எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

380

எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

காமுகர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரபல சட்டத்தரணிகளே காரணம். ” என்ற தலைப்பில் பூ.பிரசாந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் தினக்குரல் இவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார். அவரது கருத்தின் படி நடந்தால் பெரும்பாலும் அவரது கட்சிப் பிரமுகர்கள் அனைவருமே எப்போதோ தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.image_206

29 ஜனவரி 2006 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வாகனங்கள் மட்டக்களப்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கருணா–பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவினரால் இந்த வாகனங்கள் வெலிக்கந்தையில் வழிமறிக்கப்பட்டது. இதில் பயணம் செய்தவர்களில் ஏழு பேர் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டனர்.Batti 1

இவர்களில் ஒருவர் வட்டக்கச்சியைச் சேர்ந்த தனுஸ்கோடி பிறேமினி. இக் குழுவைச் சேர்ந்த பிரதீபன் என்றும் அழைக்கப்படும் சிந்துயன், சித்தா அழைக்கப்படும் பிரதீப்,ஜெயந்தன், குமார், புலேந்திரன், சிரஞ்சீவி, யோகன், சச்சி என்று அழைக்கப்படும் சாந்தன், ஜீவா என்று அழைக்கப்படும் திலகன் இவர்களினால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இறுதியில் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஏனையோரும் படுகொலை செய்யப்பட்டனர்.

என்று பிரபல அரசியல் ஆய்வாளர் டிபிஎஸ் . ஜெயராஜ், கருணா குழுவினர் ஒருவரை மேற்கோள் காட்டி அவர் எழுதிய “The tragic fate of TRO employees abducted by Karuna cadres“ எனும் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று இந்தச் சாத்தான் ஓதும் வேதம் ஒன்று இது.

இதற்கு முன்னர் கருணா– இனியபாரதி குழுவினரால் 2005 டிசம்பர் 7 ஆம் திகதி துரைராஜா வதனி — துரைராஜா யோகேஸ்வரி ஆகிய இரு சகோதரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வந்தாறுமூலை பலாச்சோலைக் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றது. வந்தாறுமூலையில் தற்போது புதுப்பணக்காரராக இருந்து வரும் அன்புமணி என்பவரே இப் படுகொலைகளைப் புரிந்தார்.
சமூக நலன் சார் விடயங்களை யாரும் எங்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை.” என்று சீறியெழுந்துள்ளார் ரெலோ பிரமுகர் சிறீகாந்தா.Srikathi

1990 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதியில் விஜி என்று அவரது குடும்பத்தினரால் அழைக்கப்படும் நல்லதம்பி அனுஸ்யா ரெலோ இயக்கத்தவரால் கடத்திச் செல்லப்பட்டார். ஒரு அக்கா ஒரு தம்பி இரு தங்கைகளுடன் பிறந்தவர் இவர். மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் உயர்தர மாணவியாகக் கல்வி கற்று வந்த இவர் பரதத்திலும் விளையாட்டிலும் சிறந்தவராக இனங்காணப்பட்டார். கல்லடியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தே தனது கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தார்.Batti

விடுமுறையின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு இவர் வந்து விடுவதுண்டு. அவ்வாறான சமயங்களில் ரெலோ இயக்கத்தினர் மற்றும் படையினருக்குப் பயந்து தனது நண்பியொருவரின் வீட்டில் இரவில் தங்குவதுண்டு. குறிப்பிட்ட தினம் இரவு இவரது வீட்டுக்கு வந்த காங்கேயனோடையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினரான அன்வர் ஆரையம்பதியைச் சேர்ந்த ராபர்ட் — வெள்ளையன் — ராம் ஆகிய ரெலோவினர் இவரைத் தேடினர்.

வீட்டில் இரவில் அவர் தங்குவதில்லை என்பதைப் பின்னர் அறிந்த அவர்கள் நண்பியின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். இறுதியில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குப் பின்னர் அவரைப் படுகொலை செய்து ஆற்றில் வீசினர்.

அந்தக் காலத்தில் வீதியில் பிணமொன்று எரிகின்றது என்பதும் ஆற்றில் ஒரு பிணம் மிதக்கின்றது என்ற செய்தியும் மிகச் சாதாரணம். அச் சம்பவங்களின் பின்னால் ந.சிறீகாந்தாவின் கட்சியினரே இருந்தனர் என்பதும் மூடி மறைக்கக் கூடிய விடயமாக இருக்கவில்லை. சடலமொன்று ஆற்றில் மிதப்பதாக வெளிவந்த செய்தியை அறிந்த அனுஸ்யாவின் மாமன் அழகுதுரை ஆற்றங்கரைக்கு விரைந்தார். அவரே சடலத்தை இனங்காட்டினார். பிரேத பரிசோதனை கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்பதை உறுதிப்படுத்தியது. எனினும் பாதுகாப்புப் படையினரின் மனம் இளகவில்லை. ‘ அனுஸ்யா ஒரு பயங்கரவாதி ” எனக் கூறும் ஆவணத்தில் கையெழுத்திடுமாறு குடும்பத்தினரை வற்புறுத்தினர்.

ஆனால் அதற்கு அவர்கள் இணங்கவில்லை. இந்தப் பாதகச் செயலைப் புரிந்தவர்களில் ராம் மட்டும் செட்டிபாளையத்தில் திருமணம் செய்து சுகமாக வாழ்ந்து வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் ரெலோ சார்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக இவர் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனைய மூவரும் புலிகளால் தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.

இப்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினராக விளங்கும் ஜனா என்றழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம் அப்போது பாராளுமன்ற உறுப்பினர். அவரே ரெலோவின் மட்டக்களப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக விளங்கினார். அனுஸ்யா கடத்தப்பட்டதாக அறிந்ததும் அவரது குடும்பத்தினர் ஜனாவின் அலுவலகத்துக்கு விரைந்தனர். இன்று காணாமல் போனோர் தொடர்பாக அரசு என்ன பதில் சொல்கிறதோ அதே பதில் தான் ஜனாவின் அலுவலகத்திலும் கிடைத்தது. ‘ நாங்கள் கடத்தவில்லை “இதுமட்டுமல்ல மலர் என்ற கர்ப்பிணிப் பெண்ணையும் இதே ஊரில் சுட்டுக் கொன்றனர். ஜனா–சிறீகாந்தா கட்சியினர் ஏற்கெனவே இந்தப் பெண்ணின் தந்தை தம்பிராசா வங்கிப் பணியாளரான அண்ணன் குருகுலசிங்கம் ஆகியோரையும் இவர்களே தீர்த்துக் கட்டியிருந்தனர்.Batti 2images

அது மட்டுமல்ல பிரதீஸ் (ரகு) என்ற மாவீரரின் தாய் திருமதி பூரணம்லெட்சுமி சின்னத்துரையையும் வீட்டிலிருந்து இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். துப்பாக்கி ரவை பாயும் மட்டும் அந்த ஆயுததாரிகளுடன் போராடியே உயிர்நீத்தார் இந்தப் பெண்மணி. இவ்வாறாக இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. இக் கட்சியின் பிரமுகர் சிறீகாந்தா தான் சொல்கிறார் ‘ சமூகநலன் சார் விடயங்களை எமக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை ” என்று சட்டத்தரணியான இவரால் விடுவிக்கப்பட்ட காமுகர்கள் காடையர்கள் பட்டியல் அனுமாரின் வாலைப் போன்றது.

இதில் வவுனியாவில் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் மொழிப் பிரச்சனை காரணமாக விசாரணைக்கென புளொட் இயக்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதியில் சடலமாக மீட்கப்பட்ட 16–17 வயதான சில மாணவர்களின் படுகொலை தொடர்பான வழக்கின் பிரதான குற்றவாளியான வவுனியா மாவட்ட புளொட் பொறுப்பாளரும் சூரியும் அடங்குவார். இன்று சிறீகாந்தாவின் வேதத்தையும் நாம் கேட்க வேண்டியுள்ளது. இது வேதம் இரண்டே.

சுரேஸ்பிரேமச்சந்திரன்—சிவசக்திஆனந்தன் பெயரில் வெளிவரும் உரைகள் அறிக்கைகள் தாராளம். மண்டையன் குழுவின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளர் சுரேஸ்பிரேமச்சந்திரன். பாராளுமன்றத்தில் டக்ளஸ் இவரை விழிப்பதும் இவ்வாறு தான். மட்டக்களப்புப் பொறுப்பாளர் தற்போதைய ‘ கௌரவ ” கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் சிவசக்தி ஆனந்தன்.

இந்திய இராணுவ காலத்தில் மட்டு–காத்தான்குடியைச் சேர்ந்த றிபாயா என்ற முஸ்லிம் யுவதியும் அரசடி வாசியான சுகுணா என்பவரும் சந்தேகத்தின் பேரில் இரா.துரைரத்தினத்தால் அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ( ஈ.பி.ஆர்.எல்.எவ் ) என்ற பெயருடன் இயங்கி வரும் அலுவலகமே அந்நாளில் மண்டையன் குழுவின் சித்திரவதை முகாம். அங்கு தான் இவர்கள் இருவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதற்கு அவர்களது பெயர் விசாரணை.Thurairetnam

இவ்விடயத்தை அறிந்த பிரஜைகள் குழுப்பிரமுகரான அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ எடுத்த கடும் முயற்சியின் பலனாக இந்திய இராணுவம் அந்த முகாமுக்குள் செல்ல நேர்ந்தது. அங்கு சுகுணா மட்டும் மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டார். றிபாயாவைக் காணவில்லை. என்ன நடந்தது என்பது பற்றி இன்று வரை தெரியவில்லை.

வலையிறவுப் பகுதியில் அவர் புதைக்கப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல். சுகுணா தற்போது வெளிநாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஆனாலும் அந்த நாளைப் பற்றிய கொடூர நினைவுகள் அவரை விட்டு மறையவில்லை.

றிபாயா–சுகுணா விடயத்தில் தலையிட்டதற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் வனசிங்கா உள்ளடங்கிய படுகொலை செய்யப்பட்டோர் பட்டியலில் அடக்கினார் அருட்தந்தை.

1985 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழ்–முஸ்லிம் இனக்கலவரம் ஏற்பட்டது.

படுவான்கரையில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமான பாவற்கொடிச்சேனைக்கு விரைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் சில முஸ்லிம் யுவதிகளை மாட்டுவண்டியிலும் வைக்கோற்போரின் மீதும் போட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கினர் என்பதும் வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்கள்.

யாழ்ப்பாணம் ஏழாலையில் புலிகளின் ஆதரவாளர் என ஒரு பெண்மணியைச் சந்தேகித்தனர் மண்டையன் குழுவினர். அதனை உறுதிப்படுத்த போராளிகள் போல அவரது வீட்டுக்குச் சென்றனர். லோலோ அண்ணை சாப்பாட்டுப் பார்சல் வாங்கிவரச் சொன்னார்.” என்று கூறினர்.

அந்தக் காலத்தில் லோலோவின் பெயர் பிரசித்தம். அந்த வீட்டிலோ சமையல் இன்னமும் பூரணமாக முடிவடையவில்லை. இந்த நிலையில் அடுத்த வீட்டுப் பெண்மணியை வேலிக்குள்ளால் அழைத்து சில கறிகளை வாங்கினார் அந்தப் பெண்மணி.

இருவருமாக சாப்பாட்டுப் பொதிகளைத் தயார் செய்து இவர்களிடம் வழங்கினர். அவற்றைக் கையில் வாங்கியவுடனேயே அவ்விரு பெண்மணிகளையும் சுட்டுக் கொன்றனர் மண்டையன் குழுவினர். என்ன ரசணையுடன் அந்தச் சாப்பாட்டுப் பொதிகளைச் சுவைத்தார்களோ ?

ஏனெனில் வீட்டுச் சாப்பாடு என்பது அவர்களுக்கு அக் காலத்தில் எட்டாக் கனிதானே.

ஆனந்தனோ சேமமடுவில் இருந்த குமுதன் என்ற போராளியின் வீட்டுக்குச் சென்று அனைவரையும் கைது செய்தார். அவர்களை நடத்தியே தமது முகாமுக்குக் கூட்டிச் சென்றார். காலில் செருப்புடன் அவர்கள் புறப்பட்டபோது ‘ செருப்புப் போட வேண்டாம். செருப்பைத் தலையில் பிடித்துக் கொண்டே நடவுங்கோ ” என்று கூறினார். முகாமில் நடந்த விசாரணைகள் சித்திரவதைக்குப் பின் ‘ இனி நீங்கள் சிரட்டை ஏந்தித் தான் சாப்பிடவேண்டும்.” என்று திமிருடன் கூறினார். அதாவது இனி நீங்கள் பிச்சைக்காரரின் நிலையில் தான் வாழவேண்டும் என்பதே அதன் கருத்து.Ananthan_MP1

சமாதான காலத்தில் இவர் வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சேமமடு மக்களுக்குப் போதனை செய்யப்போனார். அவ்வளவு தான் அன்று இவரால் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட குமுதனின் தம்பி கோடரியுடன் இவரைத் தாக்க முனைந்தார். ஊரவர்களால் அவரது ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கான நியாயமான காரணங்களும் இருந்தன. அதேவேளை சிவசக்தி ஆனந்தனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். ஒரு வழியாக போராளி ஞானம் அசம்பாவிதம் ஏதாவது நடைபெறாமல் பெரும் முயற்சியெடுத்து இவரைக் காப்பாற்றி வேறு வழியால் அனுப்பி வைத்தார். இன்று இவர் அறிக்கைகள் விடுகிறார். இது மூன்றாவது வேதம்.

இன்னும் என்னென்ன வேதங்களைக் கேட்க வேண்டிய அவலம் தமிழ் மக்களின் காதுகளுக்கு இருக்கிறதோ. அன்று குமுதனின் குடும்பத்தவர்களைச் சிரட்டை ஏந்தித்தான் சாப்பிடவேண்டும் என்று இவர் சொன்னார். இன்று அரசியல்வாதிகளைத் தவிர ஏனையோர் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் வாழ்கிறார்கள். இன்று சிவசக்தி ஆனந்தனுக்கும் ஜனாவுக்கும் இரா.துரைரத்தினத்துக்கும் சுரேஸ்பிறேமச்சந்திரனுக்கும் அவசரமாகத் தேவைப்படுகிறது கூட்டமைப்பின் பதிவு. இன்னும் எத்தனையெத்தனை கூத்துக்களைப் பார்க்க வேண்டியிருக்கிறதோ கடவுளே .

——- மட்டுநேசன்——-

SHARE