கீழைத்தேசவியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கீழைத்தேசவியல் சிந்தனைகளை மேலைநாடுகளுக்குக் கொண்டு சேர்த்தவர்களில் வில்சன் குறிப்பிடத்தக்கவர். பிரித்தானியரான இவர் 26ம் திகதி செப்ரெம்பர் மாதம் 1786இல் இலண்டன் மாநகரில் பிறந்தார். SOHO SQURE இல் தனது பாடசாலைக் கல்வியை தொடர்ந்தார். இவர் இளமைப்பராயத்திலிருந்தே உலோகவியல் மற்றம் நாணய வார்ப்புத் தொழில் நுணுக்கங்களை அறிவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1804இல் மருத்துவக் கற்கைக்குத் தெரிவான வில்சன் சென்.தோமஸ் (St. Thoma’s) போதனா வைத்தியசாலையில் இக்கற்கை நெறியைத் தொடர்ந்தார்.
1808இல் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியில் இணைந்து உதவி மருத்துவ சத்திரசிகிச்சை நிபுணராகக் கல்கத்தாவுக்கு வருகை தந்தார். இவர் கல்கத்தா நாணயத்தயாரிப்பு நிலையத்திலும் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் வில்சனுக்கு கோல்புறூக்கின் தொடர்பு ஏற்பட்டது. கோல்புறூக் இந்துக் கற்கைகள் புலத்தில் மேற்கொண்டிருந்த ஆய்வுகள் வில்சனை வடமொழியைக் கற்றுக் கொள்வதற்கான ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது வில்சனின் ஆர்வத்தையும், திறமையையும் கண்டு கோல்புறூக் அவரை மேலும் உற்சாகப்படுத்தினார்.
‘மொழிகளின் தந்தை’ எனப்பட்ட சமஸ்கிருதத்தை குறுகிய காலத்தில் கற்றுக் கொண்டார். வில்சன் இந்திய மக்களுக்கு ஆங்கில மொழி மூலமான பாடபோதனையினை மேற்கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றார். மனிதர்களினுடைய சமய பண்பாட்டுணர்வை மழுங்கடிக்கச் செய்து இந்திய உடலையும், ஆங்கிலேய மனதையும் கொண்ட மனிதர்களாக மாற்றிவிடும் என்பதனை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உரத்து உபதேசித்தார்.
கல்கத்தாவில் பொது அறிவுறுத்தல் செயலாளராகவும் கடமையாற்றிய H.H.வில்சன் அங்கே இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து அங்குள்ள கற்கைநெறிகளை முறைமைப்படுத்துவதில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். 1811இல் வங்காள ஆசியக்கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட H.H.வில்சன் ஆசியக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் இந்திய நிர்வாகத்தினால் 1819இல் வில்சன் காசிக்கு அனுப்பப்பட்டார். சமஸ்கிருதக் கல்விக்கும், இந்துசமய நடைமுறைகளுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகிய காசி இவரின் வசிப்பிடமாயிற்று. காசியிலிருந்த வடமொழிக் கல்லூரியொன்றை புனரமைத்த வில்சன் காசியிலிருந்த ஆளுமையிற் சிறந்த வடமொழிப் பண்டிதர்களோடு நெருக்கமான நட்புறவைப் பூண்டிருந்தார். காசியில் தங்கியிருந்த காலப்பகுதியிலேயே ‘இந்து நாடக அரங்கம்’ (Select Specimens of the Theatre of the Hindus) என்ற தனது புகழ் பெற்ற நூலுக்குரிய தரவுகளைச் சேகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வில்சன் 1832 வரை இந்தியாவிலேயே வாழ்ந்து வந்தார். 1832ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே அவரை ஒக்ஸ்பேட் (Oxford) பல்கலைக்கழகம் வடமொழிக்கான போடன் பேராசிரியராகத் தெரிவு செய்தது. பதவியினை ஏற்றுக் கொள்வதற்காக இங்கிலாந்து பயணமாக ஆயத்தமான வில்சனுக்கு வடமொழிப் பண்டிதர்கள் பிரியாவிடை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 1836ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலண்டனிலுள்ள புகழ்பெற்ற இந்தியா ஹவுஸ் (India House) எனப்படும் நூலகத்தில் இந்தியப் பண்பாடு தொடர்பான ஆவணங்கள், சுவடிகள் மற்றும் நூல்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கான தலைவராக நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் வில்சன் நீண்டகாலமாய் சிறுநீரகக் கல் அடைசல் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார். ஓயாது பணியாற்றிய வண்ணம் இருந்த வில்சன் சத்திரசிகிச்சையினைத் தள்ளிப்போட்டபடி இருந்தார். இறுதியில் இதன் காரணமாகவே 1860 மார்ச் 18ஆம் திகதி காலமானார். வில்சன் அவர்களது ஆக்க முயற்சிகளாக 1813ஆம் ஆண்டிலே காளிதாசரின் உணர்ச்சி பொங்கும் காவியமான மேகதூதத்தினை Meghaduuta அல்லது Cloud – Messenger எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்துக்களின் மதப்பிரிவுகள் என்ற அவருடைய புகழ் பெற்ற நூற்றொகுதியின் பல்வேறு இடங்களில் இந்துசமயத்தின் பல்லினத் தன்மையையும், பல்வகை நம்பிக்கைகளையும் பற்றி ஆழமாக நோக்கப் பெற்றார்.
வில்சன் இந்தியாவின் பண்டைய மொழி மற்றும் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வில்சனின் ஆயுட்காலச் சாதனையாகக் கருதத்தக்கது ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை ஆகும். அவர் இந்தியாவிலிருந்து ஒக்ஸ்பேட் நோக்கிப் புறப்படுவதற்கு முன்பாகவே இம்மொழி பெயர்ப்பினைப் பூர்த்தி செய்திருந்தார். அவர் E.B.கோவெல் (Cowell) எழுதிய கடிதத்திலிருந்து இதனை அறிய முடிகின்றது. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட வில்சன் முழுமையாக பிரசுரிக்காமலே மரணத்தைத் தழுவினார். 1850இல் ஆரம்பித்த வெளியீட்டுப்பணி 1860இல் வில்சன் இறக்கும் வரையில் அரைவாசிக் கட்டத்தையே தாண்டியிருந்தது. இப்பணியினை முழுமையாக பூர்த்தி செய்த பெருமை வில்சனின் முதல் மாணாக்கருள் ஒருவராகிய E.B.கோவெல் (Cowell) அவர்களையே சாரும். இருக்கு வேத மொழிபெயர்ப்பு ஆறு பெரும் தொகுதிகளாக வெளிவந்தது. வேதவிற்பன்னரான சாயனரின் உரைவிளக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வில்சன் இதனை மொழிபெயர்ப்பு மேற்கொண்டிருந்தார்.
வைத்தியரான வில்சன் இந்துக்களின் ஆயுர்வேதப் பனுவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். வில்சன் கொள்ளை நோய், வெண்குஷ்டம் ஆகியவற்றுக்கான ஆயுர்வேத சிகிச்சை முறைகளின் ஆய்வுகளில் ஈடுபட்டார். இவை பற்றி கல்கத்தா மருத்துவ மற்றும் பௌதிக கழகத்தினூடான வெளியீடுகளில் கட்டுரைகள் வந்தன. இந்து மதம் தொடர்பிலும் இந்திய அறிவியல் பற்றியும் வில்சன் கொண்டிருந்த உயர்வான நிலைப்பாட்டினைப் பின்வரும் உரைப்பகுதி முன்னிறுத்தியுள்ளது. ‘மருத்துவமாக இருந்தாலும் வானியல் மிகச்சிறப்பாக உணர்ந்து கொண்டு ஏனைய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்குச் சமாந்தரமாக இந்துக்களின் அறிவியலும் வளர்ச்சி பெற்றிருந்தது. நாம் அறிந்த வரையில் புகழ்பெற்ற எந்த நாடுகளுக்கும் இணையான விதத்தில் மருத்துவத்திலும், சத்திர சிகிச்சை முறைகளிலும் இந்துக்கள் ஒரு பூரணமான தேர்ச்சியினைப் பெற்றுள்ளார்’. மகாபுராணங்களினதும், கதாசரித்திர சாகரம் என்னும் நூலினதும் சுருக்க உரைகளும் வில்சனால் எழுதப்பட்டன.
புராணங்கள் உள்ளடங்கல்கள் மற்றும் இயல்பு பற்றிய குறிப்பு (Puranas : An account of their contents and Antiquity) என்ற நூல் வில்சனின் மரணத்தின் பின் 1897இல் வெளிவந்தது. புராணங்களின் தொன்மையும் சமயவியலும் (Theology and Antiquity), புராணங்களின் எண்ணிக்கை (The number of Puranas), புராணங்களின் சாரம் (Synopsis of the Puranas), உப புராணங்கள் (Upapuranas), விஷ்ணு புராணம் பற்றிய குறிப்பு (An Account of Vishnupuranam) என ஐந்து இயல்களில் இந்துக்களின் பௌராணிகமரபு பற்றிய ஆழமான தரிசனத்தை இந்நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. விஷ்ணு புராணமானது வில்சன் பௌராணிக மரபில் ஆய்வினை மேற்கொண்ட புராணமாகக் காணப்படுகின்றது. இது ஆங்கில மொழிபெயர்ப்பாக காணப்பட்ட போதிலும் ஐந்து தொகுதிகளாக 1840ஆம் ஆண்டில் இந்நூல் வெளிவந்தது.
மக்கன்சி ஆவணத்திரட்டு (M ackenzie Collection) எனும் செயற்பாட்டில் வில்சன் மிகவும் முக்கிய பதவியை வகித்தார். கேணல் கொலின் மக்கன்சி அவர்களால் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட இந்தியச் சுவடிகள், கலைப்பொருட்கள், தொல்பொருட்சின்னங்களே மக்கன்சி ஆவணத்திரட்டு என அழைக்கப்படுகின்றது. இத்தகைய சேகரிப்புப் பொருட்கள் தொடர்பிலான விரிவான விவரணக் குறிப்புக்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்றும் 1828ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதற்கு வில்சன் இணை ஆசிரியராக பணியாற்றினார். இவ் ஆவணம் எட்டு மிகப்பெரிய தொகுதிகளாக வெளிவந்தது. இவற்றில் 528க்கும் மேற்பட்ட சுவடிகள் வில்சனால் சேகரிக்கப்பட்டன. வேதங்கள், வேதாந்தம், நியாயம், மீமாம்சை, சாங்கியம், தந்திரங்கள், தர்மசாஸ்திரங்கள், புராணங்கள், மருத்துவம், வானசாஸ்திரம் ஆகியவை தொடர்பிலான சுவடிகள் வில்சனுடைய பெருமுயற்சியால் கிடைக்கப் பெற்றவையாகும். 1837ஆம் ஆண்டு சாங்கிய காரிகையை மொழிபெயர்த்து இலண்டனில் வெளியிட்ட வில்சன் இந்துசமய அறிவுப்புலம் தொடர்பில் பல்வேறு கல்விப்புலங்களிலும் நிறுவனங்களிலும் தான் ஆற்றிய விரிவுரைகளை நூலுருவில் வெளிக்கொணர்ந்தார். இந்துக்களின் சமய மற்றும் தத்துவ அமைப்புக்கள் பற்றிய விரிவுரைகள் (Lectures on the Religious and Philosophical Systems of the Hindus) என்ற தலைப்பில் அமைந்த இந்நூல் 1840இல் வெளிவந்தது.
ராஜதரங்கினி முதலிய புராதன இந்து வரலாற்று மூலங்களையும், கர்ணபரம்பரைச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு 1860ஆம் ஆண்டு காஷ்மீரின் இந்து வரலாறு (The Hindu History of Kashmir) என்ற வரலாற்று நூலை வெளியிட்டார். எண்ணாயிரம் வலையிலான சுலோகங்களையுடைய கல்ஹணரின் ராஜதரங்கினி மற்றும் ஜோனராஜ் சிறிவாச, பிரஜ்யாபட்டா, சுகர் ஆகியோரின் சம்ஸ்கிருதப் பனுவல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் வரலாற்றை இந்து வரலாறாகவே பதிவு செய்திருக்கும் வில்சன் அக்பரின் ஆக்கிரமிப்புக்கு முன் காஷ்மீர் பிராந்தியத்தின் நிலைப்பாடு தொடர்பில் மௌனம் சாதித்த முகலாய வரலாற்றாசிரியர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளமையும் நோக்கத்தக்கது ஆகும். இந்நூலின் பின்னிணைப்பில் காஷ்மீரில் நாகர்களின் பாம்பு வழிபாடு, கௌரவர்களின் வம்சவரலாறு, ஜராசந்தனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம், யுதிஷ்டர் வாழ்ந்த காலம், காந்தார அரச வம்சம், காந்தாரி பற்றிய குறிப்புக்கள் என மகாபாரதக் கதைச்சம்பவங்களைத் தகுந்த வரலாற்றுக் கோவைகளாக்கி விவரித்துச் செல்லும் பாங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.
1819ஆம் ஆண்டில் வில்சனால் வெளியிடப்பட் வடமொழி ஆங்கில அகராதி பிற்காலத்தில் ருடால்ப் ரோத் (Rudolp Roth) மற்றும் வொன் போட்லிங் (Von Bohtlingk) போன்றோரால் வெளியிடப்பட்ட அகராதியினைக் காட்டிலும் சுருக்கமானதாயினும் பிற்கால வடமொழி – ஆங்கில அகராதிகளுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்தது என்ற வகையில் வில்சனின் அகராதிப்பணியும் காத்திரமானதே ஆகும். ருடால்ப் ரோத் (Rudolp Roth), வொன் போட்லிங் (Von Bohtlingk) ஆகியோர் தமது மகத்தான வடமொழி – ஆங்கில அகராதியின் முன்னுரையில் வில்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
வில்சனுடைய மற்றுமொரு பயன்மிக்க நூல் ‘இந்துக்களின் சமயப்பிரிவுகள்’ என்ற புகழ்மிக்க (Religious Sects of the Hindus) பனுவலாகும். இந்துக்களிடையே நிலவும் உட்சமயப்பிரிவுகள் மற்றும் அவற்றின் வடிவங்களை மிக விரிவாக அலசுகின்ற இப்பனுவல் இந்துசமயம் பற்றி ஆய்வு செய்ய முற்படுவோருக்கான தரவுச் சுரங்கமாக விளங்குகின்றது. இதனுடைய முதலாம் பகுதியில் பிரம்ம சம்பிரதாயம் எனப்படும் மத்துவாசாரிய வேதாந்தம் முதற்கொண்டு வங்காள வைணவம் ஈறாக இருபத்து மூன்று பிரிவுகள் பேசப்பட்டுள்ளன. நாகவழிபாடுடையவர்கள், வல்லபிகள், கபீர்பந்தர்கள் முதலிய பிரிவினரையும் இப்பகுதியில் வில்சன் பதிவு செய்துள்ளார். இரண்டாம் பகுதியில் அகோரிகள் முதற்கொண்டு யோகிகள் ஈறாக முப்பத்தெட்டு வழிபாட்டுப் பிரிவுகள் வில்சனால் ஆராயப்பட்டுள்ளன. இந்நூலானது 1828இல் ஆசியக் கழக ஆய்வுகளின் XVI – XVII தொகுதிகளாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் :-
பிரதீபா சிவபாலன்.
இந்துநாகரிகத் துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.