குழந்தையின்மையை அதிகரிக்கும் வாழ்க்கை முறைகள்…

345
குழந்தையின்மையை அதிகரிக்கும் வாழ்க்கை முறைகள்...

குழந்தையின்மையை அதிகரிக்கும் நவீன வாழ்க்கை முறை
இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச் சினைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறையே!

நவீன வாழ்க்கை எந்த அளவிற்கு நமக்கு வாழ்க்கை சூழலை வசதியாகவும், சுலபமாகவும் ஆக்கி இருக்கிறதோ, அந்த அளவிற்கு எதிர்மறை விளைவுகளையும் தந்துள்ளது.

வாழ்க்கை முறை என்று எடுத்துக் கொண்டால், நம் தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த காலத்தைப் போல அமைதியான வாழ்க்கை முறையோ சூழ்நிலையோ இன்று இல்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில், ஆண், பெண் இருவரும் பொருளாதார தேவைக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் காலம் கடந்து உறக்கத்திற்கு செல்லும் அவர்களுக்கு, இயற்கையான, இயல்பான உடலுறவு குறைய வாய்ப்புள்ளது. சில குடும்பங்களில் ஆண் வெளிநாடுகளிலும், பெண் ஒரு ஊரிலும் இருந்து கொண்டு, வருடத்திற்கு ஒரு மாதமோ, இரண்டு மாதமோ சேர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி இருக்கும் பொழுதும் குடும்ப பிரச்சினைகளை கவனிக்க வேண்டி இருப்பதால், மனஅழுத்தமான வாழ்க்கை முறைக்கே தள்ளப்படுகிறார்கள். ஆக நவீன வேகம் நிறைந்த வாழ்க்கை முறை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக ஆணுக்கும், பெண்ணுக்கும் குழந்தை பெறும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது என்பதே உண்மை.

இன்றைய நவீன உணவுப் பழக்கமும் வாழ்வு முறையைப் போலவே, துரித உணவுகளாகவும், ரெடிமேடாகவும் மாறி வருகிறது. நேரத்திற்கு ஏற்றவாறும் சீதோஷ்ண பருவ மாற்றங்களுக்கு தகுந்தவாறு உண்ணப்பட்ட நமது பாரம்பரிய உணவுமுறை, இப்பொழுது இல்லை. இயற்கையான காய்கறி, பழங்களைக் காட்டிலும் பதப்படுத்தபட்ட ரசாயனம் கலந்த உணவுகள் இன்று வழக்கத்திற்கு வந்து விட்டது. அவற்றை சமைப்பதை எளிதாக கருதுகிறார்கள். அதேபோல் உடனடியாக சமைக்ககூடிய, எண்ணெயில் பொறிக்கக் கூடிய ரெடிமேட் மசாலா, ரெடிமேட் உணவு வகைகள் போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது. மொத்தத்தில் இவ்வகை உணவு வகைகளால் ஏற்படும் உடல்பருமன், ரத்தத்தில் அதிகரிக்கும் கொழுப்பு சத்துக்களால், ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

முறையான திட்டமிடல், முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும். பெண்களுக்கு திருமண வயது 30-ஐ கடக்கும் போது, இயற்கையாகவே மையோமா என்ற கருப்பைக் கட்டி, எண்டோமெட்ரியமா ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வயது 30-ஐ கடக்கும் போது, மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். நாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. அதாவது பெண் 21 வயது முதல் 35 வயதிற்குள் கருத்தரித்தல் என்பது ஏற்ற வயதாகும். திருமணமாகி 2 முதல் 3 வருடங்களில் குழந்தைபேறு இல்லையெனில் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். தற்பொழுது அதிநவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன. அதனால் காலதாமதமின்றி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறுங்கள். அமைதியான வாழ்க்கைமுறை, இயற்கையான உணவுமுறை மற்றும் எளிய சீரான உடற்பயிற்சி இருந்தால் குழந்தையில்லா தம்பதியினருக்கு மழலை எனும் மகத்தான செல்வம் கிடைக்கும்.

டாக்டர்.டி.செந்தாமரைச்செல்வி, பாலாஜி கருத்தரித்தல் மையம்.

SHARE