போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மாளிகாவத்தை மூதாட்டிக்கு ஆயுள்தண்டனை!

485

போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல்மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த மூதாட்டி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட மூதாட்டி, ஒரு வருடமும் எட்டு மாதமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு மேல் நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரியவினால் நேற்று (10) வழங்கப்பட்டது.

இதன்போதே மூதாட்டிக்கு கடுழிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மாளிகாவத்தை, கெத்தாராம பிரதேசத்தைச் சேர்ந்த சம்சூதீன் சம்சூன் நைமா என்ற மூதாட்டிக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் மூதாட்டிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மூதாட்டியின் தங்கையின் மகள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை நிறைவின் பின்னர் ஊடகவியலாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த குறித்த மூதாட்டியின் தங்கையின் மகள் குறிப்பிடுகையில்-

‘எமது எதிர் வீட்டார் வெளியே செல்லும்போது சாவியை எமது வீட்டில் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் பெரியம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். இதன்போது வந்த பொலிஸார் முன்வீட்டில் யார் இருக்கின்றனர் என்று விசாரித்துள்ளனர். அவர் யாரும் இல்லையெனக் கூறியுள்ளார். எனினும் சாவி இருப்பதாகக் கூறியுள்ளார்.

சாவியை எடுத்துச் சென்ற பொலிஸார் முன் வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போதே போதைப் பொருள் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்திலேயே பெரியம்மாவும் கைதுசெய்யப்பட்டார். பெரியம்மாவிற்கு சில நேரம், சில விடயங்கள் நினைவில் இருப்பதும் இல்லை’ என்றார்.

எவ்வாறாயினும், தண்டனை அளிக்கப்பட்ட குறித்த மூதாட்டி சிறை அதிகாரிகளினால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.Mother

SHARE