அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு அமுல்படுத்த வேண்டும் என 18 சிறுபான்மை, சிறிய கட்சிகள் நேற்றுக் கூடித் தீர்மானம்

377

 

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு அமுல்படுத்த வேண்டும் என 18 சிறுபான்மை, சிறிய கட்சிகள் நேற்றுக் கூடித் தீர்மானம் எடுத்துள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜில் கூடிய சிறுபான்மை, சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி முடிவை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் சிறுபான்மை உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உட்பட மேலும் பல சிறிய கட்சிகள் கலந்துகொண்டன. இந்தச் சந்திப்பு 3 மணித்தியாலங்கள் நீடித்தது.

epdpnews10464376_790127114389580_480549840706533824_n_14779 meet partys v0621

 

பின்னர் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சியினர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் இருந்து சிறுபான்மை கட்சிகளுடன் கூடித் தீர்மானித்த தேர்தல் முறைமையை சமர்ப்பிக்கவில்லை. அதனை மூடி மறைத்து விட்டு புதிய தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்த முயல்கின்றனர். இதற்கு ஒருபோதும் சிறுபான்மைக் கட்சிகள் இடமளிக்கப் போவதில்லை. எனவே, புதிய தேர்தல் முறைமையில் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளை உள்ளடக்க வேண்டும் என்பதுடன் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும்.

அந்த இரண்டு வாக்குகளையும் அவர்கள் விரும்பும் கட்சிக்கும், விரும்பும் நபருக்கும் அளிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி நிறைவேற்றப்பட்ட அறிகையின் பிரதிகள் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்படும்” – என்றனர். இங்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய தேர்தல் முறைமை மூலம் சிறுபான்மைச் சமூகத்தினரை பரிசோதித்துள்ளனர்.

இந்தத் தேர்தல் முறைமையை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வழங்கிய யோசனைகளுடன் உருவாக்கப்பட்ட தேர்தல் முறையை மூடி மறைத்துள்ளனர். இன்று 18 கட்சிகள் கூடி ஒரு ஒருமித்த தீர்மானத்தை எடுத்துள்ளோம் அதாவது 225 நாடாளுமன்றத் உறுப்பினர்களுடன் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் 160 உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படியும், 40 உறுப்பினர்கள் பல் அங்கத்தவர் முறை மூலம், 25 அங்கத்தவர்கள் தேசிய பட்டியல் மூலம் தேர்தெடுக்க வேண்டும் என்பதுடன் வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அத்துடன் இரட்டை வாக்கு வழங்கும் தேர்தல் முறைமை என்பது புதிய தேர்தல் முறை அல்ல. இவ்வாறான தேர்தல் முறைமை பல ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்டுகின்றன” – என்றார். தொடர்ந்து இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், “இன்று 18 அரசியல் கட்சிகள் அவசரமாகக் கூடி தேர்தல் சீர்திருத்தம் பற்றி தீவிரமாகஆராய்ந்திருக்கின்றோம்.

அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபுதிய தேர்தல் திருத்தச் சட்டநகல் மற்றும் அதில் அடங்கியுள்ளஅம்சங்கள் குறித்தும் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற புதிய வரைவை நாம் இன்று (நேற்று) வியாழக்கிழமை ஆராய்ந்தபொழுது, வாக்காளர்கள் இரண்டு வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்பட்டால் ஒழிய புதிய தேர்தல் முறையை நாங்கள் ஆதரிக்கமுடியாது என்ற தீர்க்கமான தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம். அதுபற்றி 18 சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதிதுவப்படுத்தும் கட்சிகளும், சிறியகட்சிகளும் ஓர் அறிக்கையை ஊடகங்களினூடாகவிடுகின்றோம். நாளை (இன்று) நடைபெறம் அமைச்சரவையில் இது பற்றிப் பேசுவதற்கு எங்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒருதேர்தல் தொகுதிக்கு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுகின்றபோது வெற்றி பெறுகின்ற வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கின்ற அடிப்படையில் வாக்குகள் வழங்கப்படுகின்ற ஒரு சூழல் இருக்கின்ற காரணத்தினால், பெரிய கட்சிகளுக்கு வாய்ப்பானதொரு சூழல் விகிதாசாரமுறையில் மாவட்ட ரீதியாக கணக்கெடுக்கப்படுகின்றபோது தொகுதிக்கு வழங்குகின்ற வாக்குகளை மாவட்டத்திற்கும் ஏற்புடையதாக மாற்றுகின்றபோது ஆசனங்கள் பாரிய சிறுபான்மையினங்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் பாதகமாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. இதே தேர்தல் முறைமை நடைமுறையிலுள்ள பல நாடுகளில் இரட்டை வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனை உதாசீனம் செய்து அதற்கு இடமளிக்க முடியாதென அடம்பிடிக்கின்ற பிரதான கட்சிகளுக்கு நாங்கள் எங்களது விசனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இதற்கோர் உடன்பாடு எட்டப்படாத நிலையில் புதிய தேர்தல் முறையை நாங்கள் ஆதரிக்க முடியாது எனத் திட்டவட்டமாக எழுத்து மூலம் எங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றோம். ஆசனங்களின் எண்ணிக்கை கூட்டுப்படுவது, குறைக்கப்படுவது சம்பந்தமான விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற சர்ச்சை குறித்து எங்களுக்கிடையிலும் கருத்து முரண்பாடுகள் உண்டு. நாங்கள் இந்த அடிப்படை விடயம் சம்பந்தமாக எங்களது ஒருமித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அவை பற்றி பேசலாமென்று நாம் எண்ணுகின்றோம்

SHARE