ஜனநாயக செயற்பாடுகளை அதிகார பலத்தைக் கொண்டு தடுப்பது நல்லாட்சிக்கு அவமானம்! – சிவசக்தி ஆனந்தன்

376

எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரித்து அதில் தேரரொருவர் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் அதனை தடுத்து நிறுத்த ஜனநாயக ரீதியான முனைப்புக்களை மேற்கொண்ட எம்மக்கள் மீது பொலிஸாரும் புலனாய்வாளர்களும் அதிகார அழுத்தங்களை பிரயோகித்து அச்சத்துக்குள்ளாக்கி தடுக்க முனைவது நல்லாட்சிக்கு அவமானத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாயில் பொதுமகனின் காணியை அபகரித்து பௌத்த தோரர் ஒருவரின் துணையுடன் அதில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

Untitled-1-copy

அதனை கண்டித்தும் தடுத்து நிறுத்துவதற்காகவும் குறித்த காணிக்குச் சொந்தமான உரிமையாளரும் பிரதேச வாசிகளும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு இராணுவ கனரக வாகனங்களின் துணையோடு பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணி உரிமையாளரையும், அப்போராட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்திருந்த இரு இளைஞர்களையும் கைதுசெய்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவ்விடத்தில் கூடியிருந்த பொதுமக்களையும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

அத்துடன் போராட்டத்துக்காக அச்சடிக்கப்பட்டிருந்த பதாதைகளையும் பறித்தெடுத்து சென்றுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து இராணுவ புலனாய்வாளர்களும் மோசமான நடத்தை மற்றும் சொற்களை பிரயோகித்து பொதுமக்களுடன் கடுமையாக நடந்துகொண்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு செல்ல முயன்ற வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை பொலிஸார் செல்லவிடாது தடுத்தநிலையில் அவர் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டே அவ்விடத்துக்கு சென்றுள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துகொண்டு பின்னர் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவமோகனின் தலையீட்டினால் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பௌத்த மதத்துக்கு எதிராகவோ, புத்தருக்கு எதிராகவோ தமது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

புத்தரின் பெயரால் அபகரிக்கப்பட்டுள்ள தமக்கு உரித்துடைய காணியை விடுவிக்குமாறும், மதத்தின் பெயரால் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்துமே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது மக்களின் பூர்வீக நிலங்கள் மதத்தின் பெயராலும், இராணுவ தேவைகளுக்காகவும் அபகரிக்கப்படுகின்றமை அடிப்படை மனித உரிமைமீறலாகும். வாழ்வுரிமை பறிக்கப்பட்டுள்ள எமது மக்கள் தமக்கு நீதிகேட்டு அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை பொலிஸார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு கடுமையாக நடந்துகொண்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படாதவகையில், சமுக விரோத போக்குகளுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்த உரிமையுண்டு என்பதை அண்மையில் யாழ்ப்பாணம் – பருத்திதுறை நீதிமன்றத்தின் நீதவான் அவர்களும் கூறியிருந்தமையை இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றேன். பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கவனவயீர்ப்பு போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்து நீதியை பெற முயற்சிக்கும் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளை பொலிஸாரும் புலனாய்வாளர்களும் தடுக்க முயற்சிப்பது, நல்லாட்சிக்கு கேட்டையும், அவமானத்தையுமே விளைவிக்கும். ஊழலற்ற நல்லாட்சியை கொண்டு வருவதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறும் மைத்திரி அரசாங்கத்திற்கு எதிராக எமது மக்கள் செயற்படவில்லை.

பொலிஸாரும் இராணுவத்தினருமே நல்லாட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர் என்ற உண்மை இச்சம்வத்திலிருந்து தெளிவாகியுள்ளது. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இலங்கை குடிமகன் ஒருவரின் அடிப்படையுடைமையான தனது சொந்த நிலத்தில் வாழும் உரிமையை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடுடையவர்களாக புதிய ஆட்சியாளர்கள் காணப்படுகின்றார்கள். மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் நல்லிணக்கம், ஜனநாயகம் என்பன தொடர்ந்தும் கேள்குரியதாகவே காணப்படும்-என்றுள்ளது.

SHARE