியல் கைதிகள் சிங்களவர்கள் என்னும் காரணத்தினால் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்த ஆளுவோர் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் மனிதாபிமானத்துடனான அணுகுமுறைகளை மேற்கொள்ளத் தயங்குகின்றனர். யுத்தத்தின்போது உடல் அவயங்களை இழந்தும், பாதிக்கப்பட்டும், கணவன்மாரை இழந்தும், சொத்துச் சுகங்களை இழந்தும் அன்றாடச் சீவனோபாயத்துக்கே அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் அபலைகளுக்கு அபயமளிப்பதற்கு அரசினரும் அவர்களின் வடக்கு, கிழக்குச் சேவை நிறுவனங்களும் பின்னடித்துக்கொண்டே இருக்கின்றன. மிகவும் கருணையோடு இவர்களை நோக்கி ஆவன செய்ய வேண்டிய அரசினர் தமிழர் என்னும் வெறுப்பினால் இவர்கள் நலனில் அசமந்தமாகவே காணப்படுகின்றார்கள்.

வடக்கின் பல பகுதிகளிலும் இடம்பெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை, புளுபிலிம் பார்வையிடல் ஆகிய இளையோரை இழிநிலைக்கு இட்டுச் செல்லும் விடயங்களையிட்டுச் சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதும் பாராமுகமாக இருப்பதும் வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றினால் தமிழர் பொருளாதாரம் பலவீனப்பட்டும் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் அந்நியச் செலாவாணி வீழ்ச்சியடைந்தும் போகட்டும் என்னும் குறுமதியின் பாற்பட்டதுமேயாகும். அண்மையில் இடம்பெற்ற புங்குடுதீவு மாணவியின் விடயத்திலும் அவருடைய தாயார் காவற்றுறைக்குச் சென்று மகளைக் காணவில்லை, தேடித்தாருங்கள் என அவர்களிடம் முறையிட்டபோது ‘உனது மகள் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள் போய்த் தேடிப்பார்’ எனக் கூறிவிட்டு ‘ஏனோ தானோ’ என அவர்கள் கண்மூடி இருந்திருக்கின்றார்கள். ‘இவ்வாறாகத் தமிழர் என்ற காரணத்தால் அவர்கள் தாயகத்திலும் சரி வெளியிலும் சரி ஓரங்கட்டப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் வருகின்றார்கள். எவ்விதத்திலாவது அவர்கள் இழிநிலை எய்துவதை இறுமாப்போடு ஏற்று மகிழும் தன்மை ஆளுவோருக்குண்டு.

இந்நிலையில் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் புத்தர் சிலைகளும் அதிகரித்து வருவது அப்பிரதேச மக்களின் ஆரோக்கியமான சீவனோபாய நகர்வை முற்றிலும் பாதிக்குமொன்றாகத் தான் விளங்க முடியும்.
எனவே வடக்கிலும், கிழக்கிலும் புத்தர் சிலைகள் அமைப்பதைக் கைவிட்டுத் தமிழ் மக்களின் மனிதம், சுய மரியாதை, சுயநிர்ணயம் தொடர்பாக ஆட்சியாளர் உடனடிக் கவனம் செலுத்துவதற்கு முன்வர வேண்டும் முன்னதில் கவனம் எடுப்பதைத் தற்காலிகமாக இடைநிறுத்திப் பின்னதில் கவனம் எடுத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசினர் வெற்றிகரமாகத் தீர்த்து வைப்பார்களாகவிருந்தால் புத்தர் சிலைகள் வடக்கிலும் கிழக்கிலும் நியாயமான நெறியில் அமைக்கப்படுவதில் பொருளுண்டு.

இது இவ்வாறிருக்கத், தமிழர் தாயகப் பிரதேங்களில் வாழும் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார் தமக்கு இலகுவாக இருக்கும் விடயங்களில் மட்டுந்தான் எதிர்ப்பைக் காட்டி ஆரவாரஞ் செய்கின்றார்களேயொழிய, புத்தர் சிலைகள் முளைத்தல் உட்பட்ட தமிழர் வாழ்வின் அடிப்படைச் சுயமரியாதையையும் தொன்று தொட்டு இருந்து வந்த மத விழுமியங்களையும் வழிபாட்டு மரபுகளையும் சிதைத்தழித்துச் சின்னாபின்னமாக்கவல்ல அரசின் நடவடிக்கைகள் இடம்பெறும்போது வாளாவிருந்து கொட்டாவி விடுகின்றார்கள்.

தமக்கு முடிந்தவரையில் தமிழர் தாயகத்தில் மறைந்திருந்தும் கொழும்பில் வெளிநின்றும் மஹிந்த அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ‘ஊடகப்போர்’ தொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார் மைத்திரி அரசுக்குத் தமிழ் மக்களை வாக்களிக்க வைத்தமையை அவர்கள் ‘செஞ்சோற்றுக் கடனை’ எதிர்பார்த்து நிற்பதனால் மைத்திரி அரசின் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ‘ஊடகப்போர்’ கூடத் தொடுக்கப் பின்னடைந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பார் எதிர்பார்க்கும் மைத்திரி அரசின் ‘செஞ்சோற்றுக் கடன்’ மகா பாரதத்தில் கர்ணன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தது போல துரியோதனன்கள் கர்ணன்களாகி தமக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பார்கள் என எதிர்பார்த்தால் அவ்வெதிர்பார்ப்பு வெறும் பகற்கனவாகவே முடியும். அத்தோடு எதிர்வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தைக் குறி வைத்துக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரியவருக்கும் வாய் திறக்க முடியாத நிலையுள்ளது. மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாரின் கொட்டாவி விடும் தன்மை வெற்று வயிற்றின் பாற்பட்ட அனுதாபத்துக்குரியவொன்றல்ல. புளிச்சல் ஏவறையின் பாற்பட்ட ஆத்தரத்தை வரவழைக்கக் கூடியவொன்றே.

SHARE