மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10 நாட்களாக மூதூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

472
மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10 நாட்களாக மூதூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தையும் வைத்தியசாலைத் தேவைகளையும் கேட்டறிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் நேற்று மாலை அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.

மூதூர் வைத்தியசாலையின் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக வைத்தியசாலை வளாகத்தை சுற்றி பார்வையிட்டதுடன், வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி வைத்தியசாலைக்குத் தேவையாக இருக்கும் வைத்தியர்கள், தாதியர்கள், பணியாட்கள் பற்றாக்குறை  உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வைத்தியசாலையில் இருந்தவாறே கிழக்கு மாகாணசபை ஆளுனர் ஒஸ்றின் பெர்ணாண்டோ மற்றும் வைத்தியசாலை சம்மந்தப்பட்ட முக்கிய அதிகாரிகளுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்குறித்த விடயங்களை எடுத்துக்கூறியதுடன் அதற்கான தீர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மூதூர் வைத்தியசாலை பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் தன்னிடம் முறையிட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர்,

சகலரின் கோரிக்கையாகவும் இவ்வைத்தியசாலையை சரியான முறைக்கு, நோயாளர்களின் தேவைகளை சரியாக கவனிக்கக் கூடிய வகையில், சகல நடவடிக்கைகளும் அமைய வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ளப் போவதாக முதலமைச்சர் அங்கிருந்த பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

மேலும் கடந்த 10 நாட்களாக வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த மக்களைச் சந்தித்து போராட்டத்தை உடனே கைவிடுமாறும் உங்கள் கோரிக்கைகளை உடனே நிவர்த்தி செய்கிறேன் என்றும் முதலமைச்சர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களின் போராட்டத்தை நிறுத்திவிட்டு கலைந்து செல்வதாக முதலமைச்சரிடம் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

மூதூரில் இருக்கும் இவ்வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை என்ற  பெயரில் இருந்தாலும் இவ்வைத்தியசாலையின் அடிப்படை வசதிகள் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக அதனை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன் நோயாளர்களுக்கான கட்டில்கள் மற்றும் கட்டிடங்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன் அவைகளை சரியான முறையில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், குறிப்பிட்ட அதிகாரிக்களைப் பணிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததுடன்,

இவ்வைத்தியசாலை விடயத்தில் அவசர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி லாஹீர், ஆர்.எம்.அன்வர், தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் வாதிகள், ஊர் அரசியல் முக்கியஸ்தர்களும் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கமையவே இன்று வைத்தியசாலைக்கு நேரடி விஜயம் மேற்கொண்டதாக முதலமைச்சர் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE